திமுகவினா் உற்சாகமாக தோ்தல் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் பி. மூா்த்தி வேண்டுகோள்
புதுச்சேரி மக்களுக்கு புத்தாண்டில் கிடைத்த அதிர்ச்சித் தகவல்!
புதுச்சேரியில், பெட்ரோல், டீசல் மீது வாட் வரி உயர்த்தப்பட்டதையடுத்து லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. புத்தாண்டு பரிசாக இன்று முதல் இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்தது.
புதுச்சேரியில் கரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி கடந்த 2021-ம் ஆண்டு பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்கப்பட்டது. அப்போது லிட்டருக்கு 7 ரூபாய் வரை குறைக்கப்பட்டது.
தற்போது பெட்ரோல் மீதான வாட் வரி 2.44% மற்றும் டீசல் மீதான வாட் வரி 2.57% என உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கடந்த 27-ம் தேதி வெளியிட்டார்.
இந்த விலை உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என யூனியன் பிரதேசம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் படி பெட்ரோல் வாட் வரியானது புதுச்சேரியில் 16.98%, காரைக்கால் - 16.99%, மாகி- 15.79%, ஏனாம் 17.69% என உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல் டீசல் மீதான வரி 2% என அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக லிட்டருக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை விவரம்:
புதுச்சேரியில் ரூ.94.26-ல் இருந்து ரூ.96.24 எனவும், காரைக்காலில் ரூ. 94.03-ல் இருந்து 96.03 எனவும், மாகேவில் ரூ.91.92-ல் இருந்து ரூ.93.92 எனவும், ஏனாமில் ரூ.94.92-ல் இருந்து ரூ.96.92 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதே போல் டீசல் விலையும் இரண்டு ரூபாய் உயர்ந்து புதுச்சேரியில் ரூ. 86.47 எனவும், காரைக்காலில் ரூ.84.35, மாகியில் ரூ.81.90, ஏனாமில் ரூ.84.75 என உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு ரூபாய் உயர்ந்தாலும் அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம், ஆந்திர மாநிலங்களை விட விலை குறைவு என்பது குறிப்பிடதக்கது.