Cricket India 2024: உலகக்கோப்பை வெற்றி முதல் அஷ்வினின் ஓய்வு வரை - இந்திய அணியின் டாப் 5 மொமன்ட்ஸ்
மெல்பர்ன் பாக்சிங் டே டெஸ்ட்டோடு 2024 ஆம் ஆண்டு முடிவடையவிருக்கிறது. இந்த 2024 ஆம் ஆண்டு பல விஷயங்களுக்காக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத வருடமாக மாறியிருக்கிறது. இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது தொடங்கி இந்த ஆண்டின் இந்திய கிரிக்கெட்டின் டாப் 5 மொமன்ட்ஸ் இங்கே:
டி20 உலகக்கோப்பை வெற்றி:
2007 க்குப் பிறகு இந்த ஆண்டு மீண்டும் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. இந்தியாவின் நீண்ட நாள் ஏக்கமும் முடிவுக்கு வந்தது. 2023 ஆம் ஆண்டிலேயே இந்திய அணி உலகக்கோப்பையை வென்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில், அந்த டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடந்திருந்தது. மேலும், இறுதிப்போட்டி வரைக்கும் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்றிருக்கவில்லை. இதனால் எப்படியும் இந்தியாதான் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஹமதாபாத்தில் லட்சம் ரசிகர்களையும் நான் அமைதிப்படுத்துவேன் என சவால்விட்ட பேட் கம்மின்ஸ், அதில் சாதித்தும் காட்டினார். டிராவிஸ் ஹெட் காட்டடி அடிக்க ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை வென்றது. அந்த உலகக்கோப்பை முடிந்த 6 மாதங்களுக்குள்ளாகவே இன்னொரு உலகக்கோப்பை. இந்த முறையாவது இந்திய அணி சாதிக்குமா என்கிற ஏக்கம் அனைவருக்கும் இருந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இறுதிப்போட்டி. ஒரு கட்டம் வரைக்கும் தென்னாப்பிரிக்கா பக்கம்தான் போட்டி இருந்தது. கிளாசென், மில்லர் என அவர்களின் மேட்ச் வின்னர்கள் நின்று பயமுறுத்தினார். ஆனால், இந்திய அணியின் காப்பானாக கலக்கி வந்த பும்ரா டெத் ஓவர்களில் மிரட்டி இந்திய அணியை வெல்ல வைத்தார். 2007 க்குப் பிறகு மீண்டும் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றது. ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த சமயத்தில் கோலியும் ரோஹித்தும் தாங்கள் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். விளையாட்டு சார்ந்து இந்த ஆண்டின் ஆகப்பெரும் நெகிழ்வான தருணம் அது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
கடந்த ஐ.பி.எல் சீசனின் பரபர பட்டாசாக இருந்த போட்டியென்றால் அது சென்னையும் பெங்களூருவும் மோதிக் கொண்ட கடைசி லீக் போட்டிதான். 2024 ஆம் ஆண்டில் இணையத்தில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகவும் இருந்தது. பெங்களூரு அணி சீசனின் ஆரம்பத்தில் கடுமையாக சொதப்பியிருந்தது. ஆனால், இரண்டாம் பாதியில் விஸ்வரூபம் எடுத்தது. வரிசையாக போட்டிகளை வென்று Do or Die கட்டத்தில் பெங்களூரு வந்து நின்றது. சென்னைக்கு எதிராக அவர்களுக்கு கடைசி லீக் போட்டி. ப்ளே ஆப் செல்ல பெங்களூரு அணி போட்டியை வெல்ல வேண்டும்.
சென்னை அணி தோற்றாலும் குறிப்பிட்ட ரன்களை எடுத்தால் போதும் எனும் நிலை. சென்னை அணி சேஸிங். போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியது. யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தையே தோனி சிக்சராக்கியிருந்தார். பந்து மைதானத்தின் கூரையில் விழும் அளவுக்கான பெரிய சிக்சர். அடுத்தப் பந்தையும் தோனி சிக்சருக்கு முயல பவுண்டரி லைனில் கேட்ச் ஆகிவிடுவார். ஜடேஜா களத்தில் நின்றும் பிரயோஜனமில்லை. பெங்களூரு அணி வென்றது. ஐ.பி.எல் கோப்பையையே வென்றதைப் போல பெங்களூரு அணி கொண்டாடித் தீர்த்து ப்ளே ஆப்க்குச் சென்றது.
ஹர்திக் - மும்பை - ரோஹித்:
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யாவை பண்டமாற்று முறையில் தங்கள் அணிக்கே மீண்டும் அழைத்து வந்தது மும்பை இந்தியன்ஸ். அத்தோடு நிற்காமல் ரோஹித்திடமிருந்து கேப்டன் பதவியை பிடுங்கி ஹர்திக் பாண்ட்யாவிடமும் கொடுத்தது. இதை மும்பை அணியின் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. மும்பையின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்திலேயே ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக அதிருப்தி ஒலிகளை எழுப்பினார்.
ஹர்திக் மீது நாலாப்பக்கமிருந்தும் விமர்சனக் கணைகள் பாய்ந்தன. அதற்கேற்ற வகையில் மும்பை அணியும் களத்தில் கடுமையாக சொதப்பியது. தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்தது. மும்பை இந்தியன்ஸ் அணியின் ஒவ்வொரு தோல்வியும் ஹர்திக் மீதான விமர்சனத்தை எகிற வைத்துக்கொண்டே இருந்தது. தன் மீதான விமர்சனங்களுக்கெல்லாம் உலகக்கோப்பை வெற்றியின் மூலம் ரோஹித் பதிலடி கொடுத்தார்.
ரிஷப் பண்ட்டின் எழுச்சி:
கார் விபத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் களத்துக்கு வந்து சேர்ந்தார். பெரும் விபத்திலிருந்து கடுமையான சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த போதிலும் பழையபடியே மீண்டும் அதிரடியாக ஆடி அசத்தினார். ஐ.பி.எல் இல் சிறப்பாக ஆடியவருக்கு உலகக்கோப்பையிலும் இடம் கிடைத்தது.
உலகக்கோப்பையிலும் ஒரு கீப்பராக ஸ்பைடர் மேன் எனப் பாராட்டும் வகையில் செயல்பட்டிருந்தார். சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல் ஏலத்திலும் வரலாறு காணாத அளவுக்கு 27 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். கிரிக்கெட் உலகின் ஆகச்சிறந்த கம்பேக் கதைகளில் ஒன்றாக ரிஷப் பண்ட்டின் கதையையும் எடுத்துக் கொள்ள முடியும்.
அஷ்வின் ஓய்வு:
இந்திய கிரிக்கெட்டின் மாபெரும் வீரர்களில் ஒருவரான அஷ்வின் சில நாட்களுக்கு முன்புதான் ஓய்வை அறிவித்தார். 100+ டெஸ்ட் போட்டிகள் மற்றும் 500+ விக்கெட்டுகள் என அசத்தியவர். இந்திய அணி தடுமாறிய போதெல்லாம் தன்னுடைய பங்களிப்பால் அணியைத் தூக்கி நிறுத்தியவர். 2011 உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி போன்றவற்றை இந்திய அணி வென்ற போது அந்த அணியில் துருப்புச்சீட்டாக இருந்தவர்.
எக்கச்சக்கமான சாதனைகளை செய்துவிட்ட அஷ்வினின் ஓய்வு கொண்டாடத்தக்க வகையில் இருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படியில்லாமல் பென்ச்சில் உட்கார வைத்தே அவரை ஓய்வை அறிவிக்க வைத்துவிட்டார்கள். ரசிகர்களுக்கு வருத்தம்தான். இருந்தாலும் அவர் செய்த சாதனைகளுக்காக அவரை காலமெல்லாம் கொண்டாடலாம்.
2024 - ல் உங்களுக்கு மறக்க முடியாத கிரிக்கெட் மொமன்ட் என்றால் அது எது என்பதைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!