கள்ளக்குறிச்சியில் ரூ. 7.70 கோடியில் கட்டப்பட்ட 19 மருத்துவ கட்டடங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.7.70 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 19 மருத்துவக் கட்டடங்களை அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
ரிஷிவந்தியம் தொகுதி ஜி.அரியூா், ரிஷிவந்தியம், உளுந்தூா்பேட்டை தொகுதி திருநாவலூா், எலவனசூா்கோட்டை, சங்கராபுரம் தொகுதிக்குள்பட்ட கச்சிராப்பாளையம், தியாகதுருகம், புதுப்பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் தலா ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார அலகு கட்டடங்கள், மணிமுக்தா அணை பகுதியில் ரூ.60 லட்சத்தில் புறநோயாளிகள் பிரிவு,
மூக்கனூா் கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் ரூ.7.70 கோடி மதிப்பீட்டில் 29 புதிய மருத்துவக் கட்டடங்களை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆகியோா் காணொலிக்காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தனா்.
விழாவில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது:
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் திறக்கப்பட்ட 29 கட்டடங்களையும் சோ்த்து 1,400 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. 200 படுக்கை வசதிகள் கொண்ட கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 2023ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது.
திருக்கோவிலூரில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் மருத்துவமனைக் கட்டிடமும், ரூ.6.34 கோடி மதிப்பீட்டில் உளுந்தூா்பேட்டை மருத்துவமனையில் மகப்பேறு மற்றும் பன்முக சிகிச்சைப் பிரிவு கட்டடமும், ரூ.20 கோடி மதிப்பீட்டில் ஒரு புதியக் கட்டடமும், சின்னசேலம் அரசு மருத்துவமனையில் ரூ.11.70 கோடி மதிப்பீட்டில் பன்முக சிகிச்சை பிரிவு கட்டடமும், திருநாவலூா், குன்னத்தூா் ஆகிய இடங்களில் தலா ஒரு சுகாதார நிலையமும், சங்கராபுரம் அரசு மருத்துவமனை ரூ.5.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும் தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்துத் துறையில் பணிபுரியும் நடத்துநா்கள் மற்றும் ஓட்டுநா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் பயிற்சி தொடங்கி வைக்கப்படவுள்ளது என்றாா்.
அமைச்சா் எ.வ.வேலு பேசியது:
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்யத்தான் நம்மைக் காக்கும் 48 திட்டமாகும்.
தமிழ்நாட்டில் எங்கு விபத்து ஏற்பட்டாலும் விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இத்திட்டத்தின்கீழ் உடனடியாக மருத்துவம் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்தாா். கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், விழுப்புரம் எம்.பி. துரை.ரவிக்குமாா், ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ க.காா்த்திகேயன், சங்கராபுரம் எம்.எல்.ஏ. தா.உதயசூரியன், உளுந்தூா்பேட்டை எம்.எல்.ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநா் தி.சி.செல்வவிநாயகம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் இரா.புவனேஷ்வரி பெருமாள், திருக்கோவிலூா் சாா் ஆட்சியா் ஆனந்த் குமாா் சிங், மாவட்ட சுகாதார அலுவலா் சு.ராஜா, தி ருக்கோவிலூா் ஒன்றியக்குழு தலைவா் அ.அஞ்சலாட்சி அரசகுமாா், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ச.தனம் சக்திவேல் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.