மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: பொள்ளாச்சி வி.ஜெயராமன் ...
Share Market : `2025' பங்குச்சந்தையும்... போக்கை நிர்ணயிக்கும் `5' காரணிகளும்! - விளக்கும் நிபுணர்!
'2025-ம் ஆண்டு எப்படி இருக்கப்போகிறது?' என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் தற்போது எழுந்திருக்கும். ஆரம்பத்தில் நன்கு சென்றுகொண்டிருந்த பங்குச்சந்தை, கடந்த சில மாதங்களாக இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. அதனால்தான், இந்த கட்டுரையின் தொடக்கத்தில் கேட்கப்பட்டிருக்கும் கேள்வி தற்போது முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும்.
'இந்த ஆண்டு பங்குச்சந்தை எப்படி இருக்கலாம்?', 'எதில் முதலீடு செய்யலாம்?' போன்றவற்றை விளக்குகிறார் Equinomics Research நிறுவனர் மற்றும் பங்குச்சந்தை நிபுணர் G.சொக்கலிங்கம்.
"2024-ம் ஆண்டு செப்டம்பர் வரை, சென்செக்ஸ் 18 சதவிகிதம் வரையிலும், அதற்கு மேலும்கூட சென்றது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 8 சதவிகிதத்திற்கு இறங்கியிருக்கிறது.
ஆனால், இன்னொரு பக்கம், ஸ்மால் கேப்பை பார்த்தால் இன்று 28 சதவிகிதமாக முடிந்திருக்கிறது. பங்குச்சந்தை வளர்ச்சி ஒருகட்டத்தில் குறைந்தாலும், இந்த ஆண்டு ஸ்மால் கேப் பெரும்பாலும் நல்ல வளர்ச்சி பாதையிலேயே சென்றுள்ளது.
இதுதான் 2024-ம் ஆண்டின் நிலை. இதை வைத்து தான் 2025-ம் ஆண்டு பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
5 காரணிகள்
மத்திய பட்ஜெட், அமெரிக்க ஃபெடரல் வங்கியின் வட்டி விதிப்பு, உலக அளவிலான போர்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்திய வங்கிகள் வட்டி விகித குறைப்பு ஆகிய 5 காரணிகளைப் பொறுத்து இந்த ஆண்டின் பங்குச்சந்தை வளர்ச்சி உள்ளது.
1. மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்டை பொறுத்தவரை பங்குச்சந்தை மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்ற திட்டங்கள்தான் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2. அமெரிக்க ஃபெடரல் வங்கி
அமெரிக்க ஃபெடரல் வங்கி ஆண்டின் தொடக்கத்தில் அல்லாமல் 3 - 4 மாதங்கள் கழித்து வட்டி குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
3. உலக அளவிலான போர்கள்
உலக அளவிலான போர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்துகொண்டிருக்கின்றன. போர்கள் கடுமையாக நடந்துகொண்டிருந்த போதும், பங்குச்சந்தை உச்சத்தில் இருந்த சம்பவமும் நடந்தது. ஆக, போர் சூழல்களையும் தாண்டி சந்தை நன்கு இயங்க கற்றுக்கொண்டது. அதனால் போரினால் பெரிய மாற்றம் இருக்காது. ஒருவேளை போர் உச்சம் அடைந்தாலோ, உலகின் பெரிய நாடுகள் இந்தப் போர்களில் கலந்துகொண்டாலோ பங்குச்சந்தையில் மாற்றங்கள் நிகழலாம்.
4. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி
கடந்த ஆண்டு (2024) மழைப்பொழிவு நன்றாக இருந்ததால், இந்த ஆண்டு சாகுபடிகள் நன்றாக இருக்கும். இதனால், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியும், மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும்.
5. இந்திய வங்கிகளின் வட்டி விகித குறைப்பு
இந்தியாவில் வட்டி விகிதம் குறைப்பதற்கு அமெரிக்காவை போல, இன்னும் 3 - 4 மாதங்கள் ஆகலாம். ஆனால், ஆண்டின் முதல் பாதியிலேயே கட்டாயம் குறைப்பு இருக்கும்.
மேலே கூறியிருக்கும் 5 காரணிகளை வைத்து பார்க்கும்போது, முதல் 6 மாதங்களில் பங்குச்சந்தை வளர்ச்சி அவ்வளவாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனால், வளர்ச்சி இருக்கும்.
குறிப்பிட்ட துறைகள்
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியில் இருக்கும் ஆட்டோமொபைல், ஐ.டி, பேங்கிங் போன்ற குறிப்பிட்ட துறைகளில் சிங்கிள் டிஜிட் வளர்ச்சி தான் தற்போது இருக்கிறது. இதனால், ஆண்டின் முதல் பாதியில் இந்தத் துறைகள் பெரிதாக வளர்ச்சி பெறாது.
ஆக, மொத்தமாக பார்க்கும்போது பங்குச்சந்தையில் இந்த ஆண்டு 10-ல் இருந்து 12 சதவிகிதம் வரை லாபம் இருக்கலாம். ஆண்டின் இரண்டாம் பாதியில், இந்த நிலை மாறி பங்குச்சந்தையின் வளர்ச்சி இதற்கு மேலும் இருக்கலாம். ஆனால், அதை இப்போதே கூறமுடியாது.
வரலாற்றிலேயே முதல்முறையாக...
இந்திய வரலாற்றிலேயே முதல்முறை நான்கு ஆண்டுகளாக ஸ்மால் கேப் பங்குகள் நல்ல வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சென்செக்ஸ், நிப்டியை விட ஸ்மால் கேப் பங்குகள் நன்கு செயல்பட்டு கொண்டிருக்கிறது.
வரலாற்று ரீதியாக பார்க்கும்போது, இரண்டு மூன்று வருடங்களில் ஸ்மால் கேப் பங்குகள் பெரிய அளவிலான மாற்றங்களை காணும். ஆனால், அது இன்னும் நடக்கவில்லை. அதனால், 2025-ம் ஆண்டிலும் ஸ்மால் கேப் பங்குகள் நன்றாக செயல்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.
மிட் கேப் பங்குகளும் இந்த ஆண்டு நன்கு செயல்படும். ஆனால், ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப்பில் முதலீடு செய்யும்போது, 'Over Valued Cap'-ல் முதலீடு செய்யாமல், 'Quality' - பங்குகளில் முதலீடு செய்வது நல்லது.
உஷார்!
கடந்த இரண்டு வாரங்களில் 20 லட்சம் புதிய முதலீட்டாளர்கள் சந்தைக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களது வருகை அவர்களுக்கும், சந்தைக்கும் மிக நல்லது. ஆனால், அவர்கள் கவனமாக உஷாராக முதலீடு செய்வது நல்லது. அவர்கள் எடுத்த உடனேயே பங்குச்சந்தையில் முதலீடு செய்யாமல், மியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுக்கலாம். பங்குச்சந்தையிலும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் வெவ்வேறு துறைகளில் 12 - 20 பங்குகளில் முதலீடு செய்யலாம்...50 - 60 சதவிகிதம் ஸ்மால் கேப் பங்குகளில் முதலீடு செய்யலாம்" என்று விளக்கினார்.
ஹேப்பி நியூ இயர் :)