48 கிராமங்களில் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள்
விஜயகாந்த் நினைவு நாள்: அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி
தேமுதிக தலைவா் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை (டிச. 28) அவரது நினைவிடத்தில் அமைச்சர் சேகர்பாபு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த் நினைவு நாளை குரு பூஜையாகக் கடைப்பிடிக்க தேமுதிக முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக் கட்சித் தலைவா்களுக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதனையேற்று பல தலைவா்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்துவார்கள் என தகவல்கள் வெளியானது.
முன்னதாக தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், மாநிலத் தோ்தல் ஆணையம் அலுவலகத்திலிருந்து, விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெறும் எனவும், இந்தப் பேரணியில், தேமுதிக நிா்வாகிகள் பலா் பங்கேற்கவுள்ளதாகவும், நினைவிடத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்படும் என தெரிவிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோயம்பேடு பகுதி நெரிசலான பகுதி என்பதால் போக்குவரத்து பிரச்னை ஏற்படும் எனக்கூறி காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் அவர்களுடன் தேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.
இதையும் படிக்க | 'மண்ணைவிட்டு மறைந்தாலும் நம் நெஞ்சங்களில் வாழும் நண்பர் விஜயகாந்த்' - முதல்வர் பதிவு!
இதையடுத்து தடையை மீறி தேமுதிகவினர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் துணைச் செயலாளர் எல்.கே. சுதீஷ், விஜய பிரபாகரன் மற்றும் தொண்டர்கள் பலரும் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர்.
இதனிடையே விஜயகாந்தின் நினைவிடத்தில் அதிகாலை முதல் குவிந்து வரும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிகவின் அழைப்பை ஏற்று விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்த இந்திய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், கலைஞருக்காக விஜயகாந்த் வடித்த கண்ணீரை திமுக எப்போதும் மறக்காது.
நேற்று வரை புரட்சி கலைஞராக இருந்தவர், எந்நாளும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமர நிறைந்திருப்பார். இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது பல்வேறு கலைஞர்களை பரிணாமம் செய்தவர்.
ஊதி பெரிதாக்க வேண்டாம்
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும் அவர்கள் நினைத்தபடி பேரணி நடந்திருக்கிறது. முதல்வருக்கு பேரணி அனுமதி அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. குரு பூஜையில் முதல்வரின் அமைச்சரவையில் உள்ள ஒரு அமைச்சரையே அனுப்பி இருக்கிறார். பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை ஊதி பெரிதாக்க வேண்டாம்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தவர்தான் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த். ஏழை, எளிய மக்கள் உயர்வதற்கு, தான் உழைத்து சம்பாதித்த பொருளை செலவு செய்தவர். வாழும் மனிதநேயமாக கருதப்படும் மறைந்து மறையாமல் இருக்கும் ஒரு கலைஞர். வாழ்ந்த காலத்தில் தலைவராக இருந்த போது முத்தமிழறிஞர் கலைஞருக்கு விழா எடுத்து தங்கப் பேனாவை வழங்கி சரித்திரம் படைத்தவர்.
விஜயகாந்த் வடித்த கண்ணீரை திமுக மறக்காது
கலைஞர் இறந்த போது வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் காணொளி வாயிலாக அவர் வடித்த கண்ணீரை திமுக எப்போதும் மறக்காது. அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவுடன் அவர் நேராக சென்ற இடம் கலைஞரின் நினைவிடம்தான்.
திராவிட மாடல் அரசுக்கும் திராவிடம் என்கிற சொல்லுக்கும் அவருடைய கட்சிக்கு இந்த பெயரை வைத்திருக்கிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மறைவிற்கு அரசின் முழு மரியாதை வழங்கப்பட்டது. கலைஞர் மீதான அதே அன்பும் பற்றும் விஜயகாந்த்க்கு இருந்துள்ளது. விஜயகாந்தின் இலட்சியத்தை பொதுச்செயலாளர் பிரேமலதா தொடர்ந்து வழிநடத்தி செல்ல பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என கூறினார்.