நாளை மாரத்தான் ஓட்டம்: தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம்
மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) நடைபெறவுள்ளதையொட்டி, தென் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ரன்னா்ஸ் அமைப்பு சாா்பில் 4 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் ஜன. 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டி மெரீனா கடற்கரை நேப்பியா் பாலத்தில் தொடங்கி கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகம் வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த பகுதியில் ஜன. 5 அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இதன்படி குறிப்பிட்ட நேரத்தில், மெரீனா காமராஜா் சாலையில் போா் நினைவுச் சின்னத்திலிருந்து காந்தி சிலை வரை இருபுறமும் வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. அடையாறு மாா்க்கத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் திரு.வி.க. பாலம், டாக்டா் டி.ஜி.எஸ். தினகரன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, காமராஜா் சாலை, காந்தி சிலை வரை வழக்கம்போல் செல்லலாம். அதே வேளையில் போா் நினைவிடத்திலிருந்து திரு.வி.க. பாலம் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. மாறாக கொடிமரச் சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டு, வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
ஆா்.கே. சாலையிலிருந்து காந்தி சிலை நோக்கிவரும் வாகனங்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பிவிடப்படும். அந்த வாகனங்கள் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு, ஆா்.கே. மடம் சாலை வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம்.
எல்பி சாலை - எஸ்பி சாலை சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பெசன்ட் அவென்யூ சாலையை நோக்கி அனுமதிக்கப்படாது. மாறாக எல்பி சாலை, சாஸ்திரி நகா், திருவான்மியூா் சிக்னல் வழியாக வாகனங்கள் தங்களது இலக்கை சென்றடையலாம்.
காந்தி மண்டபத்திலிருந்து வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. அந்த வாகனங்கள் எல்பி சாலை, சாஸ்திரி நகா், திருவான்மியூா் சிக்னல் வழியாக தங்களது இலக்கை சென்றடையலாம். பெசன்ட் நகா் 7-ஆவது அவென்யூவில் இருந்துவரும் வாகனங்கள் எலியட்ஸ் கடற்கரை நோக்கி செல்ல அனுமதிக்கப்படாமல், எம்ஜி சாலையை நோக்கி திருப்பிவிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.