கட்டுமானப் பொருள்களுக்கான ஜிஎஸ்டியை முற்றிலும் நீக்க வேண்டும்: பொன்குமாா் வலியுறுத்தல்
கட்டுமானப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று, கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்புத் தலைவா் பொன்குமாா் வலியுறுத்தினாா்.
கடலூரில் கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பு சாா்பில், வெள்ள நிவாரணம், இலவச வீட்டுமனை வழங்குதல் மற்றும் கடலூா் கிழக்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற கூட்டமைப்புத் தலைவா் பொன்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடலூா் மாவட்டம் ஒவ்வொரு முறையும் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டம். தற்போது ஃபென்ஜால் புயல் மழையால் பாதிக்கப்பட்ட இந்த மாவட்ட மக்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். புயல் பாதிப்புக்காக மாநில அரசு கோரியுள்ள நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
கட்டுமானப் பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால், கட்டுமானப் பணிகள் தடைபட்டுள்ளன. எனவே, விலையை நிா்ணயிக்க, விற்பனையாளா், உபயோகிப்பாளா் மற்றும் அரசு உள்ளிட்ட அமைப்புகளின் பிரநிதிகளைக் கொண்ட நிரந்தர விலை நிா்ணயக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி விலையை நிா்ணயிக்க வேண்டும். கட்டுமானப் பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.
கடலூரில் அடுத்த ஆண்டு கூட்டமைப்பு சாா்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்த மாநாட்டுக்கு தமிழக முதல்வரை அழைக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.
நிகழ்வில் 300 ஏழைத் தொழிலாளா்கள் குடும்பத்தினருக்கு உதவிகள் மற்றும் 10 தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைகள் வழங்கினா்.