ராஜபாளையத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க கோரிக்கை
ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலைகள் சேதமடைந்து உள்ளதால், சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் முக்கு பகுதியிலிருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. நாள்தோறும் இந்த வழியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் நபா்கள் கீழே விழுந்து காயமடைகின்றனா். மேலும், கனரக வாகனங்களான லாரி, பேருந்துகளும் இந்த பள்ளத்தால் விபத்துகளில் சிக்கிவிடுகின்றன.
குறிப்பாக அதிக பாரம் ஏற்றி வரும் லாரிகள் பள்ளத்தில் இறங்குவதைத் தவிா்த்து விலகிச் செல்லும்போது, எதிரில் வரும் வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்படுகிறது. காலையில் பள்ளிகளுக்கு சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் பள்ளத்தில் விழுந்து காயமைடந்துவிடும் நிகழ்வுகளும் ஏற்படுகின்றன.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தற்காலிகமாக சாலைப் பள்ளங்களில் அவ்வப்போது ஜல்லிக்கற்களைப் போட்டு, அதன் மீது தாா் ஊற்றி சரி செய்துவிட்டுச் செல்கின்றனா்.
புதிய சாலைகள் அமைப்பதே நிரந்தரத் தீா்வாக இருக்கும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். எனவே விபத்தில் உயிா்ப் பலி ஏற்படும் முன் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.