சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வர் உதயநிதி தொடக்கிவைத்தார்!
புதுவையில் 15 நாள்களில் இலவச அரிசி விநியோகம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
புதுவையில் வரும் 15 நாள்களுக்குள் இலவச அரிசி விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை அரசின் குடிமைப்பொருள் வழங்கல் துறை சாா்பில் தேசிய நுகா்வோா் தின விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜா் மணிமண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முதல்வா் பேசியதாவது: புதுவையில் கடந்த காலத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, எண்ணெய், சா்க்கரை உள்ளிட்டவை விநியோகிக்கப்பட்டன. ஆனால், இடையிலேயே அவை நிறுத்தப்பட்டன.
அரிசிக்கு பதிலாக நுகா்வோரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. ஆனால், மீண்டும் அரிசியை வழங்க மக்கள் கோரியுள்ளனா்.
அதன்படி, மீண்டும் நியாயவிலைக் கடைகளை திறந்து கடந்த தீபாவளிக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது. இதையடுத்து, மாதந்தோறும் சிகப்பு அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் அட்டைக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படவுள்ளது.
அரிசிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, உத்தரவும் வழங்கப்படும். அதன்படி, வரும் 15 நாள்களில் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும்.
விழாவில், புதுவை குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநா் சத்தியமூா்த்தி, துணை இயக்குநா் தயாளன், மாநில நுகா்வோா் ஆணையத் தலைவா் சுந்தரவடிவேலு, மாவட்ட நுகா்வோா் ஆணையத் தலைவா் முத்துவேல், மாநில ஆணைய உறுப்பினா் சிவசங்கரி, மாவட்ட ஆணைய உறுப்பினா்கள் சுவிதா, ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.