முந்திரிக்காடு டு சந்தனக்காடு : தமிழரசனும் புலவர் கலியபெருமாளும்... | அத்தியாயம் 16
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
தமிழரசன் அடுத்து அழித்தொழிக்கத் திட்டமிட்டது சேத்தியாதோப்பு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் மணியக்காரரை! தன் வழக்கமான தலைமறைவுக் கோலத்தில் அந்த மணியக்காரர் வீட்டுக்கே நேராகப் போனார். “ பொன்பரப்பியிலிருந்து வர்றேன் சாமீ... ஊர்ல விவசாயம் இல்லை. ஏதாவது கூலிவேலை கொடுத்தா, இங்கேயே தங்கிப் பிழைச்சுக்கறேன்... ' ' என்றார் தமிழரசன். மணியக்காரர் தமிழரசனை ஏறஇறங்கப் பார்த்தார். உண்மையிலேயே பஞ்சத்தில் அடிபட்ட ஆசாமி மாதிரியிருந்த அவரை நம்பி, மாட்டுக் கொட்டகை வேலையில் சேர்த்தார்.
தினசரி மாடுகளுக்கு வைக்கோல் போட்டு, சாணியை வாரி, தொழுவத்தைச் சுத்தம் செய்து, மாடுகளைப் பராமரிக்கிற வேலை. நான்கு நாட்கள் வேலை சரியாக இருந்தது. ஐந்தாவது நாள், பக்கத்து வீட்டு வேலைக்காரனிடம் அரிவாள் இரவல் வாங்கிக்கொண்டு நெல் அறுக்கும் வேலைக்குப் போனார் தமிழரசன். மாலையில் அறுவடை முடிந்ததும் கூலியாக நெல் கொடுத்தார்கள். அந்த நெல்லை அப்படியே எடுத்துப்போய் சேத்தியாதோப்பில் விற்றுவிட்டு, சொந்தமாக ஒரு அரிவாள் வாங்கினார்!
வாங்கின அரிவாளோடு மணியக்காரர் வீட்டுக்கு வந்தார். முன்னிரவு நேரம்... வீட்டு வாசக்காலில் தலையை வைத்து முன்வராண்டாவில் படுத்திருந்தார் மணியக்காரர். சுற்றும்முற்றும் பார்த்தார் தமிழரசன். ரோட்டில் ஆள் நடமாட்டமே இல்லை... மணியக்காரரின் கழுத்தைக் குறிவைத்து அரிவாளை ஓங்கினார் தமிழரசன். அதன் பிறகு ஒரே வெட்டு... கழுத்து துண்டாகியது.
மணியக்காரரின் இறுதி ஓலம் கேட்டு ஆட்கள் ஓடிவந்தனர். தமிழரசன் அரிவாளோடு ஓட்டம் பிடித்தார். ஒன்று, இரண்டு ஆட்களாகத் துரத்தியவர்கள்... இப்போது பெரும் கும்பலாகிவிட்டனர்! தமிழரசன் ஓடிக் கொண்டிருந்த தெரு இப்போது குறுகலாகி, முட்டுச் சந்தாக திடீரென முடிந்துவிட்டது. ஒரு பெரிய குவியலாக முள்செடிகளைப் போட்டிருந்தார்கள். வெறியோடு துரத்தியவர்கள் நெருங்கிவிட்டார்கள்.
நொடிகூடத் தாமதிக்கவில்லை தமிழரசன். அந்த முள்குவியலில் தாவிக் குதித்து, உடலில் குத்திக் கிழித்துக் காயம் ஏற்படுவதைப் பொருட்படுத்தாமல் ஓடித் தப்பித்தார்! தமிழரசன் செய்த இந்தக் கொலை... கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகிலுள்ள ஒரத்தூர் கிராமத்தில்... ஊர்க்காரர்கள் ஒருபுறம் வேட்டை நாய்கள் போல் மூர்க்கமாய் துரத்த, சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு போலீஸும் உடனடியாய் வந்திறங்கி தமிழரசனை தேடி அலசியது. ஓட்டமாய் விரைந்த தமிழரசன் போய்ச் சேர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது, உட்கோட்டை கிராமத்தில். தமிழரசன் தன் ஆரம்பகாலத் தலைமறைவு வாழ்க்கையில் குருவாகக் கருதியது, புலவர் கலியபெருமாளைத்தான்.
அவர் பெண்ணாடம் அருகேயுள்ள சௌந்தர சோழபுரம் கிராமத்தில் பிறந்தவர். தமிழ்ப் புலவர். பட்டயப்படிப்பு முடித்துவிட்டு பெரம்பலூர் மாவட்டம் பொன்பரப்பியில் ஆசிரியராய் வேலை செய்தவர். தீவிரவாதத் தத்துவங்கள் அவரை ஈர்க்க, அமைதியான வாழ்க்கை திசைமாறிவிட்டது!
சொந்த ஊரில் உள்ள பங்காளிகள், தெரிந்தவர்கள், மாணவர்கள் என்று ஏகப்பட்ட பேரைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு போராட்டக்களத்தில் குதித்தார். வெள்ளாற்றின் கரையை ஒட்டிய கிராமம், சௌந்தர சோழபுரம். ஆற்றங்கரை புதர்கள், கரும்புத் தோட்டங்கள், தென்னந்தோப்புகள் என்று தலைமறைவு வாழ்க்கைக்கு அருமையான புகலிடம்.... போதாக்குறைக்கு புலவரின் அன்பான உபசரிப்பு வேறு!
தமிழகம் முழுக்க இருந்து பல தலைமறைவு ஆசாமிகள் வந்து போகும், தங்கியிருக்கும் புகலிடம் ஆகிப்போனது அந்தக் கிராமம். அப்போது பணக்காரர்களின் நிலங்களில் விளைச்சலை ஏழைக் கூலித் தொழிலாளிகளே அறுவடை செய்து எடுத்துக்கொள்ளும் அறுவடை இயக்கமும், பணக்காரர்களைக் கொன்று முடிக்கும் ' அழித்தொழிப்பு நடவடிக்கையும் தான் இவர்களின் மூச்சாக இருந்தது. தான் திரட்டிய கூலித் தொழிலாளிகளோடு கிராமங்களுக்குப் போய் அறுவடை இயக்கமெல்லாம் நடத்திக் காட்டிய புலவருக்கு அழித்தொழிப்பில் ஆர்வம் இருந்ததில்லை!
ஆனால், அவரிடம் அடைக்கலம் தேடி வந்தவர்கள் அப்படியில்லை... வெறுமனே அரிவாளை மட்டும் எடுத்துப்போய் அழித்தொழிப்பில் ஈடுபடும்போது பிடிபடும் ஆபத்து இருக்கிறது.... ஆளைத் தேடிப்பிடித்து அருகில் போய் வெட்ட வேண்டி இருக்கிறது..... குறி வைக்கப்பட்ட நபர் பலசாலியாக இருந்தால் சமயத்தில் கைகலப்பு நடந்து, கொலை செய்யப் போனவர்களின் நிலைமையே கவலைக்கிடமாகி விடுகிறது..
இதற்கெல்லாம் ஒரே தீர்வு வெடிகுண்டுதான் என்று முடிவு செய்தார்கள் அவர்கள்! அந்தக் காலகட்டத்தில் ஆந்திர மாநில நக்சலைட்டுகள் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் சகிதமாய் போலீஸாரோடு மோதிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் போய் வெடிகுண்டு செய்யும் பயிற்சி எடுக்க, தமிழ்நாட்டு ஆட்கள் முடிவு செய்தார்கள். சென்னை சர்ச்சில், தஞ்சை கணேசன், மதுரை காளியப்பன் என்று மூன்று பேர் இப்படிப் பயிற்சி எடுக்க அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்கள் மூவருமே அப்போது கல்லூரி மாணவர்கள். இரண்டு மாதப் பயிற்சி முடித்து திரும்பியதுமே அவர்கள் வெடிகுண்டு செய்ய தேர்ந்தெடுத்த இடம், புலவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு! வெடி உப்புடன் சில பொருட்களைச் சேர்த்து, அதில் ஏதோ ஒரு அமிலத்தை ஊற்றி இறுகச் செய்து குண்டுகளைத் தயாரிப்பதுதான் அப்போது அவர்களுக்கு தெரிந்த டெக்னாலஜி! விட்டெறிந்தால் எதிலாவது மோதி, அந்த அதிர்வால் வெடித்து, வெடித்த இடத்தில் ஏகப்பட்ட சேதத்தை ஏற்படுத்தக் கூடிய வெடிகுண்டு இது!
ஆனால், அமிலத்தை நேரே இந்தக் கலவையின் மீது அப்படியே ஊற்றிவிட்டால் ஆபத்து... அந்த நொடியே ஒட்டுமொத்தமாய் வெடித்துச் சிதறி, செய்தவரையே சாகடித்துவிடும்! எவ்வளவோ பயிற்சி எடுத்து, பழக்கமாகி இருந்தாலும்கூட முதல் முறையாய், தனியாய் குண்டு தயாரிக்கிறோம் என்ற பதட்டம் அவர்களுக்கு இருந்தது. நடுக்கத்தில் கைதவறி அமிலம் அந்த பாத்திரம் முழுக்க சிதறியது.
அவசரமாய் வேதிமாற்றங்கள் நிகழ்ந்து பெரும்புகை கிளப்பி, நொடியில் ஏராள சத்தத்தோடு வெடித்துச் சிதறியது அந்தப் பாத்திரம். செய்த மூன்று பேரும் உடல் சிதறி அங்கேயே செத்துப் போனார்கள். பக்கத்தில் வேடிக்கை பார்க்க உட்கார்ந்திருந்த ஆட்கள் சிலருக்கும் காயம்! புலவர் அப்போது அங்கு இல்லை. ஊருக்குள் தன் வீட்டில் இருந்தார். அடிபட்ட ஆள ஒருவர் ஓடிப்போய் புலவரிடம் தகவல் சொன்னார். நிமிடங்களில் ஓடிப்போய் தோப்பைப் பார்த்த புலவர், தகவல் ஊருக்குள் பரவுவதற்குள் ஏதாவது செய்யத் தீர்மானித்தார்.
அவசர அவசரமாய் அங்கேயே பள்ளம் தோண்டி, மூன்று பேர் உடலையும் தோப்பிலேயே புதைத்தார்கள். காயம்பட்டவர்களை வெளியூர்களில் எங்காவது போய் தங்கி வைத்தியம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு, புலவரும் வீட்டில் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பி தலைமறைவானார்! இந்தத் தலைமறைவு வாழ்க்கையின் போதுதான் புலவருக்கும் தமிழரசனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒன்றாகவே பயணித்து ஊர் ஊராய் போய் தலைமறைவாய் செயல்பட்டுக் கட்சியை வளர்த்தார்கள்.
தென் ஆற்காடு, திருச்சி, தஞ்சை என்று மூன்று மாவட்டங்களில் இவர்கள் சுற்றாத கிராமங்களே இல்லை! இப்படி வந்தபோதுதான் உட்கோட்டையில் புலவரை தங்க வைத்துவிட்டு, ஒரத்தூர் வந்து மணியகாரரைக் கொலை செய்தார் தமிழரசன். நாடகமாடி, ஒரே வாரத்தில் கொலையை முடித்துவிட்டுத் தப்பியவர், நேராய் புலவரிடம் வந்து நடந்ததை சொன்னார். திகைத்துப்போய் நின்ற அவரிடம், " போலீஸ் தேட ஆரம்பித்துவிட்டது. இங்கு இருந்தால் சிக்கல்... உடனே கிளம்புவோம்! " என்று புலவரைக் கூட்டிக்கொண்டு நடந்தே தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து, புலவரின் உறவினர் ஒருவர் வீட்டில் அவரைப் பத்திரமாய் சேர்த்தார் தமிழரசன்.
புலவர் அங்கேயே இருக்க, தமிழரசன் மட்டும் கிளம்பி அரியலூர் வந்துவிட்டார். அடுத்த சில நாட்களிலேயே புலவர் அங்கிருப்பதை மோப்பம் பிடித்து, போலீஸ் அவரை வளைத்து மடக்கி விட்டது! திருச்சி மத்திய சிறையில் கொண்டுபோய் அவரை அடைத்தார்கள். தமிழரசன் தன்னோடு சேர்ந்த ஆட்களிடம் சில எளிய பழக்கங்களை சொல்லிக் கொடுத்திருந்தார். இவர்கள் கடையில் வாழைப்பழம் வாங்கினால், வெறும் பழத்தை சாப்பிட்டுவிட்டு, தோலை எறிய மாட்டார்கள. பழத்தை தோலோடு சேர்த்துதான் சாப்பிடுவார்கள். ' உழைக்கும் மக்களின் உணவு இது.
இந்தத் தோல் கிடைத்தால்கூட பசி தீருமே என்கிற நிலையில் ஏழைகள் இருக்கும் நாடு இது.... நாமும் அவர்களைப் போல் வாழவேண்டும் ' என்பது தமிழரசனின் சித்தாந்தம். அதேபோல் புது சட்டை எடுத்தால்கூட அப்படியே போட்டுக்கொள்ள மாட்டார்கள். அதை மண்ணில் புரட்டி அழுக்காக்கி, அதன்பிறகுதான் அணிவார்கள். அவயங்களை மறைக்க கந்தல்கூட கிடைக்காமல் தவிக்கும் ஏழைகளின் நாடு இது...
அவர்களுக்காகப் போராடும் நாம் புதுத்துணி அணிவது அநியாயம் ' என்பாராம் தமிழரசன். ஆட்கள் பிடிபட, பிடிபட... இவர்களின் பழக்கவழக்கங்கள் ஒவ்வொன்றாய் போலீஸுக்கு தெரிய வந்தது. இதை வைத்தே இவர்களை மடக்க ஆரம்பித்தது போலீஸ், தம்மடிக்க பெட்டிக் கடைகளில் மஃப்டியில் ரகசிய போலீஸார் ஒதுங்கும்போது, அவர்கள் கண்ணெதிரே வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டு மாட்டியவர்கள் சில பேர். புது சட்டையில் செம்மண் கறையோடு நெஞ்சை நிமிர்த்தி நடந்து மாட்டியவர்கள் சில பேர்! தமிழரசனும் அப்படித்தான் சிக்கினார்....
- மேலும் சலசலக்கும்...