தில்லி தேர்தல்: முதல் பட்டியலை வெளியிட்ட தேசியவாத காங்கிரஸ்!
Manmohan Singh: ``சூழ்ச்சி அரசியல் அவருக்கு வராது...'' - அப்பா குறித்து மனம் திறந்த மகள்
இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்க வேண்டும் என்ற பெரும் பொறுப்புடன் அதிகாரத்துக்கு வந்தவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அதிரடி நடவடிக்கைகள், அரசியல் சூழ்ச்சிகள், நம்பிக்கை துரோகங்கள், பல்வேறு விமர்சனங்கள் எனத் தொடர்ந்து தடைகள் வந்தாலும், 10 ஆண்டுகளை இந்திய மக்கள் அவரிடம் ஒப்படைத்தார்கள். 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்தவுடன், நிசப்த நிலைக்குச் சென்றார் மன்மோகன் சிங். ஆட்சிக்கு வந்தும் தொடர் விமர்சனங்களை முன்வைத்தது ஆளும் பா.ஜ.க அந்த விமர்சனங்கள் எதற்கும் பதிலளிக்காமல் இருந்தார் மன்மோகன் சிங்.
அப்போதுதான் மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் ``Strictly Personal, Manmohan and Gursharan" எனும் புத்தகத்தை எழுதியிருந்தார். அதில், மன்மோகன் சிங் மீது வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளுக்கும் அதிரடி பதிலை கொடுத்திருந்தார். அது தொடர்பாக அப்போது தமன் சிங் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்...
2009-ல் காங்கிரஸ் இரண்டாவது முறையாக வெற்றிபெறும் என்று உங்கள் தந்தை நம்பவில்லையா?
ஆம்... ஒரு யதார்த்த தருணத்தில் என் தந்தை அப்படித்தான் நினைத்தார். அதை அவர் எந்த சூழலில் வெளிப்படுத்தினார் என்பதை நான் ஆராயவில்லை. ஆனால் அவர் திரும்பி ஆட்சிக்கு வருவோம் என்று நினைக்கவே இல்லை.
உங்கள் தந்தைக்கும் நரசிம்ம ராவுக்கும் என்ன தொடர்பு?
என் தந்தைக்கு நரசிம்ம ராவிடமிருந்து அழைப்பு வந்தது. ஒரே இரவில் அவர் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அடுத்த ஒரு மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. அந்த காலகட்டத்தில் பொருளாதாரம் ஒரு பயங்கரமான சிக்கலில் இருந்தது. அந்த சூழலிலும், என் தந்தையின் திட்டங்கள், ஆலோசனைகள் அனைத்தையும் நரசிம்மராவ் நிறைவேற்றினார். அவர் இல்லாமல் என் அப்பாவால் எதுவும் செய்திருக்க முடியாது. நாட்டின் பொருளாதாரத் திட்டங்கள், யோசனைகள், தீவிர அணுகுமுறைகள் என் தந்தையிடமிருந்து வந்தது.
ஆனால் அதை அரசியல் ரீதியாக சாத்தியமாக்கியது அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்தான். இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கையின் போக்கையே மாற்றியது சிறுபான்மை அரசு என்று என் தந்தை எப்போதும் கூறுவார். இன்னும் ஐந்து வருடங்கள் இருந்தால் இன்னும் அதிகமாக செய்திருக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்தியாவில் சிஸ்டம் முற்றிலுமாக சீர்குலைந்தால்தான் மாற்றம் சாத்தியமாகும். ஏனென்றால், ஒரு பெரிய ஜனநாயக நாட்டில், அமைப்பு உடையும் நிலையை எட்டும்போதுதான், மக்கள் அந்த அமைப்பை மாற்றத் தயாராக இருக்கிறார்கள்.
ஆட்சியில் இருந்துக்கொண்டு தீவிரமான மாற்றங்களை உங்களால் திணிக்க முடியாது. காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தும் நாட்டின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்தன. நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்களுக்கு தொடர்ந்து விளக்க வேண்டியிருந்தது. முழு செயல்முறையும் மிகவும் கடினமாக இருந்தது. அதே நேரம் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் நரசிம்மராவ் கட்சியை வழிநடத்தினர் என என் தந்தைக் கூறியிருக்கிறார்.
மாற்றத்தை கொண்டு வர முயற்சித்ததால் உங்கள் தந்தை கட்சியிலிருந்தே விமர்சனங்களை சந்தித்தாரா?
சி.சுப்பிரமணியம் என் தந்தையால் பெரிதும் போற்றப்பட்டவர். சுப்ரமணியம் பசுமைப் புரட்சி மேம்பட பெரிதும் உழைத்தார் என்பதை நான் எனது புத்தகத்தை எழுதும் போது தெரிந்துக்கொண்டேன். ஆனால் அரசியல் மட்டத்தில் அவர் அமெரிக்காவின் முகவர் என விமர்சிக்கப்பட்டார். இந்த நாட்டில் தீவிர மாற்றத்தை கொண்டு வருவது கடினம். அதனால்தான் சி.சுப்பிரமணியம் பதவியை இழந்தார். அப்படித்தான் என் தந்தையும் விமர்சனங்களை எதிர்க்கொண்டார். முன்னோடிகள் ஒருபோதும் வெகுமதிக்காக வேலை செய்வதில்லை.
உங்கள் தந்தை அரசியலுக்கு தகுதியற்றவர் என்று நினைக்கிறீர்களா?
அப்படியெல்லாம் நினைக்கவில்லை. ஆனால் சூழ்ச்சி அரசியல் அவருக்கு வராது. அவர் இப்போதுவரை அரசியலில் நிலைத்திருக்கிறார் இல்லையா... எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக, அனைத்து எதிர் கருத்துகள், சூழ்ச்சிகளுக்கும் எதிராக நின்று, அதிகாரத்திலும் இருந்திருக்கிறார். அரசியல்வாதியாக அவர் பல சவால்களை அனுபவிக்கிறார். அபாயங்களை எடுத்துக்கொள்கிறார். ஆனால், அவையுடன் பாதுகாப்பாக விளையாடுபவரல்ல. சொல்லப்போனால் என் அப்பா ரிஸ்க் எடுப்பவர். 1991-ல், அரசியலில் சேருவது அவருக்கு சிக்கலல்ல. ஆனால், நிதியமைச்சராகலாமா வேண்டாமா என்பதுதான் அவருடைய சிந்தனையில் கேள்வியாக இருந்தது.
அரசியலில் சேர்ந்த பிறகு பொறுப்பு கிடைக்கவில்லை. ஒரு பெரும் சிக்கலின் தீர்வுக்காகதான் அவரிடம் அரசியலே வந்தது. அவர் 1991-ல் ஒரு மகத்தான ஆபத்தை கையில் எடுத்தார், பொருளாதார சீர்திருத்தங்களில் தனது வாழ்நாள் முழுவதையும் பணயம் வைத்தார். 1991, ஒரு போர் சூழல் போல் இருந்தது.
என் அப்பாவுக்கு பின்னால் இருப்பதை விட அவருக்குப் பக்கத்திலிருக்கும் சக்தி என் அம்மாதான். வாழ்நாள் முழுவதும் அப்பாவை கவனித்துக்கொண்டார். என் அப்பா கல்லூரி ஆசிரியராக இருந்தாலும், ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தாலும், நாட்டின் பிரதமராக இருந்தாலும் அது என் அம்மாவுக்கு ஒரு பொருட்டே அல்ல. அவர் எப்போதும் அப்பாவை கவனித்துக்கொள்வதில்தான் ஈடுபாட்டுடன் இருப்பார்.
2005 - 2009 என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
என் அப்பா முதல் சீக்கியப் பிரதமாரக் பொறுப்பேற்றார். பிரதமராக இருப்பது ஒரு பெரிய பொறுப்பாகும். சில அசாதாரண சூழ்நிலையில்தான் பிரதமர் பொறுப்பும் அவரிடம் வந்தது. அதை சமாளிக்க அவர் தினமும் ஓட வேண்டியிருந்தது. ஆனால், அதற்காக அவர் தயாராகவில்லை. ஆம், அந்தப் பணி மற்றவரை விட அப்பாவுக்கு மிகவும் கடினமாக இருந்தது. வழக்கமான மன அழுத்தத்தை விட அது மிகப்பெரியதாகவே இருந்தது. திடீரென்று ஒரு குழுவை அமைத்து கொள்கை கட்டமைப்பை உருவாக்கினார். அப்போதுதான் கூட்டணி ஆட்சிக்கென இருக்கும் சில முக்கிய சவால்களை சமாளிக்க முடியும் என நம்பினார்.
அரசு ஊழியராக அவர் பணியாற்றியதால், கொள்கைகள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன, அவை எவ்வாறு செயல்படுகின்றன, தகவல், அறிவு, செய்திகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கவனிப்பது அவருக்கு இலகுவாக இருந்தாலும், பொறுப்பில் இருக்கும்போது முழு அரசு இயந்திரத்தையும் ஒரு நபராக இயக்க அதிக ஆற்றல் தேவைபட்டது. அதனால், எங்கள் குடும்பமே அப்பாவின் செயல்பாடுகளால் பரபரப்பாக இருந்தது.
மோசடி, ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் சர்ச்சைக்குரியதானபோது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்களோ அல்லது குடும்பத்தில் உள்ளவர்களோ விரும்பினீர்களா?
எங்களுக்கு தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில், அரசியலுக்கும், குடும்ப உறவுகளுக்கும் மத்தியில் எப்போதும் தெளிவான கோடுகள் இருக்கும். எனவே நாங்கள் எதற்கும் குரல் கொடுக்கவில்லை. ஆனால் மிகவும் கவலைப்பட்டோம். இந்த சூழலை அப்பா விரைவாக கடந்துவிட வேண்டும் என மனதார விரும்பினோம்.
எல்லா குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் குடும்பத்தை காயப்படுத்தியதா?
என் அப்பா நிதியமைச்சராக இருந்தபோதும் பலவிதமான விமர்சனங்களை அனுபவித்தார். குறிப்பாக நாங்கள் அமெரிக்காவில் பணிபுரிவதற்காக தயார் செய்யப்படுகிறோம். அதற்காக படிக்க வைக்கப்படுகிறோம் என்றெல்லாம் பேசினார்கள். என் அப்பா அவை எல்லாவற்றையும் சமாளித்தார். அது தன்னைப் பாதிக்காத வகையில் கையாளும் திறமை அவருக்கு உண்டு. ஆனால் நான் அதை மிகவும் மோசமாக உணர்ந்தேன். செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை தவிர்த்தேன். அதிலிருந்து என்னை தவிர்த்துக்கொள்ள முயன்றேன். ஆனால் அது என் மகனுக்கு சாத்தியமில்லை. இதுதான் மிகவும் வேதனையாக இருந்தது.
மன்மோகன் சிங் மீதான சில விமர்சனங்கள் நியாயமானவை அல்லவா?
1981 முதல் எனது தந்தை வளர்ச்சி சார்ந்த பொருளாதாரத்தையே முன்னிறுத்தி வந்தார். அதை ஒருபோதும் அவர் கைவிடவில்லை. என் அப்பா 'உலக வங்கியிலோ, சர்வதேச நாணய நிதி மையத்திலோ பணிபுரிந்தார். அதனால் அவர் சர்வதேச நாணய நிதியத்தில் கால் பதிக்கிறார்' என்று கூறினார்கள். உண்மை அதுவல்ல. என் அப்பா ஒருபோதும் அந்த அமைப்புகளில் பணியாற்றவில்லை. வறுமையைப் போக்குவதற்கான ஒரு வழியாக வளர்ச்சியை நம்பினார். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனவே, நியாயமான விமர்சனம் என்ற ஒன்றை இதுவரை நாங்கள் சந்தித்ததில்லை.
நாட்டின் ஊழல் குறித்து என்ன கருதுகிறார் மன்மோகன் சிங்?
இந்தப் புத்தகத்தை எழுதும் போது என் தந்தையிடம் ஊழல் பற்றி நிறையப் பேசினேன். அவர் டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸை விட்டு விலகி, வெளிநாட்டு வர்த்தக அமைச்சகத்தில் நுழைந்த பிறகு, அப்போது இருந்த அமைச்சர் ஊழல்வாதியாக விமர்சிக்கப்பட்டார். ஆனால் ஆதாரம் இல்லாமல் அவர் மீது முத்திரை குத்த முடியாது என்று என் தந்தை அது தொடர்பாக பேசவில்லை. எனது தந்தை மிகவும் போற்றும் எச்.எம்.படேல் மீது பொய் வழக்கு போடப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, அரசுப் பணியில் இருந்து விலக்கினர். இவ்வளவு சிறந்த அரசு ஊழியர் நீக்கப்பட்டதற்கு என் தந்தை மிகவும் வருந்தினார். அரசியல் அமைப்புதான் ஊழலை உருவாக்குகிறது. தேர்தலுக்கு நிறையப் பணம் தேவைபடுகிறது என்று எனது தந்தை அடிக்கடி கூறுவார்.
உங்கள் தந்தையை வரலாறு எப்படி மதிப்பிடும் என்று நினைக்கிறீர்கள்?
என் தந்தையை நான் அரசியல் பலியாகப் பார்க்கவில்லை. அவர் மனசாட்சி கொண்ட வலிமையான மனிதர். அவர் மிகவும் திறமையானவர். பிரதமராக இருந்த 10 ஆண்டுகள் அவரது 40 ஆண்டுகால பொதுச் சேவையின் ஒரு பகுதி மட்டுமே. அவரது சிந்தனைகள் இன்று அங்கீகரிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அவரது ஆற்றலும் அவரது உழைப்பும் மதிப்புமிக்கது. அது நிச்சயம் நின்று பேசும்.