செய்திகள் :

கனடா, பனாமா சர்ச்சை... கிரீன்லாந்தை விலைக்குக் கேட்கிறார் டிரம்ப்!

post image

அமெரிக்காவின் புதிய அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதிதான் இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கப் போகிறார் டொனால்ட் டிரம்ப். ஆனால், அதற்குள்ளாகவே அதிரடியான அறிவிப்புகளை - கருத்துகளை வெளியிட்டுப் பல நாடுகளையும் தலைவர்களையும் கலங்கடித்துக் கொண்டிருக்கிறார்.

ஏற்கெனவே, நாட்டின் உயர் பொறுப்புகளுக்கான அவருடைய நியமனங்களுமே பெருமளவில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறாரோ என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அண்மையில் அடுத்தடுத்து அவர் வெளியிட்ட மூன்று கருத்துகள் – உள்ளபடியே பலரையும் ஆடிப் போகச் செய்திருக்கின்றன.

டென்மார்க் நாட்டிடமிருந்து அமெரிக்காவுக்காக கிரீன்லாந்தை விலைக்கு வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் டொனால்ட் டிரம்ப். ஏற்கெனவே கடந்த முறை அதிபராக இருந்தபோது முயன்று முடியாமல்போன விஷயம்தான் இது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை டென்மார்க் நாட்டிற்கான அமெரிக்கத் தூதரை அறிவித்த டிரம்ப், கூடவே நாட்டின் பாதுகாப்பு மற்றும் உலகம் முழுவதற்குமான சுதந்திரம் ஆகியவற்றுக்காக கிரீன்லாந்து மீதான உரிமையும் கட்டுப்பாடும் மிகவும் அவசியம் என்று அமெரிக்கா கருதுகிறது என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பனாமா பற்றியொரு சர்ச்சையைக் கிளப்பிய டிரம்ப், அட்லான்டிக் – பசிபிக் பெருங்கடல்களை இணைக்கும் பனாமா கால்வாயைப் பயன்படுத்துவதற்கான கப்பல் கட்டணச் செலவைக் குறைக்காவிட்டால், பனாமா கால்வாய் மீதான உரிமையை மீண்டும் அமெரிக்காவே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு சில நாள்கள் முன்னதாகத்தான், கனடாவை அமெரிக்காவின் 51-வது மாகாணமாகவும் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை கனடா பெரு மாகாணத்தின் ஆளுநர் என்றும் குறிப்பிட்டார் டிரம்ப்.

அட்லான்டிக் பெருங்கடலுக்கும் ஆர்க்டிக் பெருங்கடலுக்கும் இடையிலுள்ள உலகின் மிகப் பெரிய தீவுதான் கிரீன்லாந்து. இந்தத் தீவின் 80 சதவிகிதப் பரப்பு பனிக்கட்டியால் போர்த்தப்பட்டிருக்கிறது. டென்மார்க் நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ், 1979 முதல், ஓரளவு தன்னாட்சி பெற்றதாக இருக்கிறது கிரீன்லாந்து.

கிரீன்லாந்து...

கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது பற்றிய டிரம்பின் தற்போதைய பேச்சும், அவருடைய முந்தைய ஆட்சிக்காலத்தில் சொன்னதைப் போலவே பொருளற்றது என்று கிரீன்லாந்தின் பிரதமர் முச்ச பெ ஈகே குறிப்பிட்டுள்ளார்.

கிரீன்லாந்து எங்களுடைய நாடு. நாங்கள் விற்பனைக்கு அல்ல: ஒருபோதும் விற்பனைக்கு இணங்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ள முச்ச பெ ஈகே, ஆண்டாண்டு கால சுதந்திரத்தை எந்நாளும் இழக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் பிரதமர் அலுவலகமோ, அமெரிக்க தூதரை வரவேற்க, புதிய நிர்வாகத்துடன் ஒத்துழைக்கக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளதுடன்  அல்லாமல், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல; ஒத்துழைக்கத் தயார் என்பதைத் தவிர வேறெந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

முந்தைய ஆட்சிக் காலத்தில் கிரீன்லாந்தை விலைக்கு வாங்கப் போவதாக அறிவித்த டிரம்ப்பின் யோசனையை டென்மார்க் அரசு நிராகரித்துவிட்டதைத் தொடர்ந்து, 2019-ல் தன்னுடைய டென்மார்க் பயணத்தை டிரம்ப் ரத்து செய்துவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது. இப்போது மீண்டும் அவர்  கிரீன்லாந்தின் உரிமை பற்றிப் பேசத் தொடங்கியுள்ளார்.

இதைப் போலவேதான் பனாமா கால்வாய்ப் பிரச்சினையும்.

அமெரிக்கா தாராள மனதுடன் ஒப்படைத்த பனாமா கால்வாய் விஷயத்தில்  சட்டப்படியும் நியாயப்படியும் பனாமா நாடு நடந்துகொள்ளாவிட்டால், எந்தக் கேள்விக்கும் இடமின்றி, உடனடியாக, முழுமையாக பனாமா கால்வாயை அமெரிக்காவுக்குத் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் அதிபர் (தேர்வு) டிரம்ப்.

பனாமா கால்வாய்

இதற்கு விடியோ செய்தியொன்றின் மூலம் எதிர்வினையாற்றிய பனாமா அதிபர் ஜோஸே ரௌல் முலீனோ, கால்வாயின் ஒவ்வொரு சதுர மீட்டரும்  பனாமாவுக்குச் சொந்தம், அது அவ்வாறே தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கும் சமூக ஊடகத்தில் உடனடியாகப் பதிலளித்த டிரம்ப், அதையும் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கால்வாய்ப் பகுதியில் அமெரிக்க கால்வாய் வரவேற்கிறது என்ற வரியுடன் அமெரிக்க கொடி நடப்பட்டுள்ள படத்தையும் டிரம்ப் பகிர்ந்திருக்கிறார்.

பசிபிக் – அட்லான்டிக் பெருங்கடல்களை மிகச் சுருக்கமாக இணைக்கும் இந்தக் கால்வாயை 1900-களின் தொடக்கத்தில் அமெரிக்கா உருவாக்கியது. 1977-ல் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் செய்துகொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் 1999, டிச. 31-ல் கால்வாயின் உரிமையையும் கட்டுப்பாட்டையும் பனாமா நாட்டிடமே அமெரிக்கா ஒப்படைத்துவிட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டில் வறட்சி காரணமாக நேரிட்ட தண்ணீர்ப் பிரச்சினையால் கால்வாய் வழியே கடந்துசெல்லும் கப்பல்களுக்கான கட்டணத்தை பனாமா உயர்த்தியது.

இவ்விரண்டு சர்ச்சைகளுக்குமான முன்னோட்டம் கனடா விஷயத்திலேயே தொடங்கிவிட்டது.

கனடா நாட்டுக் கொடிக்கு அருகேயுள்ள பகுதியை அளவிடுவது போன்ற  தன்னுடைய படத்துடன், அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாற வேண்டும் என கனடா மக்கள் விரும்புகிறார்கள் என்று சமூக ஊடகத்தில் டிரம்ப் பகிர்ந்திருந்தார்.

கனடா நாட்டுப் பொருள்களின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்போவதாக அறிவித்த நிலையில், டொனால்ட் டிரம்ப்பை அண்மையில் சந்தித்துப் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோவோ, இல்லை, இல்லை, டிரம்ப் சும்மா ஜோக் அடிக்கிறார் என்று குறிப்பிட்டார்.

கனடா பற்றி உண்மையிலேயே டிரம்ப் ஜோக்கடித்தாரா? அல்லது சீரியஸாகவே அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாரா? என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால், அடுத்தடுத்து பனாமா கால்வாயைத் திரும்பப் பெறுவது, கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது பற்றியெல்லாம் அதிபராகப் பொறுப்பேற்கும் முன்னரே டொனால்ட் டிரம்ப் அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருப்பது அப்படியொன்றும் சாதாரணமான விஷயங்கள் அல்ல.

அனேமாக ஆட்டம் ஆரம்பமாகிவிட்டதுதான் போல!

தொலைநிலைப் பட்டம் ஆசிரியா் பணிக்கு ஏற்றதா?

எம். மாா்க் நெல்சன்தொலைநிலை வழியில் கல்வி பயின்று பெறப்படும் பட்டங்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியா் பணிகளுக்கு தகுதியுடையதா என்ற கேள்வி பல ஆண்டுகளாக தொக்கி நிற்கிறது.அரசுத் துறைகள் அல்லது தனியாா் துறைகளில்... மேலும் பார்க்க

டங்ஸ்டன் – ஒரு சூப்பர் மெட்டல்!

அதென்ன திடீரென மதுரை மாவட்டத்தில் இத்தனை ஊர்களையும் ஊர் மக்களையும் காலிசெய்து டங்ஸ்டன் சுரங்கம் தோண்ட வேண்டிய அவசியம்? உள்ளபடியே, அரிய வகை உலோகமான டங்ஸ்டனுடைய பயன்பாட்டையும் தேவைகளையும் சந்தை நிலவரத்த... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம்: மத்திய, மாநில அரசு கடிதங்களில் என்னதான் இருக்கிறது?

அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலத்தில் ஒரு விசாரணை கமிஷனே அமைத்து விசாரித்தாலும்கூட உண்மையில் என்ன நடந்தது என்று மக்களுக்குத் தெரிய வராது போல இருக்கிறது. அந்த அளவுக்கு திமுகவும் அதிமுகவும் மாறிமாறிக் க... மேலும் பார்க்க

வெளிப்படை, துணிவின் அடையாளம் ஈவிகேஎஸ்!

வெளிப்படைத்தன்மை, துணிவின் மறு உருவமாக விளங்கிய காங்கிரஸ் மூத்த தலைவா் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மறைவு அவா் சாா்ந்த காங்கிரஸ் கட்சி மற்றும் ஆதரவாளா்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரியாா் ஈ.வெ... மேலும் பார்க்க

சிரியாவின் வீழ்ச்சி உலகப்போரின் முதல்புள்ளியா? - பயமுறுத்தும் பாபா வங்காவின் ஆரூடம்!

பாபா வங்கா... இந்தப் பெயரை ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கிறீர்களா?பல்கேரியா நாட்டின் பெலாசிகா பகுதியைச் சேர்ந்த பெண்மணி இவர். சின்ன வயதில் கண் பார்வையை இழந்த பாபா வங்கா, வருங்கால உலகில் இனி என்னென்ன நடக்... மேலும் பார்க்க

பாதுகாப்பானதா, மினரல் வாட்டர்?

கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில், உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர பிரதாப் சிங் கலந்துகொண்ட ஒரு அலுவல் கூட்டத்தில் 'பில்செரி' என்று பெயரிடப்பட்ட ஒரு தண்ணீர் பாட்டில் அவரது மேஜையில... மேலும் பார்க்க