மகாராஷ்டிரா கடற்கரை: மாட்டு வண்டியில் கட்டி இழுக்கப்பட்ட ஃபெராரி கார்... வைரலான வீடியோ!
மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக் நகரம் கடற்கரைப்பகுதியாகும். இங்கு பாலிவுட் பிரபலங்களுக்கு பண்ணை வீடுகள் இருக்கிறது. விடுமுறை நாட்களை கொண்டாட பாலிவுட் பிரபலங்கள் அலிபாக் பண்ணை வீடுகளுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் விடுமுறையை கழிக்க படகு மூலம் அலிபாக் செல்வது வழக்கம். மும்பையை சேர்ந்த இரண்டு பேர் தங்களது ஃபெராரி ரக காருடன் அலிபாக்கிற்கு சென்றனர். அலிபாக்கில் உள்ள ரேவ்தண்டா கடற்கரைக்கு அவர்கள் சென்றனர். அங்கு அவர்கள் காலை நேரத்தில் தங்களது காரின் மேற்பகுதியை திறந்து வைத்தபடி கடற்கரை மணலில் காரை ஓட்டினர். ஆனால் அவர்களின் கார் கடற்கரை மணலில் சிக்கிக்கொண்டது. அங்கிருந்து காரை எடுக்க எவ்வளவோ முயற்சி செய்தனர். அவர்களுக்கு சுற்றுலாவிற்கு வந்தவர்களும் உதவி செய்தனர்.
அப்படி இருந்தும் காரை வெளியில் எடுக்க முடியவில்லை. இறுதியில் மாட்டு வண்டி ஒன்றை கொண்டு வந்தனர். மாட்டு வண்டியில் காரை கயிற்றால் கட்டி இழுத்தனர். பொதுமக்களும் சேர்ந்து காரை தள்ளினர். இறுதியில் மணலில் இருந்து கார் வெளியில் வந்தது. இக்காட்சியை அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் தங்களது மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். மணலில் இருந்து மாட்டு வண்டியின் துணையோடு காரை வெளியில் எடுத்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலாக பரவி இருக்கிறது. அலிபாக் கடற்கரையில் கார்களை ஓட்ட போலீஸார் தடை விதித்துள்ளனர். ஆனாலும் அதனை மீறி சிலர் கார் ஓட்டுகின்றனர்.