புதுச்சேரி: `ஜனவரி 12-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் ஏன்?’ – அமைச்சர் சொல்வதென்ன ?
புதுச்சேரியில் சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகள் வருகையினாலும், இருசக்கர வாகனங்களின் பெருக்கத்தினாலும் ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதனால் 2025 ஜனவரி 1-ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார் போக்குவரத்து சீனியர் எஸ்.பி பிரவீன்குமார் திரிபாதி. அத்துடன், ``புதுச்சேரியில் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மீறுபவர்களுக்கு ரூ.1,000/- அபராதம் விதிக்கப்படும். அவர்களின் லைசென்ஸ் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கும் இது பொருந்தும். இதில் எந்தவித அரசியல் தலையீடும் இருக்காது” என்றும் கூறியிருந்தார்.
தொடர்ந்து கடந்த 17-ம் தேதி அவர் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், `புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை பலமடங்கு உயர்ந்திருக்கிறது. அவர்கள் கடைபிடிக்கும் பாதுகாப்பற்ற நடைமுறைகளால் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட புதுச்சேரி, நாட்டின் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலமாக இருக்கிறது.
அதை கருத்தில் கொண்டு புதுச்சேரி போக்குவரத்து காவல்துறையின் இலக்கான உயிரிழப்பு இல்லாத் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்திருக்கிறது. அதனால் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படவிருக்கிறது. அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிந்து தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அதற்கு மறுநாளே செய்தியாளர்களை சந்தித்த காவல்துறை அமைச்சர் நமச்சிவாயம், ``ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஹெல்மெட் அணியாவிட்டால் அபராதம் விதிக்க வேண்டாம் என்று போக்குவரத்து காவல்துறையினரிடம் கூறியிருக்கிறேன்.
ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என்பது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதுகுறித்து டிஜிபியிடம் ஆலோசித்து இறுதி முடிவை கூறுவேன்” என்று கூறினார். அதனால் ஜனவரி 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000/- அபராதம் விதிக்கப்படும் என்று போக்குவரத்துப் போலீஸார் கூறிவந்த நிலையில், அமைச்சரின் அந்த பேட்டி பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், ``ஹெல்மெட் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் ஒருசில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. ஹெல்மெட் அணியாததால் ஆண்டுக்கு 200 பேர் உயிரிழக்கின்றனர்.
இந்திய அளவில் புதுச்சேரியில்தான் விபத்துகள் காரணமாக அதிகளவில் உயிரிழப்புகள் நடப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அதனடிப்படையில் வரும் ஜனவரி 11-ம் தேதி கவர்னர் மற்றும் முதலமைச்சர் தலைமையில் மாபெரும் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற இருக்கிறது. அதற்கு மறுநாள் 12-ம் தேதியில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதன்பிறகு சில நாட்கள் கழித்து வாகனத்தின் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதேபோல அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச் செல்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த காலங்களில் ஹெல்மெட் சட்டம் கட்டாயமாக்கப்பட்டபோது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அந்த சட்டம் அப்போது வாபஸ் பெறப்பட்டது. ஆனால் தற்போது புதுச்சேரியில் விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கு அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி வருகிறது. அதனால் விபத்தின் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக கட்டாய ஹெல்மெட் சட்டம் அமல்படுத்தப்படுகிறது. ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பள்ளி, கல்வி மற்றும் அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.