நிதீஷ் சதம், வாஷிங்டன் சுந்தர் அரைசதம்: ஃபாலோ-ஆனை தவிர்த்த ஆல்-ரவுண்டர்கள்!
2024 - டி20 சாம்பியன் முதல் உலக செஸ் சாம்பியன் வரை... முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை!
இந்த ஆண்டு விளையாட்டுத் துறையில் இந்திய அணி 11 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்றது முதல் தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றது வரை பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன.
இந்தியா - இங்கிலாந்து தொடர்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இங்கிலாந்து அணி அதன் பேஸ்பால் யுக்தியால் வெற்றிகளை குவித்து வந்தது. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் பேஸ்பால் யுக்தி பலனளிக்குமா என்ற கேள்வியுடன் இந்த தொடர் தொடங்கியது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, தொடர்ச்சியாக நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது இந்திய அணி. இங்கிலாந்தின் பேஸ்பேல் யுக்தி இந்தியாவிடம் பலனளிக்கவில்லை. இந்த தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருந்தார்.
ஐபிஎல் 2024 - கொல்கத்தா சாம்பியன்
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் அரங்கேறின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எம்.எஸ்.தோனி கேப்டனாக வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹார்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்தார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹார்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதால், ஐபிஎல் தொடர் முழுவதும் ஹார்திக் பாண்டியா ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளானார்.
இந்த ஐபிஎல் தொடரில் 200+ ரன்களை அணிகள் மிகவும் சாதரணமாக குவித்தன. அதிலும் குறிப்பாக, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிக ரன்கள் குவிப்பதில் ஒவ்வொரு போட்டிக்கும் புதிது புதிதாக சாதனைகளை படைத்துக்கொண்டே இருந்தது. லீக் சுற்றின் முடிவில் கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதிலிருந்து, கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத், இறுதிப்போட்டியில் 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மிட்செல் ஸ்டார்க் ஆட்ட நாயகனாகவும், சுனில் நரைன் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டி20 உலகக் கோப்பை - இந்தியா சாம்பியன்
கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அசைக்க முடியாத அணியாக தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஐசிசி கோப்பை கனவை உடைத்தது.
50 ஓவர் உலகக் கோப்பையை தவறவிட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த முறை அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரை குறிவைத்தது. பார்படாஸில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 11 ஆண்டுகளாக தொடர்ந்த ஐசிசி கோப்பைக்கான தேடலுக்கு இந்திய அணி முற்றுப்புள்ளி வைத்தது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடியை பிசிசிஐ பரிசுத் தொகையாக அறிவித்தது.
ராகுல் டிராவிட், மூத்த வீரர்கள் ஓய்வு
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட் , அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் தொடர விருப்பம் தெரிவிக்கவில்லை. 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தபோது, ராகுல் டிராவிட் அவரது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், அப்போதைய பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, ராகுல் டிராவிட் - ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை வரை தொடரும் என தெரிவித்தார். அதன் படி, டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த மகிழ்ச்சியுடன் ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்திய அணிக்காக ஐசிசி கோப்பையை வென்று கொடுத்தார். அதன் பின், 11 ஆண்டுகள் கழித்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி கோப்பையை வசமாக்கியுள்ளது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு தங்களது ஓய்வு முடிவை அறிவித்தனர்.
புதிய தலைமைப் பயிற்சியாளர்
டி20 உலகக் கோப்பை தொடர் நிறைவடைந்ததும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையடுத்து, இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக யார் நியமிக்கப்பட போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவர் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வலம் வந்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டார்.
சூர்யகுமார் யாதவ் கேப்டன்
டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். இதனையடுத்து, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்காக ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக செயல்பட்டார். இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வேவிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. அதன் பின், டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். மேலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் வெற்றிகளை குவித்து வருகிறது.
27 ஆண்டுகளுக்குப் பிறகு...
புதிய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணிக்கு இலங்கை அணி அதிர்ச்சி அளித்தது. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடந்த 27 ஆண்டுகளாக இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதியுள்ள 12 ஒருநாள் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. இலங்கைக்கு எதிராக தொடர்ந்து வந்த இந்திய அணியின் 27 ஆண்டுகால ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர் தோல்வி
டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இலங்கைக்கு எதிரான தொடரில் தோல்வியடைந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணியை இந்திய அணி எளிதில் 3-0 என வீழ்த்திவிடும் எனப் பலரும் எண்ணினர்.
யாரும் எதிர்பாராத விதமாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி இந்திய அணிக்கு அதிர்ச்சியளித்தது நியூசிலாந்து. இதன் மூலம், சொந்த மண்ணில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த இந்திய அணியின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. 2 அல்லது அதற்கும் மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய மண்ணில் முழுமையாக கைப்பற்றிய முதல் அணி என்ற வரலாற்று சாதனையை நியூசிலாந்து அணி படைத்தது. இந்த வரலாற்று தோல்விக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தலைமைப் பயிற்சியாளார் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச ஸ்கோர்
இந்த ஆண்டில் இந்திய அணி சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்தது. கடந்த அக்டோபர் மாதம் ஹைதராபாதில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் எடுத்தது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் 111 ரன்கள் எடுத்தார். அடுத்த மாதமே தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஜோஹன்ஸ்பெர்க்கில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி அதன் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எடுத்தது. அந்தப் போட்டியில் இந்திய அணி ஒரு விக்கெட்டினை இழந்து 283 ரன்கள் எடுத்தது.
800+ ரன்கள்
இங்கிலாந்து அணி கடந்த அக்டோபர் மாதத்தில் இருதரப்பு டெஸ்ட் தொடருக்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 823 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் இருவரும் மிகப் பெரிய இன்னிங்ஸ்கள் விளையாடினர். முதல் இன்னிங்ஸில் ஹாரி ப்ரூக் 317 ரன்களும், ஜோ ரூட் 262 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 800 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.
ஹாரி ப்ரூக் & ஜோ ரூட் சாதனை
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் முச்சதம் அடித்து அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட 32-வது முச்சதம் இதுவாகும். பாகிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு 335 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டேவிட் வார்னரின் முச்சதத்துக்குப் பிறகு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடிக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் ஹாரி ப்ரூக் - ஜோ ரூட் இடையிலான பார்னர்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த 4-வது மிகப் பெரிய பார்ட்னர்ஷிப் என்ற சாதனையை படைத்தது. ஹாரி ப்ரூக் - ஜோ ரூட் இணை 454 ரன்கள் எடுத்தது.
முதல் முறையாக 600+ ரன்கள்
கடந்த ஜூன் மாதத்தில் இந்திய மகளிரணி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 600 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை இந்திய மகளிரணி படைத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்
இந்த ஆண்டின் இறுதியில் இந்திய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வதோதராவில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் அவரது முதல் ஒருநாள் சதத்தினை பதிவு செய்தார். ஸ்மிருதி மந்தனா, பிரதீகா ராவல் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் எடுத்தனர்.
900 கோல்கள்
கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார். அவர் இந்த சாதனையை யுஇஎஃப்ஏ (UEFA) கால்பந்து தொடரில் குரோஷியாவுக்கு எதிரான போட்டியில் படைத்தார். போட்டியின் 34-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த அணியின் வெற்றிக்கான கோல் அவருக்கான தனிநபர் சாதனை கோலாகவும் மாறியது.
ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா சாம்பியன்
ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி என இரண்டுமே தங்கப் பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் அணி போட்டி நடத்திய சீனாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பிகாரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிரணி சாம்பியன் பட்டம் வென்றது.
பாரீஸ் ஒலிம்பிக் டிக்கெட் விற்பனை
இந்த ஆண்டு பாரீஸில் 33-வது ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே அதிகப்படியான டிக்கெட் விற்பனையை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் சந்தித்தது. பாரீஸ் ஒலிம்பிக் தடகளப் போட்டிகளுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
நீரஜ் சோப்ரா அசத்தல்
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த நீரஜ் சோப்ரா இந்த முறை பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இதன் மூலம், இந்தியாவுக்கு ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன. பாரீஸ் ஒலிம்பிக்கில் பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
மனு பாக்கர் சாதனை
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை பெற்றுத் தந்தார். அவர் மகளிர் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அதன் பின், கலப்பு இரட்டையர் பிரிவில் துப்பாக்கிச் சுடுதல் வீரர் சரப்ஜோத் சிங்குடன் இணைந்து மற்றொரு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் தொடர் ஒன்றில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் மனு பாக்கர்.
100 கிராம் எடையால் பறிபோன பதக்கம்
பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் உறுதியாகிவிட்டது, தங்கப் பதக்கத்துக்கு தயாராகி வந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பேரிடியாக வந்தது அந்த செய்தி. உடல் எடை நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவைக் காட்டிலும் 100 கிராம் கூடுதலாக இருப்பதால், வினேஷ் போகத்துக்கு மல்யுத்தம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் அவருக்கான பதக்க வாய்ப்பும் பறிபோனது.
உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் யு சாகியை முதல் சுற்றில் வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய வினேஷ் போகத்தின் பதக்க கனவு 100 கிராம் கூடுதல் எடையால் பறிபோனது. ஒலிம்பிக் குழுவிடம் வெள்ளிப் பதக்கத்துக்காக முறையிட்டும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் முதல் வீராங்கனை என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதக்கமின்றி கண்ணீருடன் நிலைகுலைந்தார் வினேஷ் போகத். பதக்க வாய்ப்பு பறிபோனதையடுத்து, தன் உயிருக்கும் மேலாக நேசித்த மல்யுத்ததில் இருந்து விலகுவதாக அறிவித்து அரசியலில் நுழைந்தார் வினேஷ் போகத்.
பாலின அடையாள சர்ச்சையில் இமென் கெலிஃப்
அல்ஜீரியாவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீராங்கனையான இமென் கெலிஃப், பாரீஸ் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடைப் பிரிவில் அவரை எதிர்த்து போட்டியிட்ட இத்தாலியின் ஏஞ்சலா காரினியை 46 விநாடிகளுக்குள் தோற்கடித்தார். இங்கேதான் தொடங்கியது பாரீஸ் ஒலிம்பிக்கில் பாலின அடையாளம் தொடர்பான சர்ச்சை! இந்தச் சர்ச்சைகள் அனைத்துக்கும் தங்கப் பதக்கம் வென்று பதிலளிப்பேன் என இமென் கெலிஃப் வேதனையுடன் கூறினார். தங்கப் பதக்கம் வென்று சொன்னதைச் செய்தும் காட்டினார்.
ஹார்மோன்கள் அடிப்படையில் தன்னை ஆண் தன்மை கொண்டவர் என பலரும் விமர்சித்தபோதிலும், மனவலிமையுடன் அந்த விமர்சனங்களை எதிர்கொண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார் இமென் கெலிஃப். இமென் கெலிஃப் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றது அல்ஜீரியாவில் உள்ள பெண்கள் பலரையும் குத்துச் சண்டை பயிற்சியில் ஈடுபட வைத்துள்ளது.
பதக்கத்துடன் விடைபெற்ற ஸ்ரீஜேஷ்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியது. கடந்த ஒலிம்பிக்கிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. தற்போது தொடர்ச்சியாக இரண்டாவது வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்திருந்த இந்திய அணியின் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் வெண்கலப் பதக்கத்துடன் தனது 20 ஆண்டுகளுக்கும் மேலான ஹாக்கி பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
பாராலிம்பிக்ஸில் அசத்திய இந்தியா
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான பதக்கங்களை வென்று மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. இந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது. அதில் 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இதற்கு முன்னதாக, கடந்த முறை டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களை வென்றிருந்ததே இதுவரையிலான அதிகபட்சமாக இருந்து வந்தது. தற்போது பாரீஸ் ஒலிம்பிக்கில் வரலாறு திருத்தி எழுதப்பட்டுள்ளது.
யு19 ஆசிய கோப்பை - வங்கதேசம் சாம்பியன்
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபையில் நடைபெற்றது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இலங்கையை வீழ்த்தி இந்திய அணியும், பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேச அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதிப்போட்டியில் இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வியைத் தழுவியது. வங்கதேசம் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
யு19 ஆசிய கோப்பை - இந்தியா சாம்பியன்
19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் அறிமுக சாம்பியனாக மாறியது.
மகளிர் டி20 உலகக் கோப்பை - நியூசிலாந்து சாம்பியன்
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. அங்கு ஆளும் அவாமி லீக் கட்சி கொண்டு வந்த இடஒதுக்கீட்டு சட்டத்துக்கு எதிராக வெடித்த போராட்டம் வன்முறையாக மாறியதால், டி20 உலகக் கோப்பைத் தொடர் துபைக்கு மாற்றப்பட்டது. 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடிய இந்த தொடரில் இந்திய மகளிரணி லீக் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடியது. நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.
ஐசிசி தலைவர் ஜெய் ஷா
பிசிசிஐ செயலராக செயல்பட்டு வந்த ஜெய் ஷா ஐசிசியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பிசிசிஐ செயலராக செயல்பட்டு வரும் ஜெய் ஷா, விரைவில் ஐசிசியின் புதிய தலைவராக நியமிக்கப்படுவார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி அவர் ஐசிசியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஐபிஎல் மெகா ஏலம்
ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவம்பர் 24 மற்றும் நவம்பர் 25 ஆகிய இரண்டு நாள்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ஐபிஎல் மெகா ஏலத்தில் 182 வீரர்கள் அணிகளால் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிகபட்ச தொகைக்கு ஏலம்போன வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் ரிஷப் பந்த் படைத்தார். அவர் ரூ.27 கோடிக்கு லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதிக விலைக்கு ஏலம்போன முதல் ஐந்து பேருமே இந்திய வீரர்கள்தான்.
ரிஷப் பந்த்துக்கு அடுத்தபடியாக இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை அதிகபட்சமாக ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் மெகா ஏலத்தில் 13 வயதாகும் மிக இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் குறைந்த வயதில் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்தார்.
சுனில் சேத்ரி ஓய்வு
இந்திய அணியின் கால்பந்தாட்ட நாயகன் சுனில் சேத்ரி கடந்த ஜூன் மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். உலக அளவில் அதிக கோல்கள் அடித்த வீரர்களில் மூன்றாவது இடத்திலிருக்கும் அவர், இந்திய கால்பந்தாட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர். இதுவரை 150 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி 94 கோல்களை அடித்துள்ளார்.
ரஃபேல் நடால் ஓய்வு
நட்சத்திர டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரஃபேல் நடால் அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் கடந்த நவம்பரில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதாகும் ரஃபேல் நடால் இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
அல்காரஸ் சாம்பியன்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முன்னாள் சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்த்து ஸ்பெயின் வீரர் அல்கராஸ் இறுதிப்போட்டியில் மோதினார். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான அல்கராஸ் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
நடப்பு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தக்கவைத்த 21 வயதாகும் அல்கராஸ், இதுவரை 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் பார்டர் - கவாஸ்கர் தொடரின் நடுவில் திடீரென சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள அஸ்வினின் இந்த திடீர் ஓய்வு முடிவை யாருமே எதிர்பார்க்கவில்லை. பார்டர் - கவாஸ்கர் தொடர் முடியும் முன்பே அவசரமாக ஓய்வு முடிவை அறிவிப்பதற்கான காரணம் என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 537 விக்கெட்டுகளையும், 3,503 ரன்களையும் குவித்துள்ளார். அதில் 6 சதங்கள் அடங்கும். அவர் ஒருநாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டுகளையும் இந்திய அணிக்காக வீழ்த்தியுள்ளார்.
தொழிலதிபரை மணந்த பி.வி.சிந்து
நட்சத்திர பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து அண்மையில் பிரபல தொழிலதிபரை மணம் புரிந்துள்ளார்.
இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் பாட்மின்டனில் இரண்டு முறை பதக்கங்களை வென்று கொடுத்தவர் பி.வி.சிந்து. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கமும், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். பாட்மின்டனில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த பி.வி.சிந்து அவரது வாழ்க்கையில் திருமணம் எனும் புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளார். 29 வயதாகும் அவர் பிரபல தொழிலதிபரான வெங்கட தத்தா சாய் என்பவரை மணம் முடித்துள்ளார்.
பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவரின் திருமணம் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் உதய்பூரில் நடைபெற்றுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்தியா
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்றது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவிலும் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.
உலக செஸ் சாம்பியன்
இந்தியாவின் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற குகேஷ் - நடப்பு உலக செஸ் சாம்பியனான சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. 14 சுற்றுகள் இந்த போட்டியில் முதல் சுற்றில் குகேஷ் தோல்வியைத் தழுவினார். அதன் பின், ஒரு சுற்றில் வெற்றி பெற்று டிங் லிரெனை சமன் செய்தார். சுற்றுகள் பலவும் டிராவில் முடிவடைய, அடுத்த உலக செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான 14-வது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
3 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த ஆட்டத்தின் 58-வது நகர்த்தலில் உலக சாம்பியன் பட்டத்தை தன்வசமாக்கினார் குகேஷ். இதன் மூலம், மிகவும் இளம் வயதில் (18 வயது) உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார் குகேஷ். உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தமிழக அரசு அவருக்கு ரூ. 5 கோடியை பரிசுத் தொகையாக அறிவித்தது.