செய்திகள் :

Manmohan Singh : 'வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்' - மெளன மொழி பேசியவரின் முழு வரலாறு!

post image

1999 நாடாளுமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த சமயம் அது. தெற்கு டெல்லியில் மன்மோகன் சிங் போட்டியிட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ்க்காரர்கள் களத்தில் குதித்து தீவிரமாக வேலைப் பார்க்கவில்லை. ஏற்கனவே சோனியாவுக்கு நெருக்கமானவராக அறியப்படும் மன்மோகன் சிங், வெற்றிப் பெற்றால் பிரதமராகும் வாய்ப்பிருக்கிறது என முணுமுணுக்கப்பட்டதே இதற்கு காரணம். தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் தனக்கு நெருக்கமான சகாக்கள் ஆகியோருடன் பாந்தமான அந்த மனிதர் தொகுதி முழுக்க இயன்றளவு பிரசாரத்தில் ஈடுபடுகிறார். ஆனாலும் தனது சொந்தக்கட்சியினரின் உள்ளடி வேலைகளை அவரால் வெல்ல முடியவில்லை. பாஜக வின் விஜய் மல்ஹோத்ரா 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்கிறார்.

இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சருக்கு இந்தியாவுக்கென தனித்த வளர்ச்சிமிகு பொருளாதாரப் பாதையை அமைத்துக் கொடுத்தவருக்கு சொந்தக் கட்சிக்காரர்கள் பரிசாகக் கொடுத்தது அவமானகரமான தோல்வி. மன்மோகன் சிங்கின் மனைவி கௌர் உட்பட அவரின் குடும்பத்தினர், நலம் விரும்பிகள் என அத்தனை பேரும் கொதித்துப் போயினர். விஷயத்தை சோனியாவிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பது பலருடைய விருப்பமாகவும் இருந்தது. ஆனால், இதற்கெல்லாம் மன்மோகன் சிங்கின் பதில் என்ன தெரியுமா?

மௌனம் மட்டுமே..!
மன்மோகன் சிங்

2004 இல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி முதல் முறையாக ஆட்சியமைத்த சமயத்தில் மன்மோகன் சிங்கும் முதல் முறையாக பிரதமாகிறார். மக்கள் நலன் சார்ந்து பல்வேறு நலத்திட்டங்கள் இந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதில் மிக முக்கியமானது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம். மக்களிடம் காங்கிரஸ் அரசுக்கு நற்பெயரை பெற்றுக்கொடுத்த இந்தத் திட்டத்தை பரந்துபட்டு விஸ்தரிக்க மன்மோகன் சிங் முடிவெடுக்கிறார். பத்திரிகைகளால் பாராட்டப்பட்ட இந்த முடிவுக்கான மொத்த க்ரெடிட்டையும் நேருவின் குடும்பமே எடுத்துக் கொண்டது. ராகுல் காந்தி மன்மோகன் சிங்கை சந்தித்தப் பிறகு அவரின் ஆலோசனையின்படிதான் பிரதமர் அந்தத் திட்டத்தை அறிவித்தார் என செய்தி பரப்பப்பட்டது. அப்போதும் மன்மோகன் சிங்கின் பதில் என்ன தெரியுமா?

மௌனம் மட்டுமே..!

பொருளாதார நிபுணவியலுடன் கலந்த அவருடைய மௌனம்தான் அவருக்கு பிரதமர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. மௌனம்தான் அவரின் ஆயுதம். மௌனம்தான் அவரின் அடையாளம். அதே மௌனம்தான் அவரை நார் நாராகக் கிழித்துத் தொங்கவிடவும் அனுமதித்தது. அவர் மௌனத்தின் ஒளியால் மிளிரவும் செய்திருக்கிறார், சுட்டெரிக்கவும் பட்டிருக்கிறார்.

மௌனத்தின் குழந்தையான இந்த மன்மோகன் சிங் பிரிவினைக்கு உட்படாத இந்தியாவின் பஞ்சாபில் காஹ் எனும் குக்கிராமத்தில் பிறந்தவர். முறையான குடிநீர் வசதி இல்லாத, மின் வசதி இல்லாத அடிப்படைத் தேவைகளுக்கே மக்கள் அல்லாடிக் கொண்டிருக்கும் கிராமம். அங்கேதான் 1932 இல் செப்டம்பர் 26 ஆம் தேதி மன்மோகன் சிங் பிறக்கிறார். இளம் வயதிலேயே தனது தாயை இழக்கிறார். தந்தைதான் ஒரே ஆதரவு. அவரும் தனி பணி நிமித்தமாக பல நாட்கள் வெளியூர்களுக்கு பயணிக்கக்கூடியவர். இதனால் உறவினர்களின் அரவணைப்பிலேயே வாழ்கிறார்.

மன்மோகன் சிங்

தன்னுடைய தேவைகளை வாய்விட்டு கேட்கும் அளவுக்கான சுதந்திரம் அவருக்கு குழந்தைப் பருவத்தில் வாய்க்கவில்லை. அதுவே அவரை கூச்ச சுபாவம் மிக்கவராக, எதையும் வெளிப்படையாக படபடவென பேசாத மெளனியாக மாற்றியது. செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியின் விடுதியில் ஒவ்வொரு நாளின் விடியலையும் முதலாக தரிசிக்கக் கூடியவர் மன்மோகன் சிங்தானாம். ஏனெனில், அவருக்கு டர்பனை கழற்ற எப்போதுமே கூச்சமாக இருக்குமாம். அதனால் மற்ற மாணவர்கள் எழுந்தரிப்பதற்கு முன்பாகவே எழுந்து வெதுவெதுப்பான தண்ணீர் இல்லையென்றாலும் குளிர்ந்த தண்ணீரில் குளித்துவிட்டு ஓடி வந்துவிடுவாராம். அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பிரதமராக தேசியக்கொடியை ஏற்றி கோடிக்கணக்கான மக்களுக்கு தேசத்தின் வழிப்போக்கை உணர்த்தும் வகையில் மணிக்கணக்கில் உரையாற்றினார் என்றால் நம்ப முடிகிறதா?

சுற்றத்தார் கொடுக்காத அரவணப்பை மன்மோகனுக்கு கல்வி கொடுத்தது. அதனால் படிப்பின் மீது அவருக்கும் ஏகப்பிரியம். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வரை சென்று வர்த்தகம் பயில்கிறார். திரும்பி வந்து தான் படித்த பஞ்சாப் யூனிவர்சிட்டியிலேயே பேராசிரியராகவும் பணியாற்றுகிறார். அயலக உறவு குறித்தும் சக நாடுகளுடனான பொருளாதார பந்தம் குறித்தும் அப்போதே அவருக்கு தெளிவான பார்வை இருந்தது. இதனால் அவருக்கு ஐ.நா.வில் பணியாற்றும் வாய்ப்பும் கிடைக்கிறது.

United Nations Conference on Trade and Development என்ற அமைப்பில் தேர்ந்த பொருளியல் அறிஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். 3 ஆண்டுகள் அங்கேயே நீடிக்கிறார். இந்த சமயத்தில் தனது குருவான ராஜின் அழைப்பை ஏற்று 'Delhi School of Economics' க்கு பேராசிரியாக வருகிறார். மன்மோகனை ஐ.நா விலிருந்து அனுப்ப யாருக்குமே விருப்பமில்லை. முக்கியமாக அவரின் தலைமைப் பொறுப்பில் இருந்த பொருளியல் அறிஞர் ரௌலுக்கு விருப்பமே இல்லை. 'நீங்கள் எடுப்பது முட்டாள்த்தனமான முடிவு.' என்றார்.

மன்மோகன் சிங்

'சில சமயங்களில் நாம் முட்டாள்த்தனமான முடிவுகளையும் எடுத்துதான் ஆகவேண்டும்.' எனச் சொல்லி மன்மோகன் மீண்டும் இந்தியா கிளம்பி வந்தார். அவரின் திறமைக்கான அதிகாரத்தின் வாயிற்கதவுகள் இந்த முட்டாள்த்தனமான முடிவுக்குப் பின்தான் திறக்க ஆரம்பித்தன. 70 களின் தொடக்கத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆலோசகராக மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டார். இதன்பிறகு அரசு இயந்திரத்துக்குள் மன்மோகன் சிங்கின் வளர்ச்சி படுவேகமாக இருந்தது. பல்வேறு துறைகளின் ஆலோசகர், திட்டக்குழுவில் முக்கியப் பதவி, ரிசர்வ் பேங்க் ஆளுநர் என அதிகாரத்தின் உச்சிகளை பணிவின் துணைகொண்டு எட்டினார்.

காஹ் எனும் வளர்ச்சியின் காற்றுபுகாத குக்கிராமத்தில் பிறந்த மன்மோகன் சிங் இதன்பிறகு நிகழ்த்தியதுதான் வரலாறு. 90 களின் ஆரம்பக்கட்டம். ராஜீவ் காந்தி உயிரிழந்து காங்கிரஸ் தேர்தலில் வென்றிருந்தது. காங்கிரஸை போலவே இந்தியாவும் குழப்பத்தில் சிக்கிக் கொண்டிருந்தது. வளைகுடா போரினால் ஏற்பட்ட விளைவுகள், அந்நிய செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட சுணக்கம் என இந்திய பொருளாதாரத்தின் மீது பெருத்த அடி விழுந்திருந்தது. சுதந்திரமடைந்து அரைநூற்றாண்டை தொடுவதற்குள் தேசத்தின் பொருளாதார கட்டமைப்பு சுக்குநூறாக நொறுங்கி விழும் நிலை. நேருவின் குடும்பத்தில் அடுத்த பிரதமருக்கான தேர்ச்சியை யாரும் பெறாத நிலையில் பி.வி.நரசிம்ம ராவை பிரதமராக்கியிருந்தார்கள்.

மன்மோகன் சிங்

பொருளாதார நிலைமையை சீராக்க ஒரு மேதமை வாய்ந்த நபரை நிதியமைச்சராக கொண்டு வர நரசிம்ம ராவ் விரும்பினார். ஐ.ஜி படேலை அழைத்தார். 1977 முதல் 1982 வரை ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் அவர். நரசிம்மராவின் அழைப்புக்கு அவர் இசைவு தெரிவிக்கவில்லை. அடுத்ததாக நரசிம்ம ராவ் அழைத்தது மன்மோகன் சிங்கைதான். அப்போது அவர் பல்கலைக்கழகங்களின் மானியக் குழுவின் சேர்மன். வீதிகள் மௌனத்தை உட்கிரகித்துக் கொண்டிருக்கும் நள்ளிரவை எட்டிய பொழுதில் நரசிம்மராவிடமிருந்து மன்மோகனுக்கு அழைப்பு வருகிறது.

'நாம் எடுக்கும் முடிவுகள் சரியாக சென்றால் அத்தனைக்குமான நற்பெயரையும் நாம் பெற்றுக்கொள்ளலாம். எதாவது தவறினால் நம்மை பந்தாடிவிடுவார்கள்.' என்கிற எச்சரிக்கையுடன் நரசிம்ம ராவ் மன்மோகனை அழைக்கிறார். அதிகம் பேசாதவர்கள் மனோத்திடம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். மன்மோகன் சிங் சவாலுக்கு தயாரானார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். நொடிந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை உயிர்பெற வைக்கும் வேலைகளில் இறங்கினார். இந்த சமயத்தில் அவர் கையில் எடுத்ததுதான் தாராளமயமாக்கல் கொள்கை. 'லைசன்ஸ் ராஜா' வாக இருந்த தொழில்துறையை கட்டுப்பாடுகளை தளர்த்தி வேகமெடுக்க வைத்தார். தனியார் நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்க ஆரம்பித்தது. ஏற்றுமதி கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வந்தார். தென் கொரியாவை இந்தியாவுக்கான முன்னுதாரணமாக எடுத்துக் காட்டினார்.

மன்மோகன் சிங்

‘ஒரு கருத்துக்கான நேரம் வந்துவிட்டால் உலகின் எந்தச் சக்தியாலும் அதைத் தடுத்து நிறுத்தமுடியாது. இந்த உயர்ந்த அவைக்கு நான் இதனைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உலகில் மிக முக்கியமான பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகும் என்பது அப்படிப்பட்ட ஒரு கருத்து. இந்த உலகம் இதனைத் தெளிவாகவும் சத்தமாகவும் கேட்கட்டும். இந்தியா இப்போது முழுவதுமாக விழித்துக்கொண்டிருக்கிறது. நாம் உயர்வோம். நாம் வெற்றி பெறுவோம்.’ என விக்டர் ஹூகோவின் மேற்கோளோடு தனது முதல் பட்ஜெட் உரையை மன்மோகன் சிங் முடித்த போது இந்திய பொருளாதாரத்தின் மீது புதிய ஒளி பாயத் தொடங்கியது.

இந்திய பொருளாதாரம் மெதுமெதுவாக மீண்டது. அந்த சமயத்திலும் எதிர்க்கட்சிகள் மன்மோகன் சிங்கை சரமாரியாக விமர்சித்துக் கொண்டிருந்தனர். கம்யூனிஸ்ட்டுகள் தாராளமயமாக்கல் என்கிற கொள்கையையே எதிர்த்தனர். பா.ஜ.க போன்ற கட்சிகள் இந்தியாவில் நிதிசார்ந்து கொள்கை முடிவுகள் எடுக்கப்படும் முன்பே அது சர்வதேச அமைப்புகளில் மேஜைக்கு சென்றுவிடுவதாக விமர்சித்தனர். அத்தனை களேபரங்களையும் கடந்து மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருந்தங்கள் நீண்ட கால அடிப்படையில் பெரும்பலன்களை கொடுத்தன.

பி.வி.நரசிம்ம ராவை அரசியல் குருவாக கொண்டிருந்தாலும் தனது பொருளாதார மேதமையால் சோனியா காந்திக்கும் நெருக்கமானவராக மாறினார் மன்மோகன் சிங். 1998 இல் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை சோனியா ஏற்கிறார். அந்தக் காலக்கட்டத்தில்தான் ராஜீவ் காந்தியின் பெயரில் தொடங்கப்பட்ட அறக்கட்டளைகளுக்கான பொறுப்பையும் மன்மோகனுக்கே கொடுத்திருந்தார் சோனியா. இந்த சமயத்தில் முன்பு குறிப்பிட்ட அந்த தெற்கு டெல்லி தொகுதியில் மன்மோகன் சிங் தோல்வியைத் தழுவுகிறார். மக்களும் கட்சிக்காரர்களும் கைவிட்ட போதும் சோனியா காந்தி மன்மோகன் சிங்கை கைவிடவில்லை. அவரை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். சோனியா காந்தி மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட, மன்மோகன் சிங் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.

மன்மோகன் சிங்

'இந்தியா ஒளிர்கிறது' என்ற பிரசாரத்துடன் பெருத்த நம்பிக்கையோடு ஆறு மாதத்துக்கு முன்பாகவே ஆட்சியை கலைத்து தேர்தலை சந்தித்தார் வாஜ்பாய். ஆனால், வாஜ்பாய் எதிர்பார்த்த வெற்றி பா.ஜ.கவுக்கு கிடைக்கவில்லை. காங்கிரஸூம் பெரும்பான்மை பெறவில்லை. 14 கட்சிகளுடன் இணைந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை கட்டமைத்து காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. ஆயினும் யார் பிரதமராவது என்பதில் சிக்கல். காங்கிரஸ்காரர்களுக்கு சோனியாதான் பிரதமராக வேண்டும். சோனியாவுக்கும் அந்த விருப்பம் இருந்தது. ஆனால், ஒரு இத்தாலி நாட்டுப் பெண் இந்தியாவை ஆள்வதா என எதிர்க்கட்சிகள் கச்சைக் கட்டின.

'சோனியா பிரதமரானால் மொட்டை அடித்துக் கொள்வேன்.' என சுஸ்மா ஸ்வராஜ் பிபி ஏற்றினார். தமிழகத்திலிருந்து ஜெயலலிதாவும் சோனியாவின் முழுப்பெயரையும் கூறி அவர் பிரதமர் ஆவதை வரிந்துக் கட்டி எதிர்த்தார். எதிர்ப்புகளால் சோனியா பின்வாங்கினார். அர்ஜூன் சிங், பிரணாப் முகர்ஜி என கட்சிக்குள் சில பெரிய தலைகள் அந்த பிரதமர் நாற்காலி தங்களுக்குத்தான் என கனவு காண ஆரம்பித்தனர். சோனியா சர்ப்ரைஸ் கொடுத்தார். அவர் டிக் அடித்த பெயர் மன்மோகன் சிங். உள்ளடி அரசியலில் ஈடுபடமாட்டார், பொருளாதார மேதை, எல்லா கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நபர் என மன்மோகன் சிங்கின் தேர்வுக்குப் பின்னால் பல காரணங்கள் இருந்தது.

மன்மோகனை 'Accidental PM' என விமர்சிப்பார்கள். ஆனால், அதை அவர் விமர்சனமாக கருதவில்லை. அவரே தன்னை ஒரு தற்செயல் பிரதமராகத்தான் நினைத்துக் கொண்டிருந்தார். கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பில் இயன்றவரை மக்களுக்கு எதையாவது செய்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டுமே கொண்டிருந்தார். அதனால்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம் என பல மக்கள் நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார். கட்சித் தலைமை வேறாகவும் ஆட்சித் தலைமை வேறாகவும் இருப்பது எப்போதுமே சிக்கலைக் கொடுக்கக்கூடியது. ஆனால், இந்த 2004 ஆட்சி காலக்கட்டத்தில் மன்மோகன் சிங் இதை ஓரளவுக்கு திறம்படவே கையாண்டார். சோனியாவுடன் கலந்தாலோசித்துக் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பதை தன்னுடைய வழக்கமாகக் கொண்டிருந்தார். சோனியாவும் மன்மோகன் சிங்கிற்கு கட்சிக்குள் உரிய மரியாதை கிடைப்பதை உறுதிசெய்து கொடுத்தார்.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங் அமைதியானவர் என்கிற பிம்பம்தான் இப்போது வரைக்கும் இருக்கிறது. ஆனால், சில சமயங்களில் தன்னுடைய கோபத்தை அவர் வெளிப்படையாகவும் காட்டியிருக்கிறார். பிரதமராக பதவியேற்றப் பிறகு நாடாளுமன்றத்தில் மன்மோகன் சிங்கின் முதல் பேச்சுக்கே எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டன. பலத்த அமளிதுமளிக்கு மத்தியில் குடியரசுத் தலைவரின் உரைக்கு மட்டும் நன்றி கூறி மன்மோகன் சிங் விடைபெற்றார். எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டால் மன்மோகன் சிங் கடும் கோபம் கொண்டார். மறுநாள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த வாஜ்பாயும் ஜார்ஜ் பெர்ணாண்டஸூம் பிரதமரை சந்திக்க அவரது அறைக்கு சென்றிருக்கின்றனர். அவர்களை உட்காரக் கூட சொல்லாமல் நிற்க வைத்தே பேசிவிட்டு, அவர்கள் கொடுத்த அலுவல் நிமித்தமான காகிதத்தையும் டேபிளில் வீசி எறிந்திருக்கிறார். வெளியே வந்து வாஜ்பாயும் ஜார்ஜ் பெர்ணாண்டஸூம் தாங்கள் அவமதிக்கப்பட்டதாக பத்திரிகையாளர்களிடம் குமுறிவிட்டனர்.

அதேமாதிரி, ஒருமுறை நவீன் பட்நாயக் பீகாருக்கு வழங்குவதைப் போல ஒடிசாவுக்கு அதிக நிதி வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அவரின் முகத்துக்கு நேராகவே, 'பணம் என்ன மரத்துலயா காய்க்குது?' என கடுமையான குரலில் கேட்டிருக்கிறார் மன்மோகன் சிங்.

பேசத்தெரியாத பிரதமர், எதோ யதேர்ச்சையாக பிரதமராகிவிட்டார், அவர் பொம்மை பிரதமர் என்றுதான் எதிர்க்கட்சிகள் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தன. ஆனால், உண்மையில் அவர் பேச வேண்டிய இடங்களில் அதிகம் பேசியிருக்கிறார். பத்திரிகையாளர்களின் பேனாக்களையும் மைக்குகளையும் பார்த்து அவர் அஞ்சியிருக்கவில்லை. எந்த கேள்வியாக இருந்தாலும் எதிர்கொள்ள தயாராகவே இருந்திருக்கிறார். ஆட்சியமைத்து சில மாதங்களிலேயே ஒரு பெரிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்துக்கு 52 கேள்விகளுக்கு பதில் கூறியிருந்தார்.

பிரதமராக அவரின் முதல் பத்திரிகையாளர் சந்திப்பு அது. இதேமாதிரி எத்தனையோ பத்திரிகையாளர் சந்திப்புகளை அவரின் 10 ஆண்டுகாலத்தில் நடத்தியிருக்கிறார். இப்போது அதிகம் பகிரப்பட்டு வரும் 'சமகால ஊடகங்களை விட வரலாறு என்னை கனிவோடு அணுகும்!' என்கிற அவரின் மேற்கோளுமே பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியதுதான். பிரதமராக அவரின் கடைசி பத்திரிகையாளர் சந்திப்பு அது. 'தற்போதைய சூழலையும் கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்தையும் கருத்தில் கொள்கையில் என்னால் முடிந்தளவு சிறப்பாகவே பணியாற்றுகிறேன். சமகால ஊடகங்களை விடவும் எதிர்க்கட்சிகளை விடவும் வரலாறு என்னிடம் கனிவாக நடந்துகொள்ளும் என உறுதியாக நம்புகிறேன்!' என அந்த சந்திப்பில் மன்மோகன் சிங் பேசியிருந்தார்.

மன்மோகன் சிங்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாம் ஆட்சிக்காலம் கடும் விமர்சனங்களையும் புகார்களையும் எதிர்கொண்டது. சொந்தக்கட்சி உறுப்பினர்களும் சரி கூட்டணிக் கட்சி உறுப்பினர்களும் சரி, பலரும் ஊழல் புகார்களில் சிக்கினர். மன்மோகன் சிங் அப்போதும் மௌனமாக இருந்தார். அது பேச முடியாத, பேச வழியில்லாத மௌனம். 2014 தோல்வி கிட்டத்தட்ட அவருக்கு ஒரு விடுதலையைப் போன்றுதான் தோன்றியிருக்கும்.

பிரதமர் பதவியிலிருந்து இறங்கிய பிறகும் ஒரு மாநிலங்களவை உறுப்பினராக 92 வயது வரைக்கும் சளைக்காமல் இயங்கிக் கொண்டிருந்தார். ஆளும் பா.ஜ.க அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக காத்திரமான விமர்சனங்களை முன் வைத்தார். பதாகைகளை ஏந்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டார். ஒரு பண்பட்ட அரசியலராக கடைசி வரை இயங்கிவிட்டே ஓய்ந்தார்.

மன்மோகன் சிங்

ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு முன்பாக மன்மோகன் சிங்கிடம் அவரின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு, 'நீங்கள் வேண்டுமானால் குளித்து ப்ரெஷ் ஆகி வாருங்களேன்!' எனக் கூறியிருக்கிறார். அதற்கு மன்மோகன் சிங், 'சிங்கம் எப்போவாச்சு பல் துலக்கியிருக்கா?' எனக் கேட்டு சிரித்திருக்கிறார்.

ஆம், மன்மோகன் சிங் அவர்களே நீங்கள் சிங்கம்தான். கருணை கொண்டிருக்கும் வரலாறு உங்களுக்காக கர்ஜிக்கும்!

Reference : 'The Accidental Prime Minister' by Sanjaya Baru

'குடும்பத்தினர் அதானியை சந்திக்கவில்லை என முதல்வர் சொல்வாரா?' - ஆதாரம் இருக்கு என்கிறார் ஹெச்.ராஜா

" 'அம்பேத்கர் என்று கூறுவதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்' என்ற அமித் ஷாவின் கருத்து சரிதானா?""நாடாளுமன்றத்தில், அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ... மேலும் பார்க்க

Manmohan Singh: `BMW வேண்டாமே'- மாருதி 800 மீதான மன்மோகன் சிங்-ன் காதல்; பகிரும் முன்னாள் பாதுகாவலர்

நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். இவரைப் பற்றிய நினைவுகளை அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போதைய உத்தரப்பிரதேச அமைச்சரும், முன்பு மன்மோகன் சி... மேலும் பார்க்க

Annamalai: 'சாட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொண்டு போராட்டம்' - அண்ணாமலை நகர்வுகள் கைகொடுக்குமா?

சமீபத்தில் சென்னை, அண்ணா பல்கலையில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார். இது தொடர்பாக ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் தி.மு.க-வை சேர்ந்தவர் என பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. ம... மேலும் பார்க்க

Manmohan Singh: மோடியின் பணமதிப்பிழப்பும், மன்மோகன் சிங் சொன்னதைப் போலவே சரிந்த GDP-ம்!

மத்தியில் 2014-ல் பா.ஜ.க ஆட்சிக்கு வந்த மூன்றாவது ஆண்டில் 2016 நவம்பர் 8-ம் தேதி, `இனி ரூ. 500, ரூ. 1000' ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிர்ச்சியைத் தந்தார் பிரதமர் மோடி. ஒரே நாளில் மொத்த எளிய மக்கள... மேலும் பார்க்க

ஏமனை தாக்கிய இஸ்ரேல்; நூலிழையில் தப்பித்த WHO தலைவர் - தாக்குதல் குறித்து என்ன சொல்கிறார் அவர்?!

பாலஸ்தீனம், லெபனான், இரான்... தற்போது ஏமன் என இஸ்ரேலின் பகை மற்றும் தாக்குதல் பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இஸ்ரேலை லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு எப்படி எதிர்க்கிறதோ, அதுபோல ஏமனைச் சேர்ந்த ஹூதி அமைப... மேலும் பார்க்க

'அண்ணா பல்கலைக்கழகச் சம்பவம் துரதிஷ்டவசமானது...' - அமைச்சர் கோவி.செழியன் சொல்வதென்ன?

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.அண்ணா பல்கலைக்கழகத... மேலும் பார்க்க