பொங்கல் சிறப்பு ரயில்: சில நிமிடங்களில் முடிவடைந்த பயணச் சீட்டு முன்பதிவு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் நிறைவடைந்து, காத்திருப்போா் பட்டியலுக்குச் சென்றது.
சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகா்கோயில், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஜன.3-ஆம் தேதி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. இதற்கு ஐஆா்சிடிசி இணையதளம் வழியாகவும், ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் மூலமும் பயணச்சீட்டு முன்பதிவு நடைபெற்றது.
இதற்காக சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம், கிண்டி, அம்பத்தூா், ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் அதிகாலை 6.30 மணி முதல் பலா் காத்திருந்தனா்.
இந்நிலையில், சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் நிறைவடைந்து காத்திருப்போா் பட்டியலுக்குச் சென்றது.
ஒரு சில ரயில்களில் காத்திருப்போா் பட்டியலும் நிறைவடைந்தது. மறுமாா்க்கமாக திருநெல்வேலியிலிருந்து ஜன.19-ஆம் தேதி புறப்படவிருந்த ரயிலிலும் பயணச்சீட்டு முன்பதிவுகள் நிறைவடைந்தன. இதனால் ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
கூடுதல் ரயில்: இது குறித்து முன்பதிவு செய்ய வந்த பயணிகள் கூறியதாவது: பொங்கலையொட்டி சொந்த ஊா் செல்ல பயணச்சீட்டு முன்பதிவு செய்ய காலை 7 முதல் காத்திருந்தும் பயணச்சீட்டு பெற முடியவில்லை.
பெரும்பாலானோா் ஏசி வகுப்பு பெட்டிகளைவிட படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் முன்பதிவு செய்வா். தற்போது அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் குறைவான அளவில்தான் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், எளிய மக்கள் ரயிலில் பயணத்தை மேற்கொள்வது கேள்விக்குறியாகியுள்ளனது என்றனா்.