வீட்டில் எந்தெந்த மரங்களை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது?
இந்த பிரபஞ்சத்தில் உள்ள இயற்கை என்பது முக்கியமான நம்முடைய பிராண சக்தி. பச்சை பசேலென்ற மரம், செடி, மற்றும் கொடிகள் தான் நம்முடைய இயற்கையின் அழகிய ஆபரணங்கள். ஜாதகத்தில் பச்சை என்பது புதன் என்றும் திருமாலின் அழகைக் குறிக்கும். இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தத்தைக் குறைக்கச் சரியான மருந்து கண்ணுக்குக் குளுமையான இயற்கை சூழல் மிக்க பகுதிக்குச் செல்வது. இவை நம் மனதிற்கும் அழுத்தத்தைக் குறைத்து, சுகத்தையும் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
வாஸ்து குறைபாடுகளை நீக்க வழி
ஒரு மனையின் வடக்கு கிழக்குப் பகுதியில் அதிக காலியிடம் வைத்துத்தான் கட்ட வேண்டும் இது தெற்கு மேற்கு விட வடக்கு கிழக்கு அதிகமாக இருக்க வேண்டும். நாம் வீடு கட்டுவதற்கு முன்பே நமக்கு உபயோகமான அழகான செடிகொடிகளை வைக்கத் திட்டமிட்டு வாஸ்துக்கு ஏற்றார் போல வீட்டைக் கட்ட வேண்டும். ஒரு வீட்டிற்குச் செல்லும் பொழுது மரம், செடி கொடிகள் நம் கண்ணுக்குக் குளிர்ச்சியாகவும், சந்தோஷத்தையும் தரும். நம்மால் முடிந்த நல்ல ஆக்சிஜன் தரும் செடிகளை வைத்து அவரவர் வீட்டில் உள்ள எதிர்மறையை அகற்றி நேர்மறை ஆற்றலைக் கொண்டுவருவதால் வாஸ்து குறைபாடு தீரும். மரம் நம்முடைய பூமாதேவியின் மண் மற்றும் மனித வளத்தையும் மேம்படுத்த உதவும். நாம் ஒரு மரத்தை வெட்டினால் ஒரு உயிரைக் கொல்வதற்குச் சமம். ஒவ்வொருவரும் மரத்தைக் கோயிலில், அவரவர் பெரிய தோட்டத்தில், வீட்டின் அருகாமையில் நடுவது, மற்றும் அவ்வப்போது அந்த உயிருள்ள ஜீவனுக்கு தண்ணீர் ஊற்றுவது என்பது அன்னதானத்திற்கு நிகரானது. இதனால் நம் கர்மா சிறிதேனும் குறைக்க உதவும். வாஸ்து முறைப்படி எந்தெந்த திசையில் எந்தெந்த மரம் செடி வைப்பது என்பதை வாஸ்து ஜோதிடம் மூலம் உள்ளாந்து பார்க்க வேண்டும்.
வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு திசையில் உயரம் குறைவான பழ செடி வகைகள், துளசி, ரோஸ்மேரி, செம்பருத்தி, விஷமில்லா செடிகள், கற்பூரவள்ளி, கீரை, தக்காளி, புதினா, மருதாணி, கருவேப்பிலை கொத்தமல்லி, வீட்டுக்குத் தேவையான சிறு சிறு மருத்துவ செடிகள் மற்றும் பணத்தையும் குலதெய்வத்தை வசியம் செய்யும் செடிகள் வைக்கலாம். குலதெய்வம் வசியம் செடிகள்: மாதுளை, வெற்றிலை, மஞ்சள், நாயுருவி, பவளமல்லி, பிரம்ம கமலம், தொட்டா சிணுங்கி, திருநீற்றுப் பச்சை மற்றும் துளசி வகைகள் செடிகளை வீட்டிற்கு முன்புறம் வைப்பது அவரவர் குலதெய்வத்தை வசியம் செய்ய உதவும். குருசாமியைத் தேடுபவர்கள் இந்த செடிகளை வணங்கி வேண்டிக் கொண்டால், பிரபஞ்ச சக்தி மூலம் நம் குலதெய்வம் வீட்டிற்கு வரும்.
கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகள் விலக கற்றாழை செடி வளர்க்கலாம். முக்கியமாக வடகிழக்கு மூலையில் உயரமான மரமோ அல்லது பளு அதிகமாக துளசி மாடமோ கட்டக்கூடாது. வடக்கு கிழக்கு மூலையில் பெரிய, உயரமான மரங்களை வைத்தால் தோஷத்தை அதிகம் ஏற்படுத்தும். வீட்டிற்குள் வளர்க்கும் செடிகளான மணி பிளான்ட், மூங்கில் மற்றும் அதிக பிராண வாயு தரும் சிறு செடி கொடிகளை வைக்கலாம். ஆற்றல் மிக்க தாவரங்கள் நம்முடைய கோரிக்கையைப் பிரபஞ்சம் வழியாக நிறைவேற்றும் ஆற்றல் கொண்டது.
பணத்தை ஈர்க்கும் மற்றும் அதிர்ஷ்டம் தரும் செடிகள் வைப்பது சிறந்தது. உதாரணமாக சுக்கிரன் ஆதிக்கம் கொண்ட அத்தி தென்கிழக்கு மூலையில் வைப்பது சிறப்பு. கடவுளுக்கு விசேஷமான வில்வத்தை வீட்டிற்குத் தள்ளி வெளியில் தெற்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில் வைத்து வணங்குவது நன்று. இது தவிரப் பணத்தை ஈர்க்கும் பூ வகைகள், மல்லி, மாதுளை, சங்குப்பூ, வாடாமல்லி, மந்தாரை, நித்யமல்லி, மருதாணி மற்றும் நேர்மறை ஏற்படுத்தும் பூக்களை வைக்கலாம். வடகிழக்கில் அனைத்து குளிர்ச்சியான அழகான செடிகளை வைக்கலாம். வடமேற்கில் நந்தியாவட்டை வைக்கலாம். வீட்டுக்கு அருகில் முக்கியமாக. கிழக்கு மற்றும் தென்கிழக்கு வாஸ்து பகுதியில் நேர்மறை மிக்க மூங்கில் செடி வைக்கலாம்.
தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சிறிய, உயரமான அல்லது பெரிய மரங்களை வைக்கலாம். இந்த மரங்கள் உங்கள் வீட்டைப் பாதிக்காமல் இருக்க வேண்டும். இங்கு காம்பௌன்ட் சுவரிலும் செடிகளை வைக்கலாம். தெய்வக்கனி என்று சொல்லும் எலுமிச்சை, தென்னை, மா, வேம்பு, கொய்யா, ஜாதிக்காய், வெந்தயம், வாழை, முருங்கை, செண்பகம், மரிக்கொழுந்து, புனுகு, பாக்கு, மருதாணி, கருவேப்பிலை, நொச்சி மற்றும் வாசனை மிக்க செடிகளை வளர்க்கலாம். வீட்டில் உள்ள சிறு சிறு பிரச்னைகள் தீர்வுக்கு தென்னை மரம் இரண்டாக வைத்தால் நன்று, ஆனால் இது வடகிழக்கில் வைத்துவிடக்கூடாது. வீட்டில் கரையான் வராமல் இருக்க வேண்டுமென்றால் வேப்பமரம் வைக்கலாம். வீட்டைச் சுற்றி நமக்கு உபயோகமான, மருத்துவ குணம் கொண்ட முள் மற்றும் பால் இல்லாத மென்மையான மற்றும் அடர்த்தி குறைவான செடிகள் எல்லா திசைகளிலும் வைக்கலாம் என்பது வாஸ்துவின் பொது விதி.
முக்கியமாக அதிக வேரூன்றிப் படரக்கூடிய மரங்கள் மற்றும் வீட்டையே முழுமையாக மறைக்கும் நிழல் கொண்ட மரம் வளர்க்கக்கூடாது. எடுத்துக்காட்டாக அதிக ஆக்சிஜன் தரும் மரங்கள் ஆலமரம், அரசமரம். இவைகள் நல்லது என்று நாம் வளர்க்கும்பொழுது, அது வீட்டை அசைத்துப் பார்க்கும் தன்மை கொண்டது. எந்த மரமும் முதலில் வீட்டைப் பாதிக்கக்கூடாது அங்கு வாழும் மனிதர்களுக்கு பிரச்னை தரா வண்ணம் இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக வீட்டின் முன்பு பலமற்ற முருங்கை மரம் வைத்தால், அது வளர வளர அதிக நீண்ட கிளையுடன் இருக்கும், அவை மழைக்காலங்களில் நம் குழந்தைகள் மேலே விழுந்து விடும். அதனால் அந்த மரத்தை வீட்டிற்கு முன்புறம் வைக்காமல், பின்புறம் வளர்க்கலாம். அதற்கு அடுத்து புளிய மரம் வீட்டில் வளர்க்க மாட்டார்கள். அதற்கு காரணம் இரவில் புளியமரம் அதிக கார்பன்டை ஆக்சைடை வெளியேவிடும்.
வைக்கக்கூடாத மரங்கள்: பூவரசம், பேரீச்சை, பருத்தி, பனை, இலந்தை, நெல்லி, பப்பாளி அகத்தி, எட்டி, விஷக்காய் மரங்கள், தாழம்பூ, செண்பகம், போன்சாய் சீக்கிரம் காய்ந்து போகும் மரங்களை வளர்க்கக் கூடாது. வளர்க்கக் கூடாத மரங்களைக் கோயில்களில் அல்லது தனியான தோட்டத்தில் வாஸ்துவிற்கு ஏற்ற திசையில் வைக்கலாம். கள்ளிச் செடிகள் வைப்பதனால் அதைப் பார்க்கும் பொழுது மன அழுத்தமும் எதிர்மறை ஆற்றலும் ஏற்படுத்தும். அதனால் இந்த செடிகளையும் தவிர்ப்பது நல்லது.
மனைக்கு ஆகா விருட்சங்கள்
பருத்தி, அகத்தி, பனை, நாவல், அத்தி, எருக்கு, வெள்ளெருக்கு, புளியமரம், கருவேலன், முருங்கை, கல்யாண முருங்கை, கள்ளி, கருவூமத்தை, இலவம், வில்வம், உருத்திராட்சம், உதிரவேங்கை என்று 17 வகை மரங்களை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று அகத்தியர் புனசுருட்டு 500 கூறியுள்ளார். முக்கிய மருத்துவ குணம் கொண்ட அனைத்து தாவரங்களையும் வளர்ப்பது நன்று. இவற்றில் ஒருசில மருத்துவக் குணம் கொண்ட செடிகளைத் தனியாக வளர்க்கலாம் என்பது ஒருசிலர் கூற்று.
வீட்டில் மரம், செடி, கொடிகள் வளர்க்கும் பொழுது அந்த மனையில் உள்ள மிகப்பெரிய வாஸ்து தோஷ குறைபாட்டையும் மற்றும் ஒருவரின் கர்மாவையையும் குறைக்கும். அவரவர் நட்சத்திரக்காரர்களுக்குரிய மரங்களைக் கோயிலில் நடுவது சிறப்பு. ஒவ்வொருவரும் அவரவர் இடத்திற்கு ஏற்ப நமக்கு உபயோகமான மரங்களையும் செடிகளையும் வளர்ப்பது என்பது அவரவரின் முக்கிய கடமையாகும். வீட்டில் மலரும் பூக்களையும், இலைகளையும் பூஜைக்கு உபயோகப்படுத்துவது மிகவும் சிறந்தது. மரம் செடி கொடிகளோடு பேசும்பொழுது மனபாரம் குறையும், நாம் போகும் பாதைக்கான சரியான வழியையும் நமக்குக் காட்டும் என்பது நிதர்சனமான உண்மை.