Aus v Ind : அபராதமா...போட்டியில் ஆட தடையா? விஸ்வரூபம் எடுக்கும் கோலி விவகாரம்!
பார்டர் கவாஸ்கர் தொடரின் பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்பர்ன் மைதானத்தில் நடந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகியிருக்கும் 19 வயது இளம் வீரரான கான்ஸ்டஸூடன் இந்திய அணியின் அனுபவ வீரரான கோலி ஸ்லெட்ஜ்ஜிங்கில் ஈடுபட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இந்த சம்பவம் சார்ந்து கோலிக்கு அபராதமோ அல்லது ஒரு போட்டியில் ஆட தடையோ விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இன்று மெல்பர்னில் நடந்து கொண்டிருக்கும் போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிக்கொடுத்தார். தற்போதைக்கு உலகின் தலைசிறந்த பௌலர் பும்ராதான். நடப்புத் தொடரிலுமே ஆஸி பேட்டர்கள் பும்ராவுக்கு எதிராக கடுமையாக திணறி வந்தனர். ஆனால், கான்ஸ்டஸ் பும்ராவை திறம்பட எதிர்கொண்டார். எந்த தயக்கமும் அச்சமும் இல்லாமல் பந்துகளை எதிர்கொண்டார். நியூபாலில் பும்ராவின் முதல் ஸ்பெல்லிலேயே ரேம்ப் ஷாட்களையெல்லாம் ஆடி அசத்தினார். பும்ரா வீசிய 7 வது ஓவரில் மூன்று ரேம்ப் ஷாட்களை 14 ரன்களை சேர்த்தார். சமீபத்தில் பும்ராவை இவ்வளவு தீவிரமாக அடித்து ஆடிய பேட்டர் என யாரையுமே குறிப்பிட முடியாது. ஆனால், அறிமுகப் போட்டியிலேயே கான்ஸ்டஸ் பும்ராவை நிலைகுலைய வைத்துவிட்டார்.
கான்ஸ்டஸின் அட்டாக்கில் பும்ராவின் லெந்த்களும் தடுமாறின. இந்த சமயத்தில்தான் 10 வது முடிந்திருந்த போது ஓவர் ப்ரேக்கில் விராட் கோலி வேண்டுமென்றே கான்ஸ்டஸின் மீது சென்று மோதி முறைக்கவும் செய்தார். கான்ஸ்டஸ் கோலியின் செயலால் அதிர்ச்சியடையவே அவர் ரியாக்ட் செய்வதற்குள் கவாஜா வந்து இருவரையும் விலக்கிவிட்டார். இந்திய அணி பதற்றத்தில் இருந்ததையே கோலி ஸ்லெட்ஜ்ஜிங் முயற்சி வெளிக்காட்டியது. இந்த சம்பவத்துக்கு பிறகு பும்ரா வீசிய அடுத்த ஓவரில் 18 ரன்களை கான்ஸ்டஸ் வெளுத்தெடுத்தார். இந்த ஓவர் முடிந்த பிறகு ரசிகர்களை நோக்கி உற்சாகமாக கைத்தட்டுங்கள் என்பது போல கான்ஸ்டஸ் சைகையும் காட்டினார்.
'கோலி பிராக்டிஸ் பிட்ச்சை கடந்து வந்து கான்ஸ்டஸின் மீது மோதுகிறார். இந்த மோதலை கோலிதான் தொடங்குகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.' என்பது போல ரிக்கி பாண்டிங் பேசியிருக்கிறார். பல முன்னாள் வீரர்களின் கருத்தும் இதுவே. இந்நிலையில், ஐ.சி.சி யின் விதிமுறைப்படி கோலிக்கும் கான்ஸ்டஸூக்கும் அபராதமோ அல்லது ஒரு போட்டியில் ஆட தடையோ கூட விதிக்கப்படலாம் என தெரிகிறது. கோலிதான் இந்த மோதலை தொடங்குவதால் கோலிக்குதான் தண்டனை வழங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. சட்டவிதிகள் 42.1 இன் படி 'களத்தில் தேவையில்லாமல் வேண்டுமென்றே Physical Conduct ஐ ஏற்படுத்திக் கொள்வது தண்டனைக்குரியது.' என கூறப்பட்டிருக்கிறது. இந்த விதியின் படி விராட் கோலிக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது.