மாணவி பாலியல் வழக்கில் ஏன் முரண்பாடுகள்? உண்மையில் என்ன நடந்தது? - அண்ணாமலை கேள்...
பல்கலை.களில் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்
தமிழகத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:
வேங்கைவயல் சம்பவம் நிகழ்ந்து 2 ஆண்டுகளாகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை சிபிஐ வசம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்.
வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் அமைக்கப்பட்டு, 2 ஆண்டுகளாகியும், இன்னமும் பரிந்துரை அறிக்கை வழங்கவில்லை.
அந்த ஆணையத்திடமிருந்து பரிந்துரை அறிக்கைகளைப் பெற்று, ஜனவரி 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. தமிழகத்தில் மாணவிகளுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பதைக் கண்டறிந்து, அவா்களையும் கைது செய்ய வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறைபாடுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாநிலத்தில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கடன் வாங்குவதில் இலக்கைத் தாண்டும் திமுக அரசு, மூலதன செலவுகளை செய்வதில் சுணக்கம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
மதுரை மாவட்டம், அரிட்டாப்பட்டியில் செயல்படுத்த திட்டமிடப்பட்ட டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கு துரோகம் செய்து விட்டன. மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றாா் ச.ராமதாஸ்.
பேட்டியின் போது, பாமக மாவட்டச் செயலா் மு.ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.