அரசியல் செய்கிறதா தேசிய மகளிர் ஆணையம்? |பாமகவில் நடக்கும் குடும்ப சண்டை? | BJP |...
முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `ஆயுதம் ஏந்திப் போரிடும் ராணுவத்தையே...' | அத்தியாயம் 20
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) என்ற கட்சிதான் மக்கள் யுத்தக்குழுவின் வெளிப்படையான அமைப்பாக இருந்தது. மக்கள் யுத்தக்குழு ஒருபுறம் ஆயுதம் ஏந்திப் போராடும்... அந்தப் போராட்டங்களில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால், அதைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ( மா.லெ ) ஆர்ப்பாட்டம், பேரணி என்று ஜனநாயக ரீதியில் வெளிப்படையாகப் போராடும். இந்தக் கட்சியின் துணை அமைப்புகளாகப் புரட்சிப் பண்பாட்டு இயக்கம், முற்போக்கு இளைஞர் அணி, முற்போக்கு மாணவர் அணி ஆகியவை இருந்தன.
இந்தத் துணை அமைப்புகள்தான் ஆட்களை ஈர்த்து, மக்கள் யுத்தக் குழுவுக்கு அனுப்பி வைத்தன. தான் வளர்ந்த... தலைமறைவாய் திரிந்த மண்ணுக்கு மீண்டும் திரும்பியதுமே, தமிழரசன் இந்தத் துணை அமைப்புகளில் இருக்கிறவர்களைதான் சந்தித்தார். ' தமிழ் நாட்டுக்கு விடுதலை வாங்கும் ' தனது பிரிவினைவாத சிந்தைைய அவர்களுக்குள்ளும் விதைத்தார். பலரும் தமிழரசனோடு நன்கு பழகியவர்கள்தான்... சுற்றி வளைத்துப் பார்த்தால், சிலர் அவரது சொந்தக்காரர்களும்கூட! எல்லோருமே சுலபமாக அவரால் ஈர்க்கப்பட்டார்கள். இப்படி, அடுத்தடுத்து தமிழரசன் மேற்கொண்ட எல்லா காரியங்களுக்கும் பின்னணிக் காரணம் ஒன்றே ஒன்றுதான்! ஒரு பெரிய புரட்சியைத் திட்டமிடும்போது அதற்கு உறுதியாகக் கூட நிற்கும் தோழர்கள் தேவை.... அடிக்கடிப் பதுங்கி வாழ மறைவிடங்கள் தேவை. இந்த இரண்டையுமே முந்திரிக்காடும் அதில் வாழும் மக்களும்தான் தருவார்கள் என்று நம்பினார் தமிழரசன்! இந்த நம்பிக்கையோடுதான் ஆட்களை ஒருபுறம் திரட்டிக்கொண்டு, இன்னொரு புறம் ஆயுதத் திரட்டலிலும் ஈடுபட்டார் தமிழரசன். சென்னையிலிருந்த காலத்தில் அவர் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட சில இலங்கைப் போராளிகள்தான் இதற்கு பெருமளவு உதவினார்கள். தேவன், காந்தி, ராஜு என்கிற தினேஷ் ஆகிய மூன்று பேர்தான் தமிழரசனுக்கு எல்லா ஆயுதங்களும் வாங்கிக் கொடுத்தனர்.
அப்போது விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு தினமும் பெரியார் போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று போய் வரும். இதில் கண்டக்டராக இருந்த ஸ்ரீமுஷ்ணம் கிராமத்துக்காரர் ஒருவரைப் பழக்கமாக்கிக் கொண்டார் தமிழரசன். தமிழரசனிடம் கடிதம் வாங்கிப் போய் சென்னையில் இலங்கைப் போராளிகளிடம் தருவது, அவர்கள் தரும் பதிலைப் பத்திரமாய் தமிழரசனிடம் சேர்ப்பது என்று கூரியர் சர்வீஸ் செய்தார் அவர்.
முதலில் கடிதங்கள் போய் வந்தன... அப்புறம் சென்னையிலிருந்து ஒரு ஜெர்மன் நாட்டு ரிவால்வர் தமிழரசன் கைக்கு பார்சலாய் வந்தது. அதைத்தொடர்ந்து, மாடலை வைத்து எடுக்கப்பட்ட படம்... அதற்கு தோட்டாக்கள் இன்னொரு நாள் வந்தன. அப்புறம் வெடிகுண்டுகள் செய்ய வெடிமருந்து பொட்டலம் வந்தது. இப்படி யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வழியில் ஆயுதக் குவிப்பு தொடர்ந்தது! இப்படி வன்முறைப் பாதைக்கு ஏற்பாடுகள் ஒருபுறம் தயாராகி வந்தாலும்கூட, ' ஜனநாயக வழியிலதான் எல்லா நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் ' என்று தமிழரசனை வற்புறுத்திவந்தார் புலவர் கலியபெருமாள். இந்த வற்புறுத்தல்தான் தமிழரசனை ஒரு போராட்ட அறிவிப்பு செய்ய வைத்ததது.
' தமிழீழ விடுதலையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்... இலங்கையுடனான அரசு உறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் ' என்று வலியுறுத்தி, அரியலூரில் ரயில் மறியல் போராட்டம் செய்வதாய் அறிவித்தார் தமிழரசன். தமிழரசன் அப்போது தலைமறைவாக இருந்தார். அதனால் தன் அமைப்பில் இரண்டாம் கட்டத் தலைவராய் இருக்கும் பொன்பரப்பி ராஜேந்திரன் தலைமையில்தான் போராட்டம் நடக்கும் என அறிவிக்கச் சொன்னார். இந்தப் போராட் டத்துக்காக ஊர் ஊராய்ப் போய் இவர்கள் பிரசாரம் செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே இருக்கும் கல்லாத்தூரில் முதல் பிரசாரக் கூட்டம்.
ஆனால், பாதியிலேயே இவர்களுக்கும் லோக்கல் காங்கிரஸ்காரர்களுக்கும் தகராறு வந்து கூட்டம் கலைந்து போனது. கல்லங்குறிச்சி அருகே இருக்கும் பெய்யூரில் அடுத்த கூட்டம்... இந்தக் கூட்டத்திலும் தகராறுதான்! தடிகளை ஏந்தி மோதிக்கொண்டதில், இரு தரப்பிலுமே சிலருக்கு மண்டை உடைந்தன. இப்படித் தொடர்ந்து நடக்கும் தகராறுகளுக்குப் பின்னணியில் போலீஸ்தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் தமிழரசனுக்கு வந்தது. இதனால் ரயில் மறியல் நடக்கும் இடத்தை மாற்றச் சொன்னார் தமிழரசன்.
இதன்படி அரியலூரில் எவ்வளவோ போலீஸார் காத்திருந்தும் அங்கு போகாமல், ஈச்சங்காடு ரயில்வே ஸ்டேஷனிலேயே வைத்து ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தி விட்டனர் தமிழரசனின் ஆட்கள். “ இந்தப் போராட்டம் எனக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்தது " என்று தன் தோழர்களிடம் சொன்ன தமிழரசன், உடனடியாக ஒரு விவாதம் செய்ய முன்னணித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டினார். புலவர் கலியபெருமாளும் வந்தார். வல்லம் முந்திரிக்காட்டில் நடந்தது அந்தக் கூட்டம்... " ஜனநாயக வழியில் நாம் போராடினால், அதற்கு போலீஸோ அரசோ அனுமதி தருவதில்லை.
நம்மை அடக்குவதில்தான் போலீஸ் குறியாக இருக்கிறது. எனக்கு இந்த வழி பிடிக்கவில்லை. துப்பாக்கிமுனையில்தான் நம் நோக்கங்களை நிறைவேற்ற முடியும் என நினைக்கிறேன் " என்று பேச்சை ஆரம்பித்தார் தமிழரசன். புலவர் இடைமறித்தார். " இப்போதைய சூழலில் வன்முறைப் பாதை எதற்கும் தீர்வு தராது. இரண்டு ரிவால்வர்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு நாட்டுக்கு விடுதலை வாங்கிவிட முடியாது. முட்டாள்தனமான யோசனைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உருப்படியாய் ஏதாவது திட்டம் சொல்லுங்கள் ' ' என்றார் தமிழரசனை நோக்கி. தமிழரசனுக்கு கோபம் வந்து விட்டது. " தோழர்! உங்களுக்கு வயதாகி விட்டது. அதனால்தான் இப்படி விட்டேத்தியாய் பேசுகிறீர்கள்.
ஏன் முடியாது? இரண்டு துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளைக் கைப்பற்ற முடியாதா? தலைமறைவாய் இருக்கும் நம் இயக்கத்தவர்கள், நம் ஆதரவாளர்கள், அனுதாபிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியாதா? "
" கண்டிப்பாய் முடியாது! " என்றார் புலவர்.
" ஏன்? "
“ உன் ஒரு துப்பாக்கிக்கு எதிராக நூற்றுக்கணக்கான பீரங்கிகள் அரசிடம் இருக்கின்றன! அவற்றை எல்லாம் சமாளிக்கும் அளவுக்கு இங்கு யாரும் பக்குவப்படவில்லை. அந்த அளவுக்கு வெளிப்படையான அடக்குமுறையும் இங்கு இருந்ததில்லை! " என்றார் புலவர்.
" சந்தர்ப்பம் வரும்போது எல்லாவற்றையும் எதிர்கொண்டு சமாளிப்பவன்தான் உண்மையான போராளி. இவ்வளவு விஷயம் தெரிந்த நீங்கள், இப்படி எங்களைப் பயமுறுத்துவது ஆச்சரியமாக இருக்கிறது ' என்றார் தமிழரசன்.
“ மன்னிக்கவும். நீங்களெல்லாம் ஏதோ கனவில் இருக்கிறீர்கள். நிஜ நிலவரம் என்ன சொன்னாலும் உங்களுக்குப் புரியவில்லை.அடிபடும் போதுதான் வலியின் அவஸ்தை புரியும். கற்பனை பண்ணியெல்லாம் வலியை உணரமுடியாது. உணர்ந்து திருந்துபவர்கள் யார் வேண்டுமானாலும், என்னிடம் எப்போது வேண்டுமானாலும் வரலாம். உங்களோடு அழிவுப் பாதைக்கு வர நான் தயாராய் இல்லை! ” என்று சொல்லிவிட்டுப் புலவர் எழுந்து அவசரமாய்க் கிளம்பி விட்டார். தமிழரசன் உட்பட எல்லோரும் திகைத்துச் சிலையாகி விட்டனர்.
ஆனாலும் தமிழரசன், கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து திருந்தவில்லை. தன் ஆதரவாளர்கள் எல்லோரையும் கூப்பிட்டுக் கொல்லிமலையில் ஒரு செயற்குழுவைக் கூட்டினார். இரண்டு நாட்கள் தொடர் விவாதங்கள்... தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) என்ற பெயரில் புதுக்கட்சி உதயமானது. " வெறும் கட்சி மட்டுமே போதாது. ஆயுதம் ஏந்திப் போரிடும் ஒரு ராணுவத்தையே உருவாக்க வேண்டும். அந்த ராணுவம் இந்தக் கட்சிக்குத் துணை அமைப்பாகருக்கட்டும் " என்ற தமிழரசன், ' தமிழ்நாடு விடுதலைப் படை ' என்று இந்த ராணுவப் பிரிவுக்குப் பெயரும் வைத்தார்.
1985 - ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதெல்லாம் நடந்தது. அமைப்பு உருவான ஒரே மாதத்தில், எடுத்த எடுப்பிலேயே இவர்கள் வைத்த முதல் குறி... அப்போதைய பாரதப் பிரதமர் ராஜீவ் காந்திக்குதான்! இதைச் செயல்படுத்த அவர்கள் வகுத்த திட்டம் என்ன..?
மேலும் சலசலக்கும்....