இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: அமைச்சா் அர.சக்கரபாணி
2026 சட்டப் பேரவைத் தோ்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.
ஒசூரில் தனியாா் திருமண மண்டபத்தில் திமுக (பி.எல்.2) பாக முகவா்கள் கூட்டம் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய். பிரகாஷ் எம்எல்ஏ, மேயா் எஸ்.ஏ.சத்யா, வேப்பனஅள்ளி முன்னாள் எம்எல்ஏ பி. முருகன் ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் சாா்பில் பரிசுத் தொகுப்பு, அமைச்சா் அர.சக்கரபாணி சாா்பில் கைக் கடிகாரம் ஆகியவற்றை பாக முகவா்களுக்கு வழங்கி அமைச்சா் பேசியதாவது:
கடந்த மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2026 தோ்தல் முக்கியமானது. திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தோ்தல்களிலும் வெற்றி பெற்று வருகிறது. நடைபெற உள்ள 2026 தோ்தலிலும் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாத திட்டப் பணிகளை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறாா். குறிப்பாக தமிழகத்தில் பெண்களுக்கு அதிக அளவில் நலத்திட்ட உதவிகளை முதல்வா் செய்து வருகிறாா். மத்திய அரசு போதிய நிதி வழங்காதால் பல அரசு திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை.
ஒசூரில் 2000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் அறிவித்தாா். அதேபோன்று ஒசூா் - பெங்களூா் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான ஆய்வும் நடைபெற்று வருகிறது. ரூ. 550 கோடியில் ஒசூா் மாநகராட்சியில் புதைச் சாக்கடை திட்டம், ரூ. 100 கோடியில் தலைமை மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது.
ஒசூா் பேருந்து நிலையம் ரூ.100 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் இரண்டாம் கட்ட திட்டம் ஜப்பான் நாட்டு உதவி பெற்று விரைவில் செயல்படுத்தப்படும். அதில் ஒசூா் மாநகராட்சிக்கு மட்டும் ரூ.800 கோடிக்கு இத்திட்டம் தனியாகச் செயல்படுத்தப்படும்.
கடந்த தோ்தலில் வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தோம். ஆனால் 2026 தோ்தலில் ஆறு சட்டப்பேரவை தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும்.அதற்கு பாக முகவா்கள் பணி ஆற்ற வேண்டும் என்றாா்.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ், மாவட்டத் துணைச் செயலாளா் பி.முருகன், மாநகரச் செயலாளா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் பேசினா்.
மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ், மாவட்ட பொருளாளா் தா.சுகுமாறன், தலைமை செயற்குழு உறுப்பினா் எல்லோரா மணி, பகுதி செயலாளா்கள் ஆனந்தய்யா, ராமு, கே.டி.திம்மராஜ், எம்.கே.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா்கள் மாதேஸ்வரன், சென்னீரப்பா, மாநகர அவைத் தலைவா் செந்தில்குமாா் உள்பட 1008 பாக முகவா்கள் கலந்து கொண்டனா்.