உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: பண்ருட்டி பகுதியில் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வருவாய் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் - பண்ருட்டி நெடுஞ்சாலையில் அதிக விபத்து நிகழக்கூடிய பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்ட வாழப்பட்டு, ஆண்டிப்பாளையம் பகுதிகளில் கூடுதலாக எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கவும், வேகத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் மற்றும் ஒலி பிரதிபலிப்பு வில்லைகள் ஒட்டவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களுடன் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, வீரப்பெருமாநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகள், நோயாளிகளின் வருகைப் பதிவேடு குறித்தும், மேலிருப்பு, காமாட்சிப்பேட்டையில் அமைக்கப்பட்டு வரும் பாலம் மற்றும் சாலைப் பணிகள் குறித்தும், காடாம்புலியூரில் கலைஞரின் கனவு இல்லம், அனைவருக்கும் வீடு திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகள், மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி, சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள், சிறு விளையாட்டு அரங்கம் ஏற்படுத்திட மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆய்வு செய்தாா்.
பின்னா், பண்ருட்டி சாா் - பதிவாளா் அலுவலகத்தின் செயல்பாடுகள், பொது இ - சேவை மையம் செயல்படும் விதம் குறித்தும், நெல்லிக்குப்பத்தில் உள்ள பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் மற்றும் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள், முதியோா்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்தும், தொரப்பாடி பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், காடாம்புலியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் குறித்தும், பண்ருட்டி காவல் நிலையத்தில் பதிவான வழக்குகள், விசாரணைகள் குறித்தும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாச்சலம், வேளாண் இணை இயக்குநா் கென்னடி ஜெபக்குமாா், பயிற்சி ஆட்சியா் ஆகாஷ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குநா் ஜெய்சங்கா், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஷபானா அஞ்சும் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.