புலியகுளம் முந்தி விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு புலியகுளம் விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
2025ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கலை கட்டியது.
கோவை மாநகரிலும் பல்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்று அதிகாலையிலிருந்து கோவையில் பல்வேறு கோயில்களில் மக்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் பிரசித்தி பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை உள்ள புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
அருகம்புல் மாலை, 108 தேங்காய்களால் ஆன மாலை மற்றும் புஷ்ப மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகரைப் பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.