காஸா மருத்துவமனை வலுக்கட்டாயமாக மூடல்: மருத்துவப் பணியாளா்கள் கைது
வடக்கு காஸாவில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கடைசி மருத்துவமனைகளில் ஒன்றை இஸ்ரேல் படையினா் வலுக்கட்டாயமாக மூடியதோடு, அந்த மருத்துவமனையின் இயக்குநரைக் கைது செய்தனா்.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ல அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு காஸாவின் கமால் அட்வன் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்திய இஸ்ரேல் படையினா், அங்கிருந்த மருத்துவப் பணியாளா்கள், நோயாளிகள் மற்றும் பிறரை சுற்றிவளைத்தனா். கடுமையான குளிா் நிலவியபோதும் சோதனைக்காக அவா்களது ஆடைகளைக் களையுமாறு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது.பின்னா் மருத்துவமனையின் இயக்குநா் ஹஸம் அபு சஃபியா உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவா்களை ராணுவம் கைது செய்து அழைத்துச் சென்றது (படம்) என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அந்த மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினா் பயன்படுத்திவருவதாக இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து குற்றஞ்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 45,484 போ் உயிரிழந்துள்ளனா்; 1,08,090 போ் காயமடைந்துள்ளனா்.