செய்திகள் :

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தமிழரசன் பாணி மட்டும் முற்றிலும் வேறு’ | அத்தியாயம் 14

post image
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...

சில பத்தாண்டுகளுக்கு முன்...

அரியலூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம்... மாணவர்கள் பயிற்சி எடுப்பதற்காக இருக்கும் வொர்க்ஷாப்பில் யூனிஃபார்மோடு இருந்த அந்த இளைஞர்கள் சலசலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோருமே இன்னும் மீசை முளைக்காத வயதில் இருக்கும் விடலைகள். அவர்களின் சுவாரஸ்யம் எது எதிலோ இருக்கும். ஆனால், அன்றைய பேச்சு - பெரியசாமி யைப் பற்றியதாகத்தான் இருந்தது.

" ஹாஸ்டல்ல வழக்கமாகவே சாப்பாடு மோசம்... ஆனா, இன்றைக்கு ரொம்ப ரொம்ப மட்டமா இருந்தது. எல்லோரும் முனகிக்கிட்டே சாப்பிட உட்கார்ந்தாங்க. ஆனா, பெரியசாமி எழுந்து ஹாஸ்டல் வார்டனை முகத்துக்கு நேரே திட்டிட்டான். ' யாரும் சாப்பிடாதீங்க'னு சொல்லிப் பசங்களை ஸ்டிரைக் பண்ண வெச்சிட்டான். வார்டன் மிரண்டு போய் ஓடியாந்து பெரியசாமிகிட்டே கெஞ்சினாரு. ' இனிமே ஒழுங்கா சாப்பாடு போடறேன்'னு திரும்பத் திரும்பச் சொன்னாரு. அதுக்கப்புறம் பெரியசாமி சொன்ன பிறகுதான் பசங்க சாப்பிட்டாங்க. இனியொரு தடவை மட்டமான சாப்பாடு போட்டா, மேலதிகாரிகளுக்குப் புகார் செய்யறதா பெரியசாமி மிரட்டினப்ப, வார்டன் முகத்தைப் பார்க்கிறதுக்கே பரிதாபமா இருந்தது... "

ஒரு பையன் நீளமாகச் சொல்ல, எல்லோரும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

அந்தக் கும்பலின் நடுவே கொஞ்சம் கூச்சமும் கொஞ்சம் பெருமிதமும் கலந்த முகபாவத்தோடு நின்றிருந்தான் பெரியசாமி!

இன்ஸ்ட்ரக்டர் வொர்க்ஷாப்பில் நுழைய.. சலசலப்பு அதோடு அடங்கியது!

ஆனால், யூனிஃபார்மிலிருந்த ஒரு மாணவனின் மனதில் மட்டும் சலசலப்பு அடங்கவில்லை. அவன் பெரியசாமியையே உற்றுக் கவனித்தான். இன்று எப்படியும் நம்ம தோழர்களைச் சந்திக்கும்போது பெரியசாமி பற்றி சொல்ல வேண்டும் ' என்று நினைத்துக் கொண்டான்.

ஒரு வாரம் போயிருக்கும். அன்று பெரியசாமி வகுப்பு முடிந்து ஹாஸ்டலுக்குத் திரும்பிப் போகும்போது, ' தோழர் ' என்று கூப்பிட்டவாறு அவன் தோளில் கைவைத்தான், அந்த இளைஞன். பெரியசாமி திடுக்கிட்டுத் திரும்பிய போது, சிநேகமாகச் சிரித்தான். " உங்களைப் பற்றி உங்களோட படிக்கிற தோழர் ஒருத்தர் மூலமா கேள்விப்பட்டேன். உங்களோட கொஞ்சம் பேசணுமே...? " என்றான் பெரியசாமியிடம். ' முகம் தெரியாத யாரோ ஒருத்தன் வந்து கூப்பிடறானே...? ' என்று யோசனையாக இருந்தது பெரியசாமிக்கு!

" யார்னு தெரியாத ஒரு ஆள் கூப்பிடறானேன்னு யோசிக்கறீங்களா...? என் பெயர் தர்மலிங்கம். நான் தமிழ்நாடு விடுதலைப் படையில இருக்கேன்... ' என்று அறிமுகப்படுத்திக் கொண்டான் வந்திருந்த இளைஞன்.

' தமிழ்நாடு விடுதலைப் படை'யின் பெயரைக் கேட்டதுமே உடல் சிலிர்த்தது பெரியசாமிக்கு. ' நக்ஸலைட்டுகள்.... தீவிர கம்யூனிஸ்ட்டுகள்... பயங்கரவாதிகள் ' என்று விதவிதமான பெயர்களைக் கொண்டிருக்கும் இவர்கள் வெடிகுண்டு, துப்பாக்கி சகிதம் திரிவார்கள் என்பது மட்டுமே பெரியசாமிக்குத் தெரிந்த விஷயம். இவர்கள் ஏன் என்னிடம் பேச விரும்புகிறார்கள்... ' என்று மனசுக்குள் பயம் எழுந்தாலும், சரி... போய்ப் பேசித்தான் பார்ப்போமே... ' என்ற ஆர்வம் அவனை உந்தித் தள்ளியது.

அரியலூரிலிருந்து திருச்சிப் போகும் ரயில்வே டிராக் ஓரமாக நடந்தவாறே பெரியசாமியிடம் பேசினான் தர்மலிங்கம் என்ற அந்த இளைஞன். " தோழர்! நீங்க அறவழியில் போராடறது மட்டுமில்லை... ஆயுதமேந்திப் போராடவும் தெரிஞ்சிருக்கணும். நாங்க அதைத்தான் செய்யறோம். இந்த முந்திரிக்காடு மக்களோட கலந்திருக்கோம். அவங்க பிரச்னைகளுக்காகப் போராடறோம். அவங்க எங்களுக்கு ஆதரவு தர்றாங்க... மறைவிடம் தர்றாங்க... மக்கள் ஆதரவோடு வேகமா வளர்ந்து கிட்டிருக்கோம். ஆதிக்கச் சக்திகள்கிட்டே இருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை வாங்கப் போறோம்.

சுதந்திரத் தனித் தமிழ்நாடு உருவாகப் போகுது. தமிழரசன் அதற்கான போராட்டத் தலைவரா இருக்காரு. முந்திரிக்காடு போராட்டக்கௗமா இருக்கு! விவசாயிகளும் தொழிலாளிகளும் நம்ம பின்னால வரப்போறாங்க. உங்களை மாதிரி துடிப்பான இளைஞர்கள்தான் இந்தப் படைக்குத் தேவை... என்னோடு வருகிறீர்களா...? "

பெரியசாமி பதில் பேசாமல் அவன் பின்னால் போனான். அதுவரை தலைபிரட்டையாக இருந்தது, தவளை நிலைக்கு மாறியது. அநியாயத்தை தட்டிக் கேட்கும் ' வெறி ' கொண்ட அந்த இளைஞன், தீவிரவாதியாகவே மாற்றப்பட்டான்.

காட்சி மாறுகிறது. தஞ்சை திலகர் திடலில் ஒரு பொதுக் கூட்டம். கும்பலோடு கும்பலாக கண்களில் ஒளியோடு மேடையில் நடப்பவற்றை கூர்ந்து கவனிக்கிறான் இளைஞன். ஆரம்பத்திலிருந்து அவனை கவனித்து வந்த ஒரு உருவம், கூட்டம் முடிந்ததும் மெள்ள அவனைப் பின் தொடர்ந்து, நெருக்கமாய் போய் தோளைத் தொட்டுக் கூப்பிட்டது. சிரித்தபடி கைகுலுக்கியது.

" ஒண்ணு கவனிச்சீங்களா? இன்னைக்குக்கூட பொதுக்கூட்டத்தில் தலைவர் வீராவேசமா ஆரம்பிச்சாரு... ஆனா, சப்புன்னு முடிச்சிட்டாரு. ' நான் அதைச் செய்வேன்.... இதைச் செய்வேன்'னு போராட்ட மிரட்டல் எல்லாம் விடறதோட சரி! எதையுமே செய்யறதில்லை ' ' என்று சலித்துக் சொண்டது அந்த உருவம்.

" எல்லாம் தமிழ்ப்பற்று இருக்கற மாதிரி சும்மா வேஷம் போடறாங்களோன்னு சந்தேகமா இருக்கு” ஒருவித ஏமாற்றத்தோடு சொன்னான் அந்த இளைஞன்.

அந்த உருவம் இப்போது ஒரு தெளிவான திட்டத்தோடு தன் பேச்சை ஆரம்பித்தது. " உங்களை மாதிரி உத்வேகத் தோட இருக்கறவங்களுக்கு இப்போ இருக்கிற எந்த கட்சியுமே உருப்படியானதா தெரியாது தோழர். அதுக்குக் காரணம், எந்தக் கட்சியுமே தமிழ்நாட்டோட எதிர்காலம் பற்றி தனியா சிந்திக்கவில்லை. ஆனா, நாங்க மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றித் தனியா சிந்திக்கிறோம். நாங்கன்னா... நான் உறுப்பினரா இருக்கிற தமிழ்நாடு விடுதலைப் படை!

எங்களை மாதிரியே தமிழ்நாட்டைப் பத்தி நீங்களும் சிந்திச்சா, எங்க பின்னால வாங்க.... இந்த வழவழா கொழ கொழா தலைவர்களை மறந்திடுங்க... யோசிச்சி நல்ல முடிவெடுங்க. " கை குலுக்கி விடைபெறுகிறது அந்த உருவம்.

இது இன்னொரு காட்சி...

அரியலூர் கல்லூரியில் படிக்கும் அந்த மாணவனுக்கு காதல் தோல்வி. அவன் காதலிக்கு அன்று அரியலூரில் வேறொரு மாப்பிள்ளையுடன் கல்யாணம்... அதே நாளில் இவனும் ஒரு முடிவோடு அரியலூரிலிருந்து சில்லக்குடி போகும் ரயில்வே டிராக் பக்கம் போனான். ' தங்கள் காதல் மலர்ந்த அதே ரயிலில் தலை கொடுத்து செத்துப்போக வேண்டும் ' என்பதுதான்

இவன் மனதில் அப்போதிருந்த ஒரே சிந்தனை!

தூரத்தில் ரயில் சத்தம் கேட்டது. சரியாய் தண்டவாளத்தின் மீது கழுத்து இருக்குமாறு ஒருக்களித்து படுத்துக்கொண்டு, கண்களை இறுக மூடினான். இப்போது ரயில் வரும் சத்தம் தெளிவாய் கேட்டது. கூடவே யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது! ஓடி வந்தவன் இவனருகே நின்றுதான் மூச்சு வாங்கினான். “ எழுந்திரு " என்று அதட்டல் போட்டான்.

இவன் தயங்கியவாறு எழுந்து நின்றான். ஓடிவந்தவன் இவன் தோளில் கைபோட்டு இழுத்துச் சென்று இறுக அணைத்துக்கொள்ள, இருவரும் ஓரமாய் நின்று கடந்து போகும் ரயிலை வேடிக்கை பார்த்தனர்.

ரயில் போய் சத்தமெல்லாம் அடங்கிய பிறகு, “ என்ன முட்டாள்தனம் இது? " என்று கடிந்து கொண்டான் ஓடிவந்தவன்.அழுது கொண்டே தன் சோகக்கதையைச் சொன்னான்.

" வாழ்க்கை இதோட முடிஞ்சிடலை தோழா! இந்த அற்ப விஷயத்துக்காக போக்கிக்க நினைச்ச உன்னோட உயிரை அர்த்தமுள்ளதா ஆக்கறோம். என்னோட வா! " என்று உரிமையோடு கூப்பிட்டு உபதேசம் பண்ண, இவன் தண்டவாளத்தை மறந்து, தற்கொலையை மறந்து அவன் பின்னால் போனான்!

இப்படி ஆளை நோட்டமிட்டு, பலவீனம் பார்த்து அடித்து தமிழ்நாடு விடுதலைப்படைக்கு ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தப் படையின் தலைவன் தமிழரசன் பாணி மட்டும் முற்றிலும் வேறு! ஏதாவதொரு கம்யூனிஸ்ட் கட்சியிலோ, திராவிடர் கழகத்திலோ அல்லது தமிழ் அமைப்புகள் எதிலாவது பொறுப்புகளில் இருப்பவர்களிடம் போய் நிற்பார்.

தமிழரசனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கும் அவர்கள், திடீரென இவரை எதிரில் பார்த்ததும் அரண்டு போய் விடுவார்கள். வரவேற்று உட்காரச் சொல்வார்கள். சம்பிரதாயப் பேச்செல்லாம் கிடையாது தமிழரசனிடம்.

உட்கார்ந்ததும் தன் லெதர் பேக்கை திறப்பார். உள்ளே இருக்கும் மெஷின் கன்னை எடுப்பார். தான் தேடிவந்த நபர் பயத்தோடு கண்கள் விரிய அந்த இரும்பு எமனைப் பார்ப்பதை ரசிப்பார். கூலாய் அந்த நபர் முன்னே வைப்பார்.

" என்னவோ தமிழ்நாட்டோட தலையெழுத்தையே மாற்றணும்னு மேடையிலே பேசறீங்களே... எல்லாம் பேசிட்டு வீட்டுக்குள்ளே புகுந்துகிட்டா எப்படிய்யா தலையெழுத்து மாறும்? ஆயுதப் புரட்சி பண்ணாத்தான் சுதந்திரம் வரும்.... தலையெழுத்து மாறும்! என்னோட வா... என்கிட்ட ஆயுதம் இருக்கு. புரட்சி செய்யலாம்! " என்பார் அதிரடியாக. அவரது இந்தத் ' துப்பாக்கி வைத்தியத்தில் சிக்கி மனம் மாறி, அவரது தோட்டாக்களாகவே மாறியவர்கள் எத்தனையோ பேர்!

தமிழ்நாடு விடுதலைப்படை என்ற ஆயுத விதையை விதைத்தது, இந்தத் தமிழரசன்தான். பிறகு, முந்திரிக்காடு களை அடைக்கலபூமியாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு அவர்கள் வழி வந்த இயக்கத்தினரின் செயல்பாடுகள்தான் இன்று சந்தனக்காடு வரை நீண்டிருக்கிறது.

மேலும் சலசலக்கும்..!

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `அறுவடை இயக்கம்... அழித்தொழித்தல்... தமிழரசன்| அத்தியாயம் 15

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : " `எல்லாரும் தனியாவே மாட்டிக்கிட்டுச் சாகறீங்களே?’ | அத்தியாயம் 13

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொலை... கோபம்... பழிக்குப் பழி’ | அத்தியாயம் 12

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `இப்போ எதிரேதானே இருக்கோம். ம்.. வெட்டு பார்ப்போம்' | அத்தியாயம் 11

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `முந்திரிக்காடு ஏலமும் பழிக்குப்பழி மோதலும்’ | அத்தியாயம் 10

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `கொள்கை முழக்கத்தோடு துவங்கிய இயக்கம்... அன்று’ | அத்தியாயம் 9

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க