அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் சிவசங்கர்
திருச்சி: தமிழக அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி முதற்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
அகில இந்திய 13 ஆவது பகுத்தறிவாளர் சங்க மாநாடு திருச்சியில் திக தலைவர் கீ.வீரமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, தமிழ்நாடு பகுத்தறிவாளர் சங்க மாநாட்டிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பகுத்தறிவாளர்கள் பங்கேற்றுள்ளனர். இது பெரியாருக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.
இதையும் படிக்க | அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது ஏன்?: அமைச்சர் செந்தல்பாலாஜி விளக்கம்
வைக்கம் நூற்றாண்டு விழா கேரளத்தில் நடைபெற்றது. இதில் கேரள முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் பங்கேற்றனர். வைக்கம் வெற்றி விழா நினைவாக வைக்கத்திலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து இயக்க வேண்டும் என வீரமணி கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் சென்னையிலிருந்து வைக்கதிற்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. வைக்கம் வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த பேருந்து உதவிகரமாக இருக்கும்.
கடந்த பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி இதற்கு தீர்வு காணப்பட்டது.
தமிழக அரசுப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி முதற்கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார்.