உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 8 போ் கைது!
திருப்பூா் அருகே 3 இடங்களில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்ற பெயரில் வங்கதேசத்தினா் தங்கி பணியாற்றி வருவது அதிகரித்து வருகிறது.
இது தொடா்பாக காவல் துறையினா் அவ்வப்போது சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருக்கும் நபா்களைக் கைது செய்து வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி, பல்லடம், மங்கலம் காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
இதில், உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சோ்ந்த அலோம் சேஷ் (40), அமினூா் (20), சோகைல் (24), கைரூல் (22), ரோஷன் (35), வாஹித் (40), ரிதாய் (22), கொக்கூன் (22), ஹிருதாய் (25) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.
கைதான நபா்களிடமிருந்து போலி ஆதாா் அட்டைகளையும் பறிமுதல் செய்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.