கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
காந்தியடிகள்கூட இப்படி போராடமாட்டார்! அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை!! - திருமா
காந்தியடிகள்கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்ததில்லை என அண்ணாமலை போராட்டம் குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளியிட்டுள்ளதாகவும் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் பேசினார்.
பின்னர், திமுக அரசுக்கு எதிராக நாளை காலை 10 மணிக்கு தனக்குத்தானே 6 முறை சாட்டையால் அடித்துக்கொள்வதாகவும், திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் எனவும் சூளுரைத்துள்ளார்.
நாளை காலையில் இருந்து 48 நாள்களுக்கு விரதம் இருந்து கடவுள் முருகனிடம் முறையிடப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க | திமுகவுக்கு எதிராக சாட்டை அடி போராட்டம்: அண்ணாமலை
இந்நிலையில் அண்ணாமலையின் போராட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன்,
'லண்டன் சென்றுவிட்டு வந்த பிறகு அண்ணாமலைக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. ஏன் அவர் இப்படிப்பட்ட முடிவை எடுக்கிறார் என்பது வருத்தமளிக்கிறது. தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் அஹிம்சை வழி போராட்டத்தை காந்தியடிகளைப்போல கையில் எடுக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், காந்தியடிகள்கூட இப்படிப்பட்ட போராட்டங்களை அறிவித்ததில்லை. உண்ணாவிரத போராட்டம் சரி, தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொள்வது அதிர்ச்சியாக இருக்கிறது. அவருடைய போராட்ட அறிவிப்புகள் நகைப்புக்குரியவையாக மாறிவிடக்கூடாது.
அதிமுக எதிர்க்கட்சி அல்ல, பாஜகதான் எதிர்க்கட்சி என காட்டிக்கொள்ள முயல்கிறார் அண்ணாமலை. பரபரப்பான அரசியல் செய்ய விரும்புகிறார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது வேதனைக்குரியது. தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். அரசின் மீது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல. எப்ஐஆர் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றியதும் தவறு. அவ்வாறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை இதற்கு பொறுப்பேற்க வேண்டும்' என்று கூறினார்.