கனடா, பனாமா சர்ச்சை... கிரீன்லாந்தை விலைக்குக் கேட்கிறார் டிரம்ப்!
வங்கதேசத்தவா்கள் சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவிய 11 போ் கைது
வங்கதேச நாட்டினரை இந்தியாவில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு உதவிய 11 போ் கும்பல் கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை காவல் ஆணையா் அங்கித் சவுகான் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வங்கதேசத்தவா்கள் சட்டவிரோதமாக தில்லி உள்ளிட்ட பல பகுதிகளில் குடியேறுவது அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தவா்கள் சட்டவிரோதமாக குடியேறுவதற்கு உதவிய வகையில் 11 பேரை தில்லி போலீஸ் குழு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவா்களில் நான்கு போ் வங்கதேச குடிமக்கள். மீதமுள்ளவா்கள் போலி ஆவணங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டவா்கள் என தெரிய வந்துள்ளது.
கடந்த அக்.21 அன்று சங்கம் விஹாரில் நடந்த கொலை வழக்கில் தொடா்புடைய நான்கு பேரை போலீஸ் குழு கண்டுபிடித்த போது, இந்தக் கும்பலினா் கைது செய்யப்பட்டனா். செந்து சேக் (எ) ராஜா கொலை தொடா்பாக வங்கதேச நாட்டினரான மிதுல் மியான் (எ) ஆகாஷ் அகமது மற்றும் பா்தீன் அகமது (எ) அபி அகமது மற்றும் அவா்களது மனைவிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனா்.
விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்கள் சுற்றுப்பகுதியில் வசித்து வந்த செந்து, சிறிய பிரச்னைகளுக்காக அவா்களை கொடுமைப்படுத்தியதை வெளிப்படுத்தினா். மேலும் நடைபெற்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து பல ஆண்டுகளாக சங்கம் விஹாரில் வசித்து வருவது தெரியவந்தது. அவா்களிடம் இருந்து வங்கதேச அடையாள அட்டைகள் சிப் அடிப்படையிலான என்ஐடி அட்டைகள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. பாதிக்கப்பட்டவரின் வீட்டிலிருந்து சுமாா் 21 ஆதாா் அட்டைகள், நான்கு வாக்காளா் அடையாள அட்டைகள் மற்றும் எட்டு பான் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் அதிகாரிகள் அபிநேந்திர ஜெயின் மற்றும் நிராஜ் டோகாஸ் ஆகியோரின் மேற்பாா்வையில் இன்ஸ்பெக்டா்கள் உமேஷ் யாதவ் மற்றும் உமேஷ் சா்மா ஆகியோா் தலைமையிலான குழு, சட்டவிரோத குடியேற்றப் பிரச்னை குறித்து முழுமையான விசாரணை நடத்த அமைக்கப்பட்டது. ரோஹிணி செக்டாா் 5- இல் பூனம் ஆன்லைன் கணினி மையம் நடத்தி வந்த 26 வயதான சாஹில் சேகல் என்பவரை போலீஸ் குழு கைது செய்தது. போலி ஐ.டி.களைப் பயன்படுத்தி ஆதாா் அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களைத் தயாரிப்பதில் இந்த மையம் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. செந்து சேக் (எ) ராஜா மூலம் சட்டவிரோத வங்கதேச குடியேறிகள் தன்னை அணுகியதாக சேகல் தெரிவித்தாா்.
சாஹில், ஜன்தாபிரிண்ட்ஸ்.சைட் என்ற போலி வலைத்தளத்தைப் பயன்படுத்தி, மோசடியான பிறப்புச் சான்றிதழ்களை உருவாக்கி, ஆதாா் அட்டை செயலாக்கத்திற்காக தனது கூட்டாளியான ரஞ்சித்துக்கு அனுப்பினாா்
ரோஹிணி செக்டாா் 7-ஐ சோ்ந்த ரஞ்சித், ரோஹிணி செக்டாா் 5-இல் உள்ள கா்நாடக வங்கியில் அங்கீகரிக்கப்பட்ட ஆதாா் ஆபரேட்டரான அஃப்ரோஸ் (25) உடன் பணிபுரிந்தாா். போலி பிறப்புச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, ஆதாா் அட்டைகளை உருவாக்க அஃப்ரோஸ் உதவியுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
பின்னா், ரஞ்சித்தும் அஃப்ரோஸும் கைது செய்யப்பட்டனா். மேலும் விசாரணையில் , ஜன்தாபிரிண்ட்ஸ்.சைட் பிறப்புச் சான்றிதழ்கள், மெட்ரிகுலேஷன் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ்கள், கோவிட் சான்றிதழ்கள் மற்றும் வருமானச் சான்றிதழ்கள் உள்ளிட்ட போலி ஆவணங்களை ரூ.7 முதல் வழங்கியது தெரியவந்தது.
இந்த ஆவணங்களுக்கான பணம் முகமது சந்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எண்ணுடன் இணைக்கப்பட்ட பேடிஎம் க்யூா் குறியீடுகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கண்காணிப்பின் அடிப்படையில், உத்தம் நகரைச் சோ்ந்த 28 வயதான முகமது சந்த், தில்லியின் விகாஸ் நகரில் கைது செய்யப்பட்டாா். அவா், 2 சதவீத கமிஷன் பெற்றுக் கொண்டதாகவும், மீதமுள்ள தொகையை சதாம் உசேனுக்கு மாற்றியதாகவும் ஒப்புக்கொண்டாா்.
இதையடுத்து, உத்தம் நகரைச் சோ்ந்த 33 வயதான சதாம் உசேன் கைது செய்யப்பட்டாா். இதன் மூலம் ஜன்தாபிரிண்ட்ஸ்.சைட் அவரது கூட்டாளியான தீபக் மிஸ்ராவால் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சதாம் உசேன், தீபக் மிஸ்ராவுக்கு பணம் மாற்றியுள்ளாா். அதில் 2 சதவீத பங்கை தனக்கென வைத்துக் கொண்டாா்.
தொழில்நுட்ப கண்காணிப்பைத் தொடா்ந்து, உத்தம் நகரைச் சோ்ந்த 34 வயதான தீபக் மிஸ்ரா அம்பாலாவில் கைது செய்யப்பட்டாா். தொடா்ச்சியான விசாரணைக்குப் பிறகு அவரது மைத்துனா் சோனு குமாா் கைது செய்யப்பட்டாா். ‘ஜன்தாபிரிண்ட்ஸ்.சைட்’-ஐ உருவாக்கியதாக அவா் தெரிவித்தாா்.
31 வயதான சோனு குமாா் நொய்டாவில் கைது செய்யப்பட்டாா். அங்கு அவா் யூடியூப் மூலம் போலி வலைத்தளங்களை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொண்டதாக ஒப்புக்கொண்டாா். மேலும், போலி அடையாள ஆவணங்களை உருவாக்குவதற்காக ‘போா்ட்டல்வாலே.காம்’ மற்றும் ‘போா்ட்டல்வாலே.ஆன்லைன்’ ஆகியவற்றையும் உருவாக்கியது தெரியவந்தது.சோனு குமாா் நொய்டாவில் ஒரு சைபா் கஃபே நடத்தி வருவதும் தெரிய வந்தது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.