ரயில் மோதியதில் யானை படுகாயம்!
திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை ஒன்று ரயில் மோதியதில் படுகாயமடைந்துள்ளது.
அகரத்தலாவிலிருந்து தர்மாங்கர் நோக்கி நேற்று (டிச.28) இரவு, பயணிகள் ரயில் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் சம்பாலை அருகில் வந்தப்போது அங்கு தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை மீது மோதியது.
இதில் அந்த யானைக்கு பின்னங்கால்கள் இரண்டும் முறிந்து படுகாயமடைந்ததில் அந்த யானை நகர முடியாமல் வேதனைக்குள்ளாகி வருகின்றது.
தகவலறிந்து அங்கு விரைந்த வனத்துறையினர் மற்றும் திரிபுரா மாநில கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் அடங்கிய குழுவொன்று படுகாயமடைந்த யானைக்குத் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: 2 மாநிலங்களைக் கடந்த பெண் புலியைப் பிடிப்பதில் சிரமம்?
மேலும், சம்பாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் இருப்பதினால் அந்த வழியாக கடக்கும் ரயில்கள் 20 கி.மீ வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் இதேப்போல் அப்பகுதியில் ஒரு யானை தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது ரயில் மோதி பலியானதைத் தொடர்ந்து இந்த விதிமுறை கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு சென்ற ரயில் 50 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டதினால் இந்த விபத்து நிகழ்திருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.