Champions Trophy Table : நீண்ட இழுபறிக்கு பின் வெளியான சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை - முழு விவரம்
நீண்ட இழுபறிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டிருக்கிறது. இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் வைத்தே நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் வைத்து நடக்கும் என 2021 ஆம் ஆண்டே முடிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால், பிசிசிஐ இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்தே வந்தது. பாகிஸ்தான் தரப்பில் எங்கள் அணி மட்டும் இந்தியாவுக்கு சென்று ஆடுகிறது. அவர்கள் மட்டும் பாகிஸ்தான் வரமாட்டார்களா எனும் வாதம் முன்வைக்கப்பட்டது. பிசிசிஐ தரப்பில் இந்தியா ஆடும் போட்டிகள் மட்டும் பொதுவான ஒரு மைதானத்தில் நடத்தப்பட வேண்டும் என கேட்கப்பட்டது. இதனால்தான் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணையை அறிவிப்பதில் ஐ.சி.சி தாமதப்படுத்தி வந்தது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு பிசிசிஐயின் கோரிக்கையை ஐ.சி.சி ஏற்றது. இந்தியா ஆடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்திக் கொள்ளலாம் என முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டி அட்டவணையை ஐ.சி.சி இப்போது வெளியிட்டுள்ளது.
மொத்தமாக 15 போட்டிகள் நடைபெறவிருக்கிறது. பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டி என மூன்று மைதானங்களிலும் அதுபோக இந்தியா ஆடும் போட்டிகள் துபாயிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் தொடர் மார்ச் 9 வரை நடக்கவிருக்கிறது. இந்திய அணி பிப்ரவரி 20, 23 ஆகிய தேதிகளில் வங்கதேசத்தையும் பாகிஸ்தானையும் எதிர்கொள்கிறது. மார்ச் 2 ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
ஒரு அரையிறுதி துபாயிலும் இன்னொரு அரையிறுதி லாகூரிலும் நடக்கிறது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெறும்பட்சத்தில் அந்த அணி ஆடும் அரையிறுதிப் போட்டி லாகூரில் நடக்கும். பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றால் லாகூரிலும் இல்லையெனில் இறுதிப்போட்டி துபாயிலும் நடைபெறும் என அறிவித்திருக்கிறார்கள்.