Fitness: ``65 வயதில் 20 போல உணர்கிறேன்" - மூதாட்டியின் மிரளவைக்கும் புல்-அப்ஸ்; சீக்ரட் என்ன?
ஒரு வயதான பெண்மணியின் உடல் செயல்பாடுகளைப் பற்றிக்கேட்டால், அவர் குச்சியை வைத்துக்கொண்டு தடுமாறி நடப்பதுதான் உங்கள் நினைவுக்கு வரும். ஒரு கம்பியில் திடமாக புஷ்-அப் எடுப்பதை கற்பனை செய்து பார்க்கவே கடினம். ஆனால் அந்த அளவு வலிமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார் தெரசா புர்கெட் என்ற 65 வயது பெண்மணி.
குட் மார்னிங் அமெரிக்கா நிகழ்ச்சியில் தோன்றிய அவர், "நம் உடலை ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்வதற்கு எந்த வயது நிர்ணமும் செய்யப்படவில்லை" எனக் கூறியிருக்கிறார்.
இந்தஇந்த வயதினர் இந்த உடல் பயிற்சிகள் செய்ய வேண்டும் என வைத்திருக்கும் வரையறைகளை தாண்டி சாதனை செய்துள்ளார் தெரசா.
வயதாகும்போது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறுக்கம் ஏற்படுவது இயல்புதான் எல்லாரையும் போல தெரசாவும் அவற்றை அனுபவித்திருக்கிறார்.
ஆனால் அவர் ஒரு நொடியில், 'நம் முடி நரைத்தலோ தோல் சுருக்கங்களோ நம்மை வயதானவராக உணரவைப்பதில்லை, தசைகளில் வலிமை குன்றுவதே நம்மை வயதானவராக உணர வைக்கிறது' என உணர்ந்திருக்கிறார்.
மேலும், அவர் தொடர்ந்து உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதனால் அவரது வயதின் கட்டுப்பாடு அவர் கையில் இருப்பதுபோல உணர்வதாகக் கூறுகிறார்.
நாள்கள் நகருவதையும், வருடங்கள் ஓடுவதையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் நாம் எப்படி வயதானவர் ஆகிறோம் என்பதை நம்மால் முடிவு செய்ய முடியுமென்கிறார் Fitness Influencer தெரசா.
சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமே தனது முதுமையை எதிர்கொள்கிறார் அவர். உங்களது உடல் ஃபிட்டாக இருப்பதற்கும் வயதுக்கும் தொடர்பு இல்லை என்கிறார்.
"நான் ஒன்றும் தடகள வீராங்கனை அல்ல. என் 50 வயதுவரை கனமான எடைகளைத் தூக்கியதோ, புல்-அப்ஸ் செய்ததோ இல்லை. இது எல்லாமும் ஒரு மனநிலைதான். நீங்கள் 65 வயதில் 20 வயதைப்போல உணர முடியும். 20 வயதில் 65 போலவும் உணர முடியும்." என்றா தெரசா.
'ஏஜ் இஸ் ஜஸ்ட் அ நம்பர்' என்பதற்கு தெரசா ஒரு உதாரணம். அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. மற்றவர்களுக்கு அவர் இன்ஸ்பிரேஷன்.