2024 - ரூ. 650 கோடி நஷ்டத்தைச் சந்தித்த மலையாளத் திரையுலகம்!
மலையாளத் திரையுலகில் சில வெற்றிப் படங்களைத் தவிர்த்து பெரும்பாலான படங்கள் இந்த ஆண்டு தோல்வியடைந்ததால் ரூ. 650 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கேரள திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் இந்த ஆண்டில் மட்டும் 206 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு வெளியாகின. அவற்றில் மஞ்ஞும்மல் பாய்ஸ், ஆவேஷம், ஆடு ஜீவிதம், பிரேமலு போன்ற திரைப்படங்கள் மலையாளத் திரையுலகம் தாண்டி இந்திய அளவில் கவனம் ஈர்த்து நல்ல வசூலைப் பெற்றன.
இதுகுறித்துப் பேசிய மலையாளத் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் ராகேஷ், “இந்த ஆண்டில் 199 புதிய படங்களும், 5 ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களும் வெளியாகின. இந்தப் படங்களுக்கு மொத்தமாக ரூ. 1,000 கோடி வரை செலவு செய்யப்பட்டது. ஆனால், இவற்றில் வெறும் 26 படங்கள் மட்டுமே ரூ. 300 முதல் 350 கோடி வரை வசூலை ஈட்டியது.
இதையும் படிக்க | 2024 - சிறந்த மலையாளப் படங்கள்!
இதனால், ரூ. 650 முதல் 700 கோடி வரை மலையாளத் திரையுலகிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் நடிகர்கள் உள்பட அனைத்து பங்குதாரர்களும் மலையாளத் திரையுலகில் கடுமையான நிதி ஒழுங்கை கடைபிடிக்கவேண்டும்” என்றார்.
அவர் கூறியதன்படி இந்த ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படங்களில் 26 படங்கள் மட்டுமே சூப்பர் ஹிட், ஹிட், ஆவரேஜ் ஹிட் போன்ற வகைமைகளுக்குள் வந்துள்ளன. மற்ற படங்கள் பெரியளவில் சோபிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
கடந்தாண்டும் 200-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இதே நிதி நிலைமை இருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஒடிடி விற்பனை குறித்து கேட்டபோது, “ஓடிடியில் பெரும்பாலான படங்கள் நல்ல விலைக்கு விற்கப்படுவதில்லை. திரையரங்கில் அவற்றின் வசூலைப் பொறுத்தே அவை ஒடிடிக்கு வாங்கப்படுகின்றன.
தயாரிப்பாளர்கள் கொடுத்த மதிப்பீட்டின் அடிப்படையில் சங்கம் இந்த புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளது. இது திரைப்படத் தயாரிப்பில் ஏற்படும் செலவுகளுக்கு ஏறக்குறைய நெருக்கமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
மேலும், “நடிகர்களின் சம்பளம் அதிகரித்து வருவதால், செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தயாரிப்பாளர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. திரைத்துறையை சிறப்பாக நடத்த தயாரிப்பாளர்களுடன் அவர்கள் ஒத்துழைக்க முன்வர வேண்டும்.
இதையும் படிக்க | மோகன்லாலின் பரோஸ் வணிக தோல்வி!
வெளியாகும் அனைத்து படங்களுக்கும் செல்வதை விட படத்தின் உள்ளடக்கமும் தரமும் கொண்ட படங்களை மட்டுமே பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.
வரும் ஆண்டில் மலையாளத் திரையுலகில் மேலும் பல சாதனைகளைச் செய்யும் வகையில், மேம்பட்ட நிதி நிர்வாகத்துடன் திரைத் துறையை நடத்த சினிமாவில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
முந்தைய ஆண்டுகளுடன் ஓப்பிடுகையில் கேரளத்தில் இந்த ஆண்டில் வெளியான படங்கள் கேரளத்தைத் தாண்டியும் சிறப்பான வசூலை ஈட்டிய நிலையில், மலையாளத் திரையுலகம் நஷ்டத்தில் இருப்பதாகவே தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.