செய்திகள் :

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : புலவர் மீதான தமிழரசனின் பக்தியும் கைதும்| அத்தியாயம் 17

post image
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...

இரண்டு கொலைகள்... ஒரு கொலை முயற்சி என மூன்று வழக்குகளுக் காக போலீஸ் அப்போது தமிழரசனைத் தீவிரமாய்த் தேடிக்கொண்டிருந்தது. எசனூர் பிள்ளையைக் கொல்ல முயன்றது, ஒரத்தூர் மணியக்காரரைக் கொன்றது ஆகியவற்றோடு அய்யம் பெருமாளைக் கொன்றதும் இன்னொரு வழக்கு!

அய்யம்பெருமாளைக் கொன்றதற்குக் காரணம், புலவர் கலியபெருமாள் மீது தமிழரசன் கொண்டிருந்த பக்தி! புலவரின் சொந்தக் கிராமமான சௌந்தர சோழபுரத்துக்குப் பக்கத்தில் இருக்கும் சம்பேரி கிராமத்துக்காரர்தான் அய்யம் பெருமாள். ஆரம்பக் காலத்தில் புலவருக்கு ரொம்பவே நெருக்கமாக இருந்தார். ஊருக்குள் நடந்த பாதைத் தகராறு ஒன்று, இருவரையும் ஜென்ம விரோதிகளாக்கிவிட்டது!

விஷயம் போலீஸின் கவனத்துக்குப் போனது.... புத்திசாலித் தனமாக இந்த விரோதத்தைப் பயன்படுத்தி போலீஸார், அய்யம்பெருமாளைத் தங்கள் வழிக்குக் கொண்டு வந்தனர். புலவரோடு ரொம்ப நெருங்கிப் பழகியவர் என்பதால், அவரின் எல்லா ரகசியங்களும் அய்யம்பெருமாளுக்குத் தெரிந்திருந்தன.

ஒளிவுமறைவின்றி எல்லாவற்றையும் அவர் போலீஸிடம் ஒப்பித்துவிட்டார்!

புலவரைத் தேடி வருகிறவர்கள், அவரது சொந்தக்காரர்களில் அவரோடு இயக்கத்தில் இருப்பவர்கள், அவர்களது திட்டங்கள், தலைமறைவு வாழ்க்கைக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் மறைவிடங்கள் என்று எல்லாமே போலீஸுக்குத் தெரிந்து போயின.

தலைமறைவாக இருந்த புலவரைப் போலீஸால் ஏதும் செய்ய முடியவில்லை! ஆனால், அய்யம்பெருமாள் கொடுத்த லிஸ்ட்டை வைத்துக்கொண்டு அதில் இருந்தவர்களை விசாரணை, கைது என்று வாட்டியெடுக்க ஆரம்பித்தது. புலவரை அவர்களிடமிருந்து தனிமைப் படுத்திக் கடைசியாக புலவரையும் கைது செய்வதுதான் போலீஸின் நோக்கம்.

இந்தத் தகவல்கள் எல்லாமே ஆட்கள் மூலம் புலவருக்குத் தெரிந்தது. புலவரைவிட ரொம்பவே கோபப்பட்டது தமிழரசன்தான்! அப்போது கும்பகோணம் அருகே ஒரு கிராமத்தில் புலவரும் தமிழரசனும் தலைமறைவாக இருந்தார்கள். புலவரின் உறவுக்கார இளைஞர் ஒருவர்தான் இவர்களைக் கண்டுபிடித்துத் தகவல் சொல்லி அழுது விட்டுப் போனார்!

அன்று இரவு முழுக்க தமிழரசன் தூங்கவில்லை... மறுநாள் காலையில் புலவர் தூங்கி எழுந்ததும், " ஒரு சின்ன வேலை இருக்கு.... முடிச்சிட்டு நான்கே நாள்ல வந்துடறேன். இங்கேயே இருங்க " என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

சைக்கிளை நிதானமாக ஓட்டிக்கொண்டு வந்தவர், அந்த இரவிலேயே பெண்ணாடம் வந்துவிட்டார். புலவரோடு பழகியவர் என்பதால் அய்யம்பெருமாளை அவரும் தெரிந்து வைத்திருந்தார். திட்டமிட்டபடியே, தமிழரசனின் அரிவாள் வீச்சில் அய்யம்பெருமாள் அலறித் துடித்து இறந்துபோனார்.

இரண்டு நாட்கள் எங்கெங்கோ சுற்றிவிட்டு, அய்யம்பெருமாளின் மரணச் செய்தி வந்த செய்தித்தாளையும் வாங்கிக்கொண்டு போய்தான் புலவரைப் பார்த்தார் தமிழரசன். அப்போது போலீஸின் கையில் இருந்தது எல்லாம் கல்லூரிக் காலத்தில் எடுக்கப்பட்ட தமிழரசனின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தான்! வலது கன்னத்தில் ஒரு ஈ உட்கார்ந்து இருப்பது மாதிரியான சைஸில் கறுப்பாய் மரு இருக்கும்... அந்த அடையாளத்தை முக்கியமாக வைத்துதான் அவரைத் தேடி அலசியது போலீஸ். தமிழரசனோ தன் கன்ன மருவை மறைக்க தாடி வளர்த்து இருந்தார்.

ஆனாலும் அவரால் கடைசிவரை தப்ப முடிய வில்லை. பஸ்ஸில் நல்ல கூட்டம்... கூட்டத்துக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டிருந்தார் தமிழரசன். அப்பாவி கிராமத்து முகங்களின் நடுவே ' யார் தன்னைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? ' என்ற நினைப்புதான் ஓடியது தமிழரசனுக்குள்! ஆனால் புது சட்டையில் இருந்த செம்மண் கறை அவரை வித்தியாசமாகக் காட்டியது. அதே பஸ்ஸில் வந்த ஆடியபாதம் என்ற சப் - இன்ஸ்பெக்டர் பார்த்த கணத்திலேயே தமிழரசனை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் வெளிக்காட்டவில்லை. ' எப்படிப் பிடிப்பது? தமிழரசன் கையில் என்ன ஆயுதம் இருக்கும்? ' என்று யோசித்தவாறே வந்தார். அதேசமயம் தமிழரசனையும் பார்வையிலிருந்து தவற விடவில்லை!

' ஓடும் பஸ்ஸில் திடீரெனப் பிடிக்க முயற்சி செய்தால் பயணிகளில் யாரையாவது தாக்கிவிட்டுக் கூச்சல் குழப்பத்தில் ஆள் தப்பிவிட வாய்ப்புண்டு... தனக்கும் துணைக்கு ஆள் தேவை... அரியலூர் பஸ் ஸ்டாண்ட் போகும்வரை காத்திருந்து அங்கு முயற்சிக்கலாம். ஒருவேளை, அங்கு போலீஸார் யாராவது இருந்தால் அவர்கள் நிச்சயம் உதவுவார்கள். '

இப்படிப்பட்ட எண்ணங்களோடு ஆடியபாதம் காத்திருந்தார். அரியலூர் பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தது பஸ்! பயணிகளில் பலர் இறங்க, தமிழரசனும் கும்பலோடு சேர்ந்து இறங்கப் போனார். கூட்டம் குறைந்துகொண்டே வர, முன்படிக்கட்டு வழியாய் இறங்கி கீழேபோய் காத்திருந்த ஆடியபாதம், பின் படிக்கட்டில் தமிழரசன் இறங்கியதுமே எதிரே போய் அவர் கையைப் பிடித்து முதுகுக்கு பின்னே வளைத்து அப்படியே அமுக்க முயன்றார்.

நொடியில் உஷாரான தமிழரசன், பிடியை உதறிக் கொண்டு இடுப்பு பெல்ட்டில் இருந்த பிச்சுவா கத்தியை உருவி ஆடியபாதத்தை குத்தப் போனார். ஆனால், அதற்குள் பஸ் ஸ்டாண்டில் இருந்தக் கூட்டம் பரபரப்பாகிவிட்டது! யாரோ திருடன், போலீஸ் அதிகாரியைக் கத்தியால் குத்தப் போகிறானே என்று பரபரத்தனர். துடுக்கான ஆட்கள் சுற்றி வளைத்து, கோழி அமுக்குவது மாதிரி தமிழரசனை அமுக்கிவிட்டார்கள்.

திருச்சி மத்திய சிறையில்தான் தமிழரசனை அடைத்தார்கள். குற்றப்பிரிவு போலீஸாரின் பலவிதமான விசாரணைகளுக்கு அவர் அசைந்து கொடுக்கவில்லை. எந்தத் தகவலும் அவரிடமிருந்து பெயரவில்லை. அதன் பின் போலீஸ் வேறு விதமான யுக்திகளைக் கையாண்டது. ஜெயில் சூபரின் டெண்டெண்ட்டை விட்டு தமிழரசனோடு பேச வைத்தது.

அவர் தன் அறைக்குத் தமிழரசனைக் கூப்பிட்டுப் பேசினார். இனிமையான குரலில் மிருதுவாகப் பேசினார். " எவ்வளவு சாதாரண குடும்பத்திலிருந்து வந்து இருக்கிறாய்! இப்படி ஒரு இன்ஜினீயரிங் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்கக் கூடியதா? உன்னைப் படிக்க வைத்து, ஒரு உயர்ப்பதவியில் உட்காரவைத்து, கார் பங்களா என்று வசதிகளோடு நீ வாழ்வதைப் பார்க்கத்தானே உன் அம்மாவும் மாமாவும் பாடுபட்டார்கள். அவர்கள் ஆசையில் மண் அள்ளிப் போடலாமா? உனக்கு ஏன் இந்த வீண் வேலை? இப்போதுகூட உன் விட்டுப் போன படிப்பைத் தொடர நான் உதவுகிறேன். இந்த சகவாசத்தை விட்டுவிடு! " என்று அட்வைஸ் செய்தார்.

தமிழரசனின் மூளையில் இதெல்லாம் ஏறவில்லை. " இந்த நாட்டு மக்கள் எல்லோருமே வறுமையிலும், பட்டினியிலும் இருக்கும்போது, நான் மட்டும் வசதியாக வாழ ஏன் ஆசைப்பட வேண்டும்? " என்று எதிர்க்கேள்வி கேட்டார்.

சூபரின்டெண்டெண்டுக்குப் பொறுமை பறந்து, கோபம் வந்துவிட்டது. “ உன்னைதான் இப்போது ஜெயிலில் போட்டாயிற்றே...? நீ செய்த கொடுமைக் கெல்லாம் கண்டிப்பாக, தூக்கு தண்டனைதான் கிடைக் கும். கேஸ் முடியும் வரை ஜெயிலில் இருந்துவிட்டு சாக வேண்டியதுதான் ” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினார்.

" அப்படியெல்லாம் முடிவு செய்துவிட வேண்டாம். கண்டிப்பாய் சிறையில் இருந்து தப்பிப்பேன். பிறகு, விட்டுப் போன வேலைகளை எல்லாம் தொடரப் போகிறேன் ” என்று அமைதியாகப் பதில் சொன்னார் தமிழரசன். ' வீண் கனவு காணாதே! ' ' என்றார் சூபரின்டெண்டெண்ட்.

" சிறையிலிருந்து தப்பிப்பது புரட்சியாளர்களின் கடமை. அதைத் தடுத்து நிறுத்துவது உங்கள் கடமை ” என்று உறுதி யான குரலில் சொல்லி எழுந்துகொண்டார் தமிழரசன்.


மேலும் சலசலக்கும்...!

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `ஆயுதம் ஏந்திப் போரிடும் ராணுவத்தையே...' | அத்தியாயம் 20

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : தமிழரசனும் தனித்தமிழ்நாடு கோரிக்கையும் | அத்தியாயம் 19

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `சிறையில் இருந்து தப்பித்தல்...’| அத்தியாயம் 18

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : தமிழரசனும் புலவர் கலியபெருமாளும்... | அத்தியாயம் 16

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `அறுவடை இயக்கம்... அழித்தொழித்தல்... தமிழரசன்| அத்தியாயம் 15

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தமிழரசன் பாணி மட்டும் முற்றிலும் வேறு’ | அத்தியாயம் 14

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க