இளைஞா்களின் தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க வேண்டும்: விழுப்புரம் ஆட்ச...
Nithish Reddy : 'தந்தையின் வாழ்நாள் கனவு; அணியின் தேவை' - எமோஷனல் சதம் அடித்த நிதிஷ் ரெட்டி
சீனியர்களால் செய்ய முடியாததை அறிமுகத் தொடரிலேயே 21 வயதே ஆகியிருக்கும் நிதிஷ் ரெட்டி செய்து காண்பித்திருக்கிறார். வலுவான ஆஸ்திரேலிய அட்டாக்குக்கு எதிராக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை அடித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டிருக்கிறார்.
மெல்பர்ன் மைதானத்தில் கூடியிருக்கும் 70000 க்கும் அதிகமான ரசிகர்களும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். வர்ணனையில், 'What a moment for this young man...' என விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணியின் தொப்பியை வாங்கி அறிமுகமான போது யாருமே அதை பெரிய விஷயமாக கருதவில்லை. சொல்லப்போனால் நிதிஷ் ரெட்டியின் தேர்வை கடுமையாக விமர்சனம் செய்துகொண்டிருந்தனர். 'நான் நிதிஷ் ரெட்டியை குறைவாக மதிப்பிடுகிறேன் என நினைக்க வேண்டாம். அவர் திறமைசாலியாக இருக்கலாம். ஆனால், அவருக்கு இன்னும் சில காலம் கழித்து இந்த வாய்ப்பை வழங்கியிருக்கலாம். அவர் எத்தனை முதல்தரப் போட்டிகளில் ஆடியிருக்கிறார்?' என முதல் நாளே கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
`சீனியர்களிடம் என்ன மாதிரியான ஆட்டத்தை எதிர்பார்த்தோமோ, அதை...’
இந்திய அணிக்காக முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாகவே முதல் பந்தை வீசுவதற்கு முன்பாகவே அவர் மீது விமர்சனங்கள் விழ தொடங்கிவிட்டது. சீனியர்களின் செயல்பாடுகளையே விமர்சனங்கள் பாதிக்கும் போது நிதிஷ் ரெட்டியை பாதிக்காமலா இருக்கும். ஆனால், அதற்கெல்லாம் பெரிதாக காது கொடுக்காமல் அணிக்குள் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்வதில் கவனம் செலுத்தினார். கடந்த மூன்று போட்டிகளிலுமே அணிக்கு தேவையான இக்கட்டான சமயத்தில் பயனுள்ள ரன்களை எடுத்துக் கொடுத்திருந்தார்.
இதனால்தான் மெல்பர்ன் டெஸ்ட்டில் அவரின் இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். கில்லை பென்ச்சில் வைத்த போதும் நிதிஷ் மீது அணி நிர்வாகம் கை வைக்கவில்லை.
இதுவே நிதிஷின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்தான். அவர் இன்று ஆடிய ஆட்டம் இந்தத் தொடரில் மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்த பார்மட்டிலேயே அவருக்கு ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுக் கொடுக்கும்.
அரங்கம் நிறைந்திருந்த மெல்பர்ன் மைதானத்துக்குள் நிதிஷ் ரெட்டி பேட்டுடன் இறங்கிய போது இந்திய அணி பரிதாப நிலையில் இருந்தது. 191-6 என்ற சூழலில் ஃபாலோ ஆனை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தனர். அப்படியொரு இக்கட்டான கட்டத்தில் வாஷிங்டன்னுடன் கூட்டணி அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்க ஆரம்பித்தார். முழுக்க முழுக்க நிதானமான ஆட்டத்தை ஆடாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து இருவருமே சிறப்பாக ஆடினர். ஏதுவான பந்துகள் சிக்கும் போது பவுண்டரிக்களை அடிப்பதையும் நிதிஷ் வாடிக்கையாக வைத்துக் கொண்டார். அணியின் சீனியர் வீரர்களிடம் என்ன மாதிரியான ஆட்டத்தை எதிர்பார்த்தோமோ அதை நிதிஷ் ரெட்டி ஆடிக்கொடுத்தார்.
80 ஓவர்கள் முடிந்தவுடன் நியூ பாலில் இந்தக் கூட்டணியை பிரித்து விடலாம் என நினைத்தனர். ஆனால், நியூபாலையும் நிதிஷ் ரெட்டியும் வாஷியும் சிறப்பாக எதிர்கொண்டனர். இதன்பிறகு பீல்டை வைத்து விளையாட ஆரம்பித்தனர். டைட்டாக அட்டாக் செய்ய முயன்றனர். போலண்ட்டே அலெக்ஸ் கேரியை ஸ்டம்புக்கு அருகே நிற்க வைத்தெல்லாம் உளவியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தார். நிதிஷ் ரெட்டி அதற்கும் பணிந்து போகவில்லை.
தொடர்ந்து அட்டாக் செய்தே ஆடினார். அவர் 80 ரன்களை கடந்திருந்த சமயத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் சீக்கிரமே டீ ப்ரேக் விட்டார்கள். மழை வேறு பெய்ததால் ஆட்டம் தொடங்க இன்னும் தாமதமானது. கடைசி செஷன் தொடங்கிய போது முன்பிருந்த மொமண்டம் இல்லை. அதை உணர்ந்து கொஞ்சம் நிதானமாக நின்றும் ஆடினார். ஒரு வழியாக 99 ரன்களை எட்டிய போது வாஷியும் பும்ராவும் அடுத்தடுத்து அவுட். இன்னும் ஒரு விக்கெட்தான் மீதமிருக்கிறது. அது ஒரு தனி அழுத்தம். ஆனால், அதையெல்லாம் போட்டு குழப்பிக் கொள்ளாமல் போலண்ட் வீசிய பந்தை மிட் ஆனின் தலைக்கு மேல் பவுண்டரியாக அடித்து சதத்தை நிறைவு செய்தார். இந்திய அணியும் ஓரளவுக்கு சரிவிலிருந்து மீண்டது.
நிதிஷின் சதத்தை மைதானத்தில் நேரில் பார்த்த அவரின் தந்தை மனமுருகி ஆனந்த கண்ணீர் சிந்தினார். மகனுக்காக தனது அரசு வேலையை துறந்து கூடவே இருந்து கிரிக்கெட் பயிற்சி பெற உதவியவர். மகன் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது அவரின் கனவு. அது நிறைவேறிய தருணத்தில் மனிதர் பூரித்துப் போய்விட்டார்!
நிதிஷ் ரெட்டி இக்கட்டான காலக்கட்டத்தில் இந்திய அணிக்கு உறுதுணையாக நின்று ஆடி தனது வருகையை உலக கிரிக்கெட்டுக்கு ஆர்ப்பரிப்போடு அறிவித்திருக்கிறார். மைல்ஸ் டு கோ நிதிஷ்! வாழ்த்துகள்.!