காஸா மருத்துவமனை வலுக்கட்டாயமாக மூடல்: மருத்துவப் பணியாளா்கள் கைது
Manmohan Singh: `என் மகனின் கல்விச் செலவுக்கு உதவ முன்வந்தார்’ - நெகிழ்ந்த மலேசிய பிரதமர் இப்ராஹிம்
இந்திய வரலாற்றில் புறக்கணிக்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இவரின் மறைவுக்கு உலக அளவில் பல்வேறு தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மன்மோகன் சிங்கின் தன்மையான ஆளுமையும் அறிவார்ந்த முடிவுகளும் தொலைநோக்குப்பார்வையும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனான அமைந்துள்ளது என்கிறார்கள்.
அந்த வகையில் மலேசியாவின் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மன்மோகன் சிங்குடனான தனிப்பட்ட உறவு குறித்து நெகிழ்ந்து பேசியுள்ளார்.
``புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர், அமைதியான அரசியல்வாதி என்பதையெல்லாம் தாண்டி மன்மோகன் சிங் மனிதாபிமானமிக்க மனிதர்” என்பதை மலேசியா பிரதமர் சொல்லும் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.
இரண்டு நிதியமைச்சர்களின் நட்பு!
"என் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய நண்பர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்த துக்கத்தின் கனத்தை என்னால் தாங்கமுடியவில்லை. இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தங்களின் சிற்பி என்று கொண்டாடப்படும் இந்த மாபெரும் மனிதரைப் பற்றி இரங்கல் குறிப்புகள், கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் நிச்சயமாக நிறைய இருக்கும். இந்தியா உலகின் பொருளாதார ஜாம்பவான்களில் ஒன்றாக உருவாவதில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பங்கு மிக முக்கியமானது." என அன்வர் இப்ராஹிம் குறிப்பிட்டுள்ளார்.
மன்மோகன் சிங்கைப் போல அன்வர் இப்ராஹிம்மும் 90களில் மலேசியாவின் நிதியமைச்சராக இருந்தவர்.
"நாங்கள் இருவரும் நிதியமைச்சர்களாக இருந்த காலத்தில், மாபெரும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திய அவரின் கொள்கைககளை நேரடியாக பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. நாங்கள் இருவரும் ஊழலுக்கு எதிரான போரில் உறுதியாக இருந்தோம். ஒரு முக்கியமான வழக்கில் கூட இணைந்து செயல்பட்டுள்ளோம்.” என்றார்.
`விநோதமான’ அரசியல்வாதி:
டாக்டர் சிங் ஒரு விநோதமான அரசியல்வாதி என்றாலும் ஒரு உறுதியான மற்றும் வலிமையான ஆட்சியாளர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது." என்கிறார் இப்ராஹிம்.
மேலும் இப்ராஹிம் அப்போதைய மலேசிய அரசால் தேச விரோதியாக கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது மன்மோகன்சிங் அவருக்கு உதவ முன்வந்ததையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டார். "மற்றவர்களை விட எனக்கு அவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர்" எனக் கூறியுள்ளார் அன்வர் இப்ராஹிம்.
அவர் கூறியதன்படி, இப்ராஹிம் சிறையில் இருந்தபோது மன்மோகன் சிங் அவரது குழந்தைகளுக்கு ஸ்காலர்ஷிப் அளிக்க முன்வந்துள்ளார். "அவர் அதைச் செய்திருக்க அவசியமில்லை. ஆனாலும், அவரின் சுபாவத்துக்கு உண்மையாக அதைச் செய்தார்." என பதிவிட்டுள்ளார் அன்வர் இப்ராஹிம்.
"Goodbye My Mitra, My Bhai, Manmohan"
மன்மோகன் சிங்கின் உதவியை அன்வர் இப்ராஹிம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அவரது செயல் சந்தேகத்திற்கு இடமின்றி அவரின் அசாதாரண மனிதாபிமானத்தையும் பெருந்தன்மையையும் காட்டியதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
"'மனித கருணயின் பால்' நிரம்பிய மனிதர்" என மன்மோகன் சிங்கை புகழ்ந்துள்ளார் அன்வர் இப்ராஹிம்.
இப்ராஹிம் சிறையிலிருந்த இருண்ட நாட்களில் உண்மையான நண்பராக மன்மோகன் சிங் உடன் நின்றதாகவும், அவரது அமைதியான பெருந்தன்மைவாய்ந்த செயல்கள் என்றும் மனதில் நிலைத்திருக்குமென்றும் கூறியுள்ளார்.
"குட் பை என் நண்பா, என் அண்ணா, மன்மோகன்" என உணர்ச்சிகரமாக எழுதியுள்ளார்.