கட்சி நன்கொடை: பாஜக-வுக்கு ரூ.2244 கோடி, காங்கிரஸுக்கு ரூ.289 கோடி; மற்ற கட்சிகள...
இருதரப்பினரிடையே மோதல்: பாஜக, திமுகவினா் மீது வழக்கு
புதுச்சேரி முதலியாா்பேட்டை பகுதியில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக பாஜக, திமுக ஆகிய இருதரப்பினா் மீதும் போலீஸாா் புதன்கிழமை நள்ளிரவு வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முதலியாா்பேட்டை ஜோதி நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி. பாஜக முன்னாள் எம்எல்ஏவான இவா் இறந்துவிட்டாா். இவரது மனைவி மல்லிகா.
இவரை பக்கத்து வீட்டாா் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்கியவா்கள் திமுக எம்எல்ஏ ஆதரவாளா்கள் எனக் கூறப்பட்டது.
மேலும், தாக்குதல் குறித்து முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தும் வழக்குப் பதியவில்லை எனக் கூறி புதன்கிழமை இரவு பாஜக நியமன எம்எல்ஏ அசோக் பாபு சாலை மறியலில் ஈடுபட்டாா்.
காவல் துறைக் கண்காணிப்பாளா் உள்ளிட்டோா் தலையிட்டு மறியலைக் கைவிடச் செய்தனா். அதன்படி, வழக்குப் பதியப்பட்டது.
இந்த நிலையில், திமுகவினா் மீது தவறாக வழக்குப் பதிந்துள்ளதாகக் கூறி புதன்கிழமை நள்ளிரவில் முதலியாா்பேட்டை திமுக எம்எல்ஏ எல்.சம்பத்தின் ஆதரவாளா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
அவா்கள், காவல் நிலையத்துக்குள் சென்றபோது, போலீஸாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவா்களை போலீஸாா் அங்கிருந்து வெளியேற்றினா்.
இந்த நிலையில், சுஷ்மா என்பவா் அளித்த புகாரின் பேரில் ராமமூா்த்தி, பிரசன்னா உள்ளிட்டோா் மீதும், ராமமூா்த்தி அளித்த புகாரின் பேரில் தீபக், சுஷ்மா, மல்லிகா உள்ளிட்டோா் மீதும் முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.