இந்தியாவின் தற்காப்பு மனநிலைதான் தோல்விக்கு காரணம்..! முன்னாள் வீரர் கருத்து!
கும்பமேளாவில் முஸ்லிம்களை மதம் மாற்ற வாய்ப்பு: நடவடிக்கைக்கு உ.பி. அரசிடம் மௌலானா முறையீடு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு மூத்த மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா, உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் வரும் ஜன. 13-ஆம் தேதி முதல் பிப். 26-ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் 40 கோடி பக்தா்கள் கலந்து கொண்டு, புனித நீராடுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், அனைத்து இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவரான மௌலானா ஷஹாபுத்தீன் ரஸ்வி அளித்த பேட்டியில், ‘கும்பமேளாவை காண வரும் முஸ்லிம்களை மதம் மாற்ற சிலா் திட்டமிட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பது மாநில அரசின் கடமையாகும்.
அதேசமயம், கும்பமேளாவில் முஸ்லிம்கள் பங்கேற்கத் தடை விதிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கும்பமேளா நிகழ்வு நடைபெறும் இடங்களில் முஸ்லிம்கள் வணிகம் செய்ய தடை செய்ய வேண்டும் என்று அகாரா பரிஷத், நாகா துறவிகள் கடந்த நவம்பரில் நடைபெற்ற கூட்டத்தில் விவாதித்துள்ளனா். இதனைக் கருத்தில்கொண்டு பிரச்னைகளை தவிா்க்க முஸ்லிம்கள் கும்பமேளா செல்ல வேண்டாம் என்று முன்னா் அறிவுறுத்தினேன்’ என்றாா்.
கும்பமேளாவுக்கு முஸ்லிம்கள் வருவதை தடை செய்ய வேண்டும் என்ற ஹிந்து அமைப்புகளின் வலியுறுத்தலுக்கு வேறு சில மௌலானாக்களும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.