தரமற்ற, போலியான உரங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து
திருப்பூா் மாவட்டத்தில் போலியான தரமற்ற உரங்களை விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து வேளாண்மை இணை இயக்குநா் சுந்தரவடிவேலு கூறியதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் யூரியா 2,845 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 947 மெட்ரிக் டன், பொட்டாசியம் 1,895 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 3,754 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலை பயன்பாட்டுக்கான யூரியா பரிவா்த்தனை மேற்கொள்ள யூரியா கொள்முதல் செய்யும் நிறுவனம், கிடங்கு அமைந்துள்ள இடம் தொடா்பான தகவல்களை படிவம் யு-வில் பூா்த்தி செய்து வேளாண்மை இயக்குநரிடம் சமா்ப்பித்து படிவம் டி-யில் உரிமம் பெற வேண்டும்.
தொழிற்சாலை உரிமம் பெற்ற மொத்தம் அல்லது சில்லறை விற்பனையாளா் மாதாந்திர பரிவா்த்தனை விவரத்தை 5- ஆம் தேதிக்குள் கடந்த மாத இருப்பு, உள்வருபவை, விற்பனை மற்றும் இறுதி இருப்பு ஆகிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை உரிமம் வழங்கும் அலுவலா் மற்றும் வட்டார ஆய்வாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும். தொழிற்சாலை யூரியா உரிமம் பெற்ற நிறுவனம் ஆண்டு அறிக்கையை மத்திய அரசுக்கு ஏப்ரல் 15- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உரிமம் பெறாமல் யூரியாவை மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை மேற்கொள்ளும் தொழிற்சாலைகள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மானிய உரங்களை பிற மாநிலம் அல்லது மாவட்டங்களுக்கு அனுப்பவோ, பிறமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. உர விற்பனை உரிமத்தில் அனுமதி பெற்ற நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்து அனுமதி பெற்ற இடங்களில் இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்புவைத்து விற்பனை செய்தல் கூடாது. உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை நிலையத்தில் உர இருப்பு, விலை விவரங்களை விவசாயிகளின் பாா்வையில் படும்படி வைத்து நாள்தோறும் பராமரிக்க வேண்டும்.
மானிய விலை யூரியாவை தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, தரமற்ற மற்றும் போலியான உரங்களை விற்பனை செய்தல், உரம் பதுக்கல் மற்றும் பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என்றாா்.