ஆளும் கட்சி போராட்டத்துக்கு மட்டும் அனுமதியா? காவல் ஆணையருக்கு எதிராக பாஜக வழக்க...
`சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கான் போட்டியை இங்கிலாந்து புறக்கணிக்க வேண்டும்' - ECB-க்கு வலியுறுத்தல்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) இழுபறிக்குப் பின்னர், ஐ.சி.சி-யின் முடிவை ஏற்று அடுத்த மாதம் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி நடத்த ஒப்புக்கொண்டது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். பிப்ரவரி 19 தொடங்கி மார்ச் 9 வரை பாகிஸ்தான், துபாய் (இந்திய அணி ஆடும் போட்டிகள்) ஆகிய நாடுகளில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும்.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கெதிராக தலிபான் அரசு நடைமுறைப்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடுகளை எதிர்க்கும் வகையில், பிப்ரவரி 26-ம் தேதி பட்டியலிடப்பட்டிருக்கும் ஆப்கானிஸ்தானுக்கெதிரான போட்டியை இங்கிலாந்து அணி புறக்கணிக்க வேண்டும் என்று அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 160-க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு (ECB) கடிதம் எழுதியிருக்கின்றனர்.
அந்தக் கடிதத்தில், ``ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொடூரமாக நடத்தப்படுவதற்கு எதிராக இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணி வீரர்கள், அதிகாரிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதைப் பற்றி கருத்தில் கொள்ளுமாறு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக்கொள்கிறோம். இத்தகைய கடுமையான துஷ்பிரயோகங்கள் பொறுத்துக்கொள்ளப்படாது என்பதற்கான தெளிவான சமிக்ஞையை அனுப்ப வேண்டும். பாலின வேறுபாட்டுக்கு எதிராக நிற்க வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதற்கு உடனடியாகப் பதிலளித்த ECB தலைமை நிர்வாகி Richard Gould, ``ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடத்தப்படும் கொடுமைகளை ECB கடுமையாகக் கண்டிக்கிறது. ஐ.சி.சி-யின் அனைத்து உறுப்பு நாடுகளும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உறுதியேற்றிருக்கின்றன.
அதற்கிணங்க, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எந்த இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளையும் திட்டமிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை ECB தக்கவைத்திருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் தனிப்பட்ட உறுப்பினர்களின் செயல்களைக் காட்டிலும், ஐ.சி.சி அளவிலான ஒருங்கிணைந்த அணுகுமுறை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்." என்று அறிக்கையில் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சுமார் மூன்று ஆண்டுகளாக எந்தவொரு விளையாட்டு போட்டியிலும் அந்நாட்டுப் பெண்கள் கலந்துகொள்வதை தலிபான் ஆட்சியாளர்கள் தடைசெய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
VIKATAN PLAY - EXCLUSIVE AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...