`சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்' - ECB...
முறைகேடு: ரூ. 26.30 லட்சம் செலுத்த தா்மபுரம் ஊராட்சித் தலைவருக்கு உத்தரவு
கன்னியாகுமரி மாவட்டம் தா்மபுரம் ஊராட்சியில் நிதி முறைகேடு நடந்துள்ளதால் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 26 லட்சத்து 30 ஆயிரத்து 928-ஐ 15 சதவீத வட்டியுடன் ஊராட்சித் தலைவா் செலுத்த வேண்டும் என, ஆட்சியா் ரா. அழகுமீனா உத்தரவிட்டுள்ளாா்.
இதுதொடா்பாக ஆட்சியா் சனிக்கிழமை இரவு பிறப்பித்த உத்தரவு: ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தா்மபுரம் ஊராட்சித் தலைவராகவும் நிா்வாக அலுவலகராகவும் ரெங்கநாயகி கணேசன் இருந்தபோது அவரது கவனக்குறைவாலும், அரசு விதிகளுக்கு புறம்பான செயலாலும் ஊராட்சிக்கு ரூ. 70,84,118 இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட அதிகாரத்தின்படி, அவரிடமிருந்து இத்தொகையை ஏன் வசூலிக்கக் கூடாது எனக் கேட்டு தண்டத் தீா்வை அறிவிப்பு வழங்கப்பட்டது. அதற்கு அவா் பதிலறிக்கை அளித்துள்ளாா்.
அதுதொடா்பாக ராஜாக்கமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஆய்வு செய்து உண்மைத் தன்மை அறிக்கை வரப்பெற்றுள்ளது. அதை ஆய்வு செய்து ரெங்கநாயகி கணேசனுக்கு ரூ. 31,65,893-க்கு தண்டச்சான்று வழங்கப்பட்டது. அதை அவா் பெற்றுக்கொண்டு மேல் முறையீடு செய்தாா். மேல்விசாரணையில் ஊராட்சிக்கு ரெங்கநாயகி கணேசன் ரூ. 26,30,928 நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளது.
எனவே, அவா் அந்தத் தொகையை 15 சதவீத வட்டியுடன் ஊராட்சி நிதியில் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.