2024 Kovai Rewind: மேயர் ராஜினாமா, மோடி விசிட், அன்னபூர்ணா GST, அண்ணாமலை சாட்டைய...
Vijayakanth: விஜயகாந்த் நினைவு தினம்; கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பிரேமலதா; தலைவர்கள் அஞ்சலி!
நடிகரும், தே.மு.தி.க கட்சியின் நிறுவனருமான விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தே.மு.தி.க தலைவரின் நினைவிடத்துக்கு கோயம்பேடிலிருந்து பேரணி செல்ல தே.மு.தி.க-வினர் திட்டமிட்டனர். ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது. இதனால் சற்று நேரம் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. அதன்பிறகு, தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தொடங்கி தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் அக்கட்சியின் தொண்டர்கள் கால்நடையாக சுமார் 45 நிமிடங்கள் நடந்து தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வந்தனர்.
அதைத் தொடர்ந்து தீப்பந்தத்துடன் விஜயகாந்த் நினைவிடத்துக்குச் சென்ற பிரேமலதா, விஜயகாந்த்தின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ட்ரோன் மூலம் மலர்கள் தூவப்பட்டது. அதன்பிறகு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா நடிகர்கள் தொடர்ந்துவந்து மரியாதை செலுத்தினர்.
நடிகர் விஜயகாந்த் குறித்து முதல்வர் ஸ்டாலின், ``மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர் கேப்டன் விஜயகாந்தினை நினைவுகூர்கிறேன்!" என்றார்.
அ.தி.மு.க, பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி, ``தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியவரும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றவருமான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர், அன்புச் சகோதரர், பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்தின் நினைவு நாளான இன்று, அவரின் பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்கிறேன்" என்றார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ``அன்பு நண்பர், தே.மு.தி.க நிறுவனர், கேப்டன் விஜயகாந்த் மறைந்து ஓராண்டாகிறது. அவரது இழப்பை மக்களின் மனம் ஏற்க மறுக்குமளவிற்குப் பெரும் தாக்கத்தை உருவாக்கிச் சென்றிருக்கிறார் கேப்டன். வறியோர்க்கு உதவும் ஈகை, எளியோரின் பக்கம் நிற்கும் நேர்மை, மனதில் பட்டதைப் பேசும் துணிச்சல் ஆகிய அவரது பண்புகள் தமிழ் மனங்களில் எப்போதும் பசுமையாக நிலைத்திருக்கும்" என்றார்.
அ.ம.மு.க., பொதுச்செயலாளர், தினகரன், ``தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனித்துவமிக்க தலைவராக திகழ்ந்த பத்ம பூஷன் கேப்டன் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று. உதவி கேட்டு வரும் ஏழை, எளியோருக்கு உதவும் குணம் படைத்தவராகவும், தமிழ் மற்றும் தமிழக மக்களின் மீது அளவு கடந்த அன்பை கொண்டிருந்தவராகவும் திகழ்ந்த கேப்டன் விஜயகாந்தின் புகழ் எக்காலத்திற்கும் நிலைத்து நிற்கும்." எனப் புகழ்ந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``மக்கள் மீது அதிக பாசம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவர் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்து விட்டவர். அவரால் வாழ்ந்தவர்கள் பலர் உண்டு எல்லோரிடமும் சமமாக பழகக் கூடியவர்." என்றார்.