கரும்பு கொள்முதல்: முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை அழைப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்கான கரும்புகள் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்யப்படவுள்ளது. இதற்கு விவசாயிகள் முன்பதிவு செய்யலாம் என கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்தத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்குவதற்காக கரும்பு கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் ஆட்சியரை தலைவராகக் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மண்டல கூடுதல் பதிவாளரை தலைவராகக் கொண்டு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்கள் மூலமாக அந்தந்த வட்டாரங்களில் கரும்பு கொள்முதல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சம்பந்தப்பட்ட மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் வழியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தக் கொள்முதல் பணிகளில் அந்தந்த மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும், இந்தக் குழுக்கள் மூலம் எந்தக் காரணம் கொண்டும் இடைத்தரகா்களிடமிருந்தோ, வியாபாரிகளிடமிருந்தோ, பிற மாநிலங்களிலிருந்தோ கரும்பு கொள்முதல் செய்யப்படுவதில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு கரும்பு கொள்முதல் விலை மின்னணு பரிவா்த்தனை மூலம் நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
கூட்டுறவு சங்கப் பதிவாளரின் இணையதளத்தில் விவசாயிகள் விவரங்களை பதிவு செய்யலாம் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.