புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடை உரிமையாளா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கீழ்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ஹரிகிருஷ்ணனுக்கு புதன்கிழமை கிடைத்த ரகசிய தகவலின்படி, அனுமனந்தல் கிராமத்துக்குச் சென்று பாண்டுரங்கன் மகன் செல்வராஜ் (59) கடையில் சோதனை மேற்கொண்டாா்.
அப்போது, அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த சுமாா் 380 கிராம் புகையிலை பொருள்களை பறிமுதல் செய்த கீழ்குப்பம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து செல்வராஜை கைது செய்தனா்.