2024 பேசும் பொருளான சர்ச்சைகள்: 'மோடி' முதல் 'அம்பேத்கர்'
2024 வேகமாக கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், நடப்பாண்டில் நாடு முழுவதும் சர்ச்சைக்குள்ளாகி பேசும் பொருளான தலைவர்களின் முக்கியமான சர்ச்சையான பேச்சுகள், கண்டனங்கள், கருத்துகள் நாட்டு மக்களிடையே பெரும் பேசும்பொருளானது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் மறைந்த பெரும் தலைவர்களின் பேச்சுகள் கூட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதும் அதுகுறித்தே தொலைக்காட்சிகளில் விவாதங்கள் நடத்தப்பட்டு பரபரப்புகளுக்கு தீனியிட்டு வருவதை நாம் நாள்தோறும் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் பதற்றத்துக்கும் பரப்புகளுக்கு பஞ்சாமில்லாமல் நாட்டில் நடந்து முடிந்த நாடளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரங்களும் சர்ச்சைகளும் 2024 இல் குறைவில்லாமல் இருந்தது எனலாம்.
ஆந்திரம் பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் சாம் பிட்ரோடா தென்னிந்தியர் பற்றி என்ன பேசினார்?
காங்கிரஸ் கட்சியின் அயலக வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் சாம் பிட்ரோடா 'தி ஸ்டேட்ஸ்மேன்' என்ற ஆங்கில நாளிதழுக்கு இந்திய மக்களின் ஒற்றுமை குறித்து அளித்த பேட்டியில், வட இந்திய மக்களை வெள்ளையர்களுடனும், மேற்கு இந்திய மக்களை அரேபியர்களுடனும், கிழக்கிந்திய மக்களை சீனர்களுடனும், தென்னிந்திய மக்களை ஆப்பிரிக்கர்களுடனும் ஒப்பிட்டு பேசியிருந்தார். இது சர்ச்சைகளை எழுப்பியதுடன் அரசியல் களத்தில் பேசுபொருளானது.
நாட்டின் பன்முகத்தன்மைக்கு பிட்ரோடா அளித்த ஒப்புமைகள் தவறானவை, துரதிருஷ்டவசமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை. காங்கிரஸ் கட்சி இந்த ஒப்புமைகளிலிருந்து தன்னை முற்றிலும் விலக்கிக் கொள்கிறது, அவற்றை மறுக்கிறது," என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியிருக்கிறார். கூட்டணி கட்சிகளும் இந்தக் கூற்று தவறானது என்று கூறியது.
ஆந்திர தேர்தல் பிரசாரத்தில் சாம் பிட்ரோடா கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, "இன்று நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். யாராவது என்னைத் திட்டினால், நான் கோபப்படுவதில்லை. என்னால் பொறுத்துக் கொள்ள முடியும். ஆனால் இன்று இளவரசரின் (ராகுல் காந்தி) தத்துவஞானி (சாம் பிட்ரோடா) என்னை மிகவும் அவமானப்படுத்தியது எனக்குக் கோபத்தை மூட்டியுள்ளது," என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் குறிப்பிட்டும், ராகுல் காந்தியையும் காங்கிரஸ் கட்சியை குறிவைத்துத் தாக்கிப் பேசினார்.
இந்தச் சர்ச்சைக்கு மத்தியில் புதன்கிழமை (மே 8) மாலை சாம் பிட்ரோடா, காங்கிரஸ் கட்சியின் அயலக வாழ் இந்தியர்கள் பிரிவுத் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளதாகவும், சுயமாக எடுத்த அவரது முடிவை காங்கிரஸ் தலைவர் ஏற்றுக்கொண்டார் என்று தெரிவித்திருத்தது குறிப்பிடத்தக்கது.
பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சை
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய அளவில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து மூன்று சட்டங்களையும் அமல்படுத்தாமல் கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இதையடுத்து "நாட்டில் வலுவான தலைமை இருந்திருக்காவிட்டால், மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம் வங்கதேசத்தில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையை நம் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும். விவசாயிகளின் போராட்டத்தின்போது உடல்கள் தொங்கவிடப்பட்டன. பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றன' என்று பாஜக எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
கங்கனா ரணாவத்தின் கருத்துகள் மிகவும் கண்டிக்கத்தக்கவை. விவசாயத்தை அழிக்க நினைக்கும் தனது "தலைவர்களை' மகிழ்விப்பதற்காக இந்தக் கருத்துகளை கங்கனா அவ்வாறு தெரிவித்துள்ளார் என அகில இந்திய கிசான் சபா என்ற விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்தது.
பாஜக மீது ராகுல் விமர்சனம்
,"விவசாய சட்டங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்தவர்களை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் போலவும் வெளிநாட்டினரின் கைகூலிகளாக செயல்பட்டவர்களாகவும் பாஜக எம்.பி. ஒருவர் சித்தரித்துள்ளார்.
இது, விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் மனநிலையை வெளிக்காட்டியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிப்பது குறித்த எந்த முன்னெடுப்பையும் மத்திய அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை. போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு தொடர்ந்து மோடி அரசு துரோகம் இழைத்து வருகிறது. எம்எஸ்பிக்கான சட்ட உத்தரவாதத்தை வழங்க இண்டியா கூட்டணி தொடர்ந்து போராடும்' என குறிப்பிட்டார். என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்தார்.
கங்கனா கருத்தில் உடன்பாடில்லை: பாஜக
இதனிடையே, "விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக பாஜக எம்.பி. கங்கனா ரணாவத் தெரிவித்துள்ள கருத்து பாஜகவின் கருத்து அல்ல. அவர் தெரிவித்த கருத்து எங்களுக்கு ஏற்புடையது அல்ல.
கட்சியின் கொள்கை விவகாரங்கள் தொடர்பாக அறிக்கை வெளியிடும் அதிகாரம் கங்கனாவுக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிக்க வேண்டாம் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று பாஜக அறிக்கை வெளியிட்டது.
கங்கனாவை கன்னத்தில் அறைந்த சிஐஎஸ்எஃப் பெண் காவலா்
ஹிமாசல பிரதேசம், மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் வேட்பாளரைவிட சுமாா் 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.
இதையொட்டி, பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்க தில்லி புறப்படுவதற்கு கங்கனா, சண்டீகா் விமான நிலையம் வந்தாா்.
விமானத்தில் ஏறும்முன் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையின்போது, அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையின் பெண் காவலா் கங்கனாவை கன்னத்தில் அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ‘மத்திய அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள்’ என்று தெரிவித்த கருத்துக்காக கங்கனாவை அந்தக் காவலா் தாக்கியதாக கூறப்பட்டது.
முஸ்லீம்கள் வாழும் பகுதி பாகிஸ்தான் - உயர்நீதிமன்ற நீதிபதி சர்ச்சை கருத்து
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாச ஆச்சார் ஸ்ரீஷானந்தா, நில உரிமையாளர் – குத்தகைதாரர் தொடர்பான ஒரு வழக்கு விசாரணையின்போது, முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பெங்களூருவின் கோரிபாளையா பகுதியை பாகிஸ்தான் என்று கூறியிருந்தார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், நீதிபதியின் சர்ச்சை கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் இது குறித்து இரண்டு வாரத்துக்குள் அறிக்கை அளிக்குமாறு உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது.
பகிரங்க மன்னிப்பு கேட்ட நீதிபதி ஸ்ரீஷானந்தா
இதையடுத்து ஸ்ரீஷானந்தா தனது கருத்துகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோரியதை அடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
பெண் வழக்குரைஞா் குறித்து நீதிபதி சா்ச்சை கருத்து
ஒரு வழக்கின் விசாரணையின்போது இடை மறித்த பெண் வழக்குரைஞரை பார்த்து, உள்ளாடை குறித்து அருவருக்கத்தக்க வகையில் கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி வி. ஸ்ரீஷானந்தாவின் கருத்துகளைத் தெரிவித்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி. ஆா்.கவாய், சூா்ய காந்த் மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்தது
“உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கருத்துக் கட்டுப்பாடு தேவை. நீதிபதிகள் எத்தகைய கருத்துகளை தெரிவிக்க வேண்டுமென வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. நாம் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் வைத்து செயல்படுங்கள்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முஸ்லீம்கள் குறித்த மோடியின் பேச்சு
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி 110 உரைகளில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துகளை பகிர்ந்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
குறிப்பாக, ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடந்த பிரசாரத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லீம்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என சொன்னார்கள். அதாவது சொத்துகளை வசூலித்த பிறகு, அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்?. தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தங்கத்தை எடுத்து நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும் விநியோகம் செய்ய காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அவ்வாறு பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா? உங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு வழங்கப்படும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மோடி பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது. நாடு முழுவதும் பிரதமர் மோடி வெறுப்புப் பிரசாரத்தை செய்வதாகவும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் மோடியின் மேடைப் பேச்சை விமர்சித்தது.
“மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், உச்சநீதிமன்ற முடிவுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவது உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 16 புகார்களை அளித்துள்ளோம்" என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
‘பிளவுபட்டால் நாம் வீழ்ச்சி அடைகிறோம்’- யோகி ஆதித்யநாத்
மகாராஷ்ரம் பேரவைத் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘பட்டேங்கே தோ கட்டங்கே'- ‘பிளவுபட்டால் நாம் வீழ்ச்சி அடைகிறோம்’ எனும் முழக்கத்தைப் பயன்படுத்தினார். பிரதமர் மோடி இந்த முழக்கத்தை சிறிது மாற்றி, நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் என பேசி வந்தார்.
இந்துக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த முழக்கத்தை பாஜக தலைவர்கள் பலர் பிரசாரத்தில் பயன்படுத்தினர்.
ஆனால், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. மகாயுதியின் கூட்டணிக்குள்ளேயே யோகி ஆதித்யநாத்துக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. உத்தரப்பிரதேச அரசியல் களம் வேறு, மகாராஷ்டிரம் அரசியல் களம் வேறு. இது போன்ற முழக்கங்கள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது என கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
யோகியின் முழக்கத்திற்கு அதிருப்தியை தெரிவித்த மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ முண்டே, ஒரே கட்சியைச் சேர்ந்தவர் என்பதற்காகவெல்லாம் நான் ஆதரிக்க மாட்டேன். நாம் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். இதுபோன்ற பேச்சுக்களை மகாராஷ்டிராவில் கொண்டு வரத் தேவையில்லை. எனது அரசியல் வேறு என தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் இந்த முழக்கம் செல்லாது
பாஜக கூட்டணிக் கட்சித் தலைவரான அஜித் பவார், “நான் இதுபோன்ற பேச்சுகளை ஆதரிக்கமாட்டேன். இது உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற வேறு மாநிலங்களில் வேண்டுமானால் செல்லலாம். மகாராஷ்டிரத்தில் செல்லாது என நான் பலமுறை கூறியுள்ளேன். மகாராஷ்டிரம் என்பது புனிதர்கள் சிவாஜி, பாபாசாகேப் அம்பேத்கர் போன்றோரின் மாநிலம். அவர்களது போதனைகள் எங்களது ரத்தத்தில் உள்ளது என தெரிவித்தார்.
மல்லிகார்ஜூன கார்கே
யோகியின் முழக்கம், பிரிவினை முழக்கமா அல்லது பிரதமர் மோடியின் ஒற்றுமை முழக்கமா? இருவரும் பேசி, இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யவும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.
பாஜக தலைவர்களின் கருத்துகளினால் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதால், ஆதித்யநாத்தின் இந்த முழக்கம் மகாயுதி கூட்டணிக்கு ஆபத்தாக இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மா
மக்களவைத் தேர்தலின்போது, “நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை, என்னை இந்த பூமிக்கு அனுப்பியது அந்த பரமாத்மா தான்” என்று பிரதமர் மோடி கூறியது வைரலானது.
'நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றுகிறீர்கள். உங்களின் ஆற்றலுக்கு என்ன காரணம்?' என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “என் தாய் உயிருடன் இருக்கும் வரை தாய் மூலமாக தான் இந்த உலகுக்கு வந்தேன் என்று நம்பினேன். ஆனால்,
அவரது இறப்புக்கு பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன்.
நான் பயோலாஜிக்கலாக பிறக்கவில்லை. என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த பரமாத்மா தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும்” என்று கூறினார். இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பேசும்பொருளானது.
முன்னதாக, ஒடிசா மாநிலம் புரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான சாம்பித் பத்ரா, "புரி ஜெகந்நாதர் பிரதமர் மோடியின் தீவிர பக்தர்" என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதனால் சில மணிநேரங்களில், "பிரதமர் மோடி புரி ஜெகந்நாதரின் பக்தர் என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டேன்" என்று விளக்கமளித்தார். இந்த நிலையில்,மோடி தன்னை ன்னை இந்த பூமிக்கு அனுப்பியது அந்த பரமாத்மா தான் என கூறியிருப்பது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
மோடியின் கருத்தை கடுமையாக விமர்சித்த ராகுல்காந்தி, “சாதாரண மனிதர் இதைக் கூறியிருந்தால் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருப்பார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
மோடியும்,பாஜக மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, “நரேந்திர மோடி ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. பாஜக ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல. ஆர்எஸ்எஸ் ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதி அல்ல.பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்பவர்கள், 24 மணி நேரங்களும் வன்முறை, வெறுப்பு மற்றும் பொய்களை பரப்பி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் இந்துக்களாக இருக்க முடியாது” என பாஜகவினரைக் குறிப்பிட்டு பேசினார்.
ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல்காந்தி அவமதித்துவிட்டதாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா எதிர்ப்பு தெரிவித்தனர். பாஜவகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ராகுல் பேசும்போதே இடைமறித்து பேசிய பிரதமர் மோடி, "இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது" என்று கூறினார்.
பாஜகவினர் ராகுல்காந்திக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்க, காங்கிரஸ் கட்சியினர், ராகுல்காந்தி பேசிய முழுவிடியோவையும் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்து பதிலடி கொடுத்தனர்.
சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்
கடந்த குளிர்காலக் கூட்டத்தில் மாநிலங்களவையில் அரசமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டு குறித்த விவாதத்தில் சில கருத்துகளை அமித் ஷா குறிப்பிட்டார். அப்போது,“இந்த காலத்தில் அம்பேத்கர் என கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கா் பெயரை எதிா்க்கட்சியினா் உச்சரிப்பதற்குப் பதிலாக கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் சொா்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என்றாா்.
அமித்ஷாவின் பேச்சு காட்டுத்தீ போல நாடெங்கும் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அம்பேத்கரை அமித் ஷா இழிவுபடுத்திவிட்டார்; அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும், பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
அடுத்த நாள் நாடாளுமன்ற நுழைவு வாயிலொன்றில் அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்; பதவி விலக வேண்டும் என ஒருபக்கம் எதிர்க்கட்சியினரும் இன்னொரு பக்கம் ஆளுங்கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாருக்கு எப்படிக் காயம் பட்டது?
எதிர்க்கட்சி - ஆளுங்கட்சியினரின் போராட்டத்தில் பாஜக எம்.பி.க்களில் இருவர் தாக்கப்பட்டதாகவும், பிரதாப் சந்திர சாரங்கி என்கிற எம்.பி.யோ ராம் மனோகர் லோகியா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார்.
இந்த தகராறின்போது ராகுல் காந்தி தாக்கியதில் சாரங்கி காயமடைந்ததாக தகவல்கள் பரவியது. ராகுல் காந்தி மீது காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. இதனால் அம்பேத்கர் குறித்த அமித்ஷாவின் பேச்சு பிரச்னையின் தீவிரம் குறைந்து மோதல் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
விபத்து குறித்து கட்டுரை எழுதுவது தண்டனையா?
புணே கல்யாணி நகர் பகுதியில் அதிகாலையில் பைக் மீது சொகுசு கார் மோதியதில், இரண்டு இளம் ஐடி பொறியாளர்கள் பலியாகினர். விபத்தை ஏற்படுத்திய சிறுவனை கைது செய்த காவல்துறையினர் சிறுவன் என்றும், சம்பவத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.சிறுவனின் தந்தை தொழிலதிபர் விஷால் அகர்வால் என்பதால் சிறுவனுக்கு பிரியாணி, பர்கர், பீசா போன்ற வகைவகையான உணவுகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். இந்த காணொலிகள் இணையத்தில் வைரலானது. பின்னர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
“பேருந்து, லாரி, ஆட்டோ, ஓலா, யூபர் ஓட்டுநர்கள் தவறுதலாக விபத்தை ஏற்படுத்தி ஒருவர் உயிரிழக்க நேரிட்டால், அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், பணக்கார வீட்டு குழந்தை மதுபோதையில் காரை இயக்கி இருவரை கொலை செய்ததற்கு சாலை விபத்து குறித்து கட்டுரை எழுதுவது தண்டனையாக வழங்கப்பட்டது கடும் விவாதத்துக்கு உள்ளானது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், சிறுவனின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து 48 மணிநேரத்துக்கு பிறகு கைது செய்யப்பட்டார். சிறுவனுக்கு மதுபானம் அளித்த இரண்டு பார்களும் சீல் வைக்கப்பட்டு உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீதிகூட பணத்தை சார்ந்துள்ளது - ராகுல் காந்தி
நீதிகூட பணத்தை சார்ந்ததாக இருப்பதாக விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி,பிரதமர் மோடியிடம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் தனித்தனியே இரு இந்தியா உருவாக்கப்படுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அனைத்து மக்களையும் ஏழைகளாக்க வேண்டுமா” என்று பதிலளித்தார்.
ஆனால், கேள்வி நீதியைப் பற்றியது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான நீதி கிடைக்க வேண்டும். இந்த அநீதிக்கு எதிராகதான் நாம் போராடிக் கொண்டுள்ளோம்.” என ராகுல் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் தேசத்தந்தை மகாத்மா காந்தி: பிரபல பாடகர் சர்ச்சை பேச்சு
ஷாருக்கானின் ஆஸ்தானப் பாடகர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபல பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா ஹிந்தி மற்றும் பெங்காளி மொழிகளில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.
இவர் சமீபத்தில் ஒரு பாட்கேஸ்ட்டில் பேசியபோது, “இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் மகாத்மா காந்தியை விடவும் மேலானவர். மகாத்மா காந்தியை எப்படி தேசத் தந்தை என்று அழைக்கிறோமோ அதேபோல இசையுலக தேசத்தின் தந்தை ஆர்.டி.பர்மன் ஆவார்” என்றார்.
மேலும், “மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தேசத்தந்தை. இந்தியாவிற்கு அல்ல. இந்தியா முன்பிருந்தே இங்கிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்டது. காந்தியைத் தவறுதலாக இந்தியாவின் தேசத்தந்தை என அழைக்கிறோம். அவர் பாகிஸ்தானின் இருப்புக்கு காரணமானவர்” என்று பேசினார்.
மகாத்மா காந்தி குறித்து அவர் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, அபிஜித் மீது சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்னும் சில நாள்களில் விடைபெற போகும் 2024 இல் அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்சம் கொடுத்ததாக அதானி குழுமத்தின் கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிந்த விவகாரம், கட்டுக்குள் கொண்டுவர மனமில்லாத மணிப்பூர் கலவரம், சம்பல் நகர வன்முறை, அமெரிக்க பணக்காரர் சோரஸ் விவகாரம், வரலாற்றில் இதுவரையில்லாத வகையில் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்துக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தது.பின்னர், அதை மாநிலங்களவைத் துணைத் தலைவர் நிராகரித்தார். அடுத்த கூட்டத் தொடரிலும் மீண்டும் நோட்டீஸ் அளிக்கப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளது, சர்ச்சைக்குரிய ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தி, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகும் நிறைவேற்ற செய்தது.
தமிழகத்தில் 'கூட்டணி ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என கூறும் விடியோவை தொல்.திருமாவளவன் மீண்டும் பதிவிட்டது,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து செல்லும் விவகாரம், தவெக தலைவர் விஜய் குறித்து நாதக தலைவர் சீமான் பேசியது,
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-யிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சமீபத்தில் சென்னையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, 'தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது, அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என்று சர்சைக்குரிய வகையில் கூட்டணியில் உள்ள திமுக குறித்துப் பேசியது தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து திருமாவளவன் அறிவித்தது,
அம்பேத்கர் புத்தக வெளியீடு விழாவில் திமுகவின் கூட்டணி கணக்கை மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என விஜய் பேசியது,
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என முதல்வர் ஸ்டாலின் பேசியது,
ஒவ்வொரு முறையும் தோ்தல் நெருங்கும் நிலையில் வன்னிய சமூக மக்களை பகடைக்காயாக வைத்து, கூட்டணி பேரத்தை வலுப்படுத்த பாமக நிறுவனரும், அதன் தலைவரும் பேரம் பேசுவா். அதன்படி, இப்போதே அடுத்தத் தோ்தலுக்கு அவா்கள் ஆயத்தமாகி விட்டாா்கள் அமைச்சா் சிவசங்கா் தெரிவித்தது,
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிண்டி பொறியியல் கல்லூரி’ விடுதியில் தங்கி பி.இ. இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது விரட்டி பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம், இது தொடர்பான மாணவர்கள், எதிர்க்கட்சிகளின் போராட்டம்,
திமுக அரசைக் கண்டித்து (டிச.27) தனக்குத்தானே சாட்டையால் அடித்துக்கொள்ளும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் என பாஜக தலைவர் அண்ணாமலை சூளுரைத்தது போன்ற பரபரப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் வரும் ஆண்டுகளிலும் பஞ்சம் இருக்காது என்பதே நிதர்சனம்!