Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
முந்திரிக்காடு டு சந்தனக்காடு : தமிழரசனும் தனித்தமிழ்நாடு கோரிக்கையும் | அத்தியாயம் 19
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
கைவசமிருந்த வெடிகுண்டுகள் தீர்ந்துவிட்டன என்ற தங்கள் பலவீனம் வெளிப்பட்டதுமே தமிழரசன் உள்ளிட்டவர்களின் கால்கள் பலமிழந்து விட்டன. ஒவ்வொருவராய் காவலர்களின் பிடியில் சிக்கினார்கள். ஒரே ஒருவர் மட்டும் முந்திக்கொண்டு ஓடி அந்த இரவில் தப்பினார். மாற்று உடை கிடைக்காமல் ஜெயில் யூனிஃபார்மோடு பொன்மலை பூங்காவில் ஒரு குப்பைத் தொட்டியில் ஒளிந்திருந்த அவரும் மறுநாள் பகலில் மாட்டிக் கொண்டார்.
மாட்டிய அனைவரையும் சிறைக் காவலர்கள் நையப் புடைத்துவிட்டனர். எல்லாவற்றுக்கும் திட்டமிட்டவர் தமிழரசன்தான் என்பது தெரிந்துவிட்டதால், தனிமைச் சிறையில் வைத்து அவருக்கு மட்டும் ' ஸ்பெஷல் ' டிரீட்மெண்ட்! உச்சி முதல் உள்ளங்கால்வரை அடிபடாத இடம் எதுவுமே இல்லை என்று தீர்மானமான பிறகுதான் அடிப்பதையே நிறுத்தினார்கள்.
சுயநினைவிழந்த நிலையில் தமிழரசனை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அட்மிட் செய்தார்கள் அதன்பின் அவர் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு போனபின் தப்பிக்க முயற்சி செய்பவே இல்லை தமிழரசன். நான்கு வருடங்கள் நல்லபிள்ளையாய் சிறைவாசம் செய்தபிறகு, 81 - ம் ஆண்டு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். கட்சி அவரை மீண்டும் தலைமறைவு வாழ்க்கைக்குப் போகச் சொன்னது. சென்னை மாம்பலத்தில் ஒரு அறைபிடித்து, அவரைத் தங்கவைத்தது கட்சி! இந்த இடைப்பட்ட காலத்தில் நக்ஸலைட் இயக்கம் ஏகப்பட்ட மாறுதல்களைக் கண்டிருந்தது. இந்தியா முழுக்க ஏகப்பட்ட நக்ஸலைட்கள் கைது செய்யப்பட்டார்கள். பலர் போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.
இவர்களைத் தவிர மிச்சமிருந்த கொஞ்ச நஞ்சப்பேரும் மாற்றுப் பாதைகளைத் தேட ஆரம்பித்தார்கள். நக்ஸலைட் இயக்கத்தை ஸ்தாபித்த சாரு மஜும்தாரை எதிர்த்து, பீகாரைச் சேர்ந்த சத்ய நாராயண் சின்ஹா என்பவர் பெரிய உட்கட்சிப் போராட்டத்தை நடத்தினார். " ஆயுதம் ஏந்திப் போராட்டம் நடத்தி,அந்தப் புரட்சி மூலம் இந்தியாவை விவசாயிகளுக்கு சொந்தமாக்குவது நடைமுறை சாத்தியமில்லாதது.... நிலப்பிரபுக்களையும், பணக்காரர்களையும் கொன்றுகுவிக்கும் அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் தேவையில்லாதது. மக்கள் அமைப்பை ஏற்படுத்தி, ஜனநாயக வழியில் போராட்டம் நடத்துவதுதான் சரியானது " என்றார் அவர்.
இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு குழு புதிதாய் உருவாக, நக்ஸலைட் இயக்கம் சிதறி சின்னாபின்னமானது. சிலர் ஜனநாயகக் கட்சிகளாக மாறினார்கள். சிலர் வெடிகுண்டுகளின் பின்னால் ஓடினார்கள்! தமிழ்நாட்டிலும் இதன் எதிரொலி இருந்தது..... அப்போது தமிழ்நாட்டிலிருந்த அமைப்பு, ' கூட்டுக்குழு ' என்று அழைக்கப்பட்டது. இது ஆந்திராவிலிருக்கும் மக்கள் யுத்தக்குழுவுடன் இணைந்து செயல்பட்டது. இந்த அமைப்பில்தான் தமிழரசன் இருந்தார்.
சென்னையில் இந்த அமைப்புதான் தமிழரசனை தங்கவைத்தது. அங்கு ' பிளாட் ' என்ற இலங்கைத் தீவிரவாத அமைப்புடன் தமிழரசனுக்குத் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்புதான் தமிழரசனின் வாழ்க்கையைத் திசைமாற்றியது. அதுவரை ' இந்திய விடுதலை ' என்பதுதான் நக்ஸலைட்டுகளின் சித்தாந்தமாக இருந்தது! இந்திய நாட்டையே முதலாளிகள், ஆதிக்கசக்திகள், நிலப்பிரபுக்கள் ஆகியோர் கையிலிருந்து மீட்டு விவசாயிகள் மற்றும் தொழிலாளிகள் கையில் ஒப்படைப்பதுதான் இதன் உள்ளர்த்தம்.
மார்க்சிஸம், லெனினிஸம் என்று பேசினால் சாதாரண மக்களுக்குப் புரியாது என்பதால், இந்த அமைப்பில் சேருகிறவர்களிடம் சுருக்கமாய் இப்படித்தான் விளக்குவார்கள் : " இந்தியா முழுக்க நம்ம கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தப்போகுது தோழர்! இந்தப் போராட்டத்தில் எல்லா விளைநிலங்களும் கட்சிக்குச் சொந்தமாயிடும். புரட்சி முடிஞ்சதும், கட்சி எல்லோருக்கும் இந்த நிலத்தை சும்மா பிரிச்சிக் கொடுத்துடும். ஆயிரங்காணி உள்ளவர்கள் ஆளவந்தார்கள்.
அவர்களோட நிலத்தில் வேலை செய்பவர்கள் கூலித்தொழிலாளர்கள் ' என்ற வித்தியாசம் இனிமே இருக்காது. எல்லோரையுமே சொந்த நிலம் வச்சிருக்கிற விவசாயிகள் ஆக்கிடப்போறோம்! " வறுமையில் உழல்கிறவர்களை இந்த தத்துவ விளக்கம் சுலபமாய் ஈர்த்தது. ' கட்சியில் சேர்ந்து நடவடிக்கைகளில் இறங்கினால்,ஆற்றங்கரை ஓரமா நல்ல நன்செய் நிலம் நான்கைந்து ஏக்கர் முன்னுரிமை அடிப்படையில் கிடைக்கும் ' என்ற நப்பாசையில் தடம் மாறியவர்கள் ஏராளம் பேர். ஆனால், இலங்கைத் தீவிரவாதிகள் தமிழரசனின் சித்தாந்தத்தையே நிலைகுலையச் செய்தனர்.
" சிங்கள மொழி பேசும் பெரும்பான்மையினர், தமிழ்மொழி பேசும் சிறுபான்மையினரை அடக்க நினைத்ததால்தான், இலங்கைப் பிரச்னை ஏற்பட்டது. இப்படி ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தை ஒடுக்க முனையும்போதுதான் விடுதலைப் போராட்டம் வெடிக்கிறது. இந்தியாவிலும் இப்படித் தேசிய இன விடுதலைக்குப் போராடுவதுதான் உண்மையான தீர்வு.... நாங்கள் எப்படித் தனிஈழம் கேட்கிறோமோ அதேபோல் நீங்கள் தனித்தமிழ்நாட்டுக்காகப் போராடவேண்டும்! ' ' என்று அவர்கள் தமிழரசனிடம் வாதிட்டனர். அழித்தொழிப்பு, பிரசாரம் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு தேசிய இனப் பிரச்னை தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினார் அவர்.
இலங்கைத் தீவிரவாதிகளுடனே சுற்றி, அவர்களிடமும் இதுபற்றி விவாதம் செய்தார். கடைசியில், தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைவாத கோஷத்தைக் கையில் எடுத்தார்! கட்சியின் மற்ற நிர்வாகிகளுடன் இதுபற்றி பேசும்போது, அவர்கள் தமிழரசனை கிண்டல் செய்தனர். அதோடு விடவில்லை... தமிழரசனை சீரியஸாய் கண்காணித்தார்கள். அவரை சென்னையை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை.... கட்சி உறுப்பினர்களிடம் பிரிவானைவாதம் பேசி குழப்பிவிடுவார் என்ற பயத்தில், அவரை யாரையும் சந்திக்கவே அனுமதிக்கவில்லை!
ஒரு கட்டத்துக்கு மேல் இதைத் தமிழரசனால் பொறுத்துக்கொண்டு இருக்கமுடியவில்லை. கட்சியில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி அரியலூர் வந்துவிட்டார். அதன்பிறகுதான் முந்திரிக்காடுகளில் விபரீதங்களுக்கு முழுமூச்சில் விதை போடப்பட்டது!
மேலும் சலசலக்கும்..!