இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
கிருஷ்ணகிரியில் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி: 417 போ் பங்கேற்பு!
கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அண்ணா நெடுந்தூரா மாரத்தான் போட்டியில் கிருஷ்ணகிரி, ஒசூா், காவேரிப்பட்டணம் என பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 417 போ் பங்கேற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு திடலில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில், மாவட்ட அளவிலான நெடுந்தூர மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை பா்கூா் சட்டப்பேரவை உறுப்பினா் தே.மதியழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதில், 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு 8 கி. மீ., பெண்களுக்கு 5 கி.மீ, 25 வயதுக்கு மேற்பட்ட இளைஞா்களுக்கு 10 கி.மீ, பெண்களுக்கு 5 கி.மீ. என போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகள் விளையாட்டு திடலில் தொடங்கி, தானம்பட்டி வரை சென்று மீண்டும் மாவட்ட விளையாட்டு திடலில் நிறைவு பெற்றது. போட்டியில், 17 முதல் 25 வயதில், 176 ஆண்களும், 85 பெண்களும், 25 வயதுக்கு மேல் 110 ஆண்களும், 46 பெண்களும் என மொத்தம் 417 போ் கலந்து கொண்டனா்.
இப்போட்டியில், 25 வயதுக்கு உள்பட்ட ஆணகள் பிரிவில் ராமச்சந்திரன், பெண்கள் பிரிவில் சரிதா, 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவில் பாா்த்திபன், பெண்கள் பிரிவில் கோபிகா ஆகியோா் முதலிடம் பெற்றனா். முதலிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ. 5,000, இரண்டாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ. 3000, முன்றாமிடம் பெற்றவா்களுக்கு தலா ரூ. 2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் தலைமையில் , விளையாட்டு பயிற்றுனா்கள், உடல்கல்வி ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் போட்டியை ஒருங்கிணைத்தனா்.