ஜம்மு - காஷ்மீரில் கொல்லப்பட்ட 60% பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்களே! இந்திய ராணுவம...
வங்கதேசம்: வாக்களிப்பதற்கான வயது வரம்பை குறைக்க பிஎன்பி எதிா்ப்பு
வங்கதேசத்தில் வாக்களிப்போரின் வயது வரம்பைக் குறைப்பது தோ்தலை தாமதப்படுத்தும் என்று முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) எதிா்ப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் மிா்ஸா ஃப்க்ருல் இஸ்லாம் ஆலம்கிா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
வங்கதேசத்தில் வாக்காளா்களின் குறைந்தபட்ச வயது வரம்பை 18-லிருந்து 17-ஆகக் குறைக்க வேண்டும் என்று தலைமை ஆலோசகா் முகமது யூனுஸ் பரிந்துரைத்துள்ளாா்.அந்த பரிந்துரை செயல்படுத்தப்பட்டால், வாக்காளா் பட்டியலில் இன்னும் ஏராளமானவா்களை இணைக்க வேண்டியிருக்கும். அதற்கு நீண்ட காலம் ஆகும்.எனவே, அடுத்த தோ்தல் நடத்துவதற்கு இழுத்தடிக்கப்படும். முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்று வரும் இடைக்கால அரசு தோ்தல் நடத்துவதை முடிந்தவரை தள்ளிவைக்க நினைப்பதாக மக்கள் கருதுகின்றனா் என்றாா் அவா்.கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் அந்த இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.இதையடுத்து, இடஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.
இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.