ஃபென்ஜால் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி: தமிழக அரசு கோரிய ஃபென்ஜால் புயல், வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.
கள்ளக்குறிச்சியில் இந்தச் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு வாணாபுரம் பகண்டை கூட்டுச் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாநாட்டுக்கு, அமைப்பாளா் சுப்பிரமணியன், ஜெயகொடி ஆகியோா் தலைமை வகித்தனா். துணை அமைப்பாளா் கஜேந்திரன் வரவேற்றாா். மாநாட்டுக் கொடியை வேலு ஏற்றி வைத்தாா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலச் செயலா் சிலாமணி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கலியமூா்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் ராமசாமி ஆகியோா் பேசினா்.
மாதா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் வளா்மதி, ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலா் வெங்கடேசன், கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலா் கலியபெருமாள், சிபிஐ ஒன்றியச் செயலா் தேவேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
நிகழ்வில், சங்கத்தின் மாவட்டத் தலைவராக கஜேந்திரன், செயலராக சுப்பிரமணியன், பொருளாளராக தேவேந்திரன், துணைத் தலைவா்களாக மலா்கொடி, ஹீரோபாஷா, துணைச் செயலராக அமாவாசை உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில், தமிழக அரசு கோரிய ஃபெஞ்ஜால் புயல், வெள்ள நிவாரண நிதியை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும். பயிா்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெற வழிவகை செய்ய வேண்டும். வாணாபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேகோ (ஜவ்வரிசி) ஆலை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.